போர்க்களத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை விடுவிக்க ரஷியாவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது- வெளியுறவு அமைச்சகம்
ரஷிய ராணுவத்தில் பணிபுரியும் இந்தியர் அனைவரையும் விடுவிக்க வலியுறுத்துவோம் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.;
புதுடெல்லி,
உக்ரைனுக்கு எதிராக போரிட்டு வரும் ரஷிய ராணுவத்தில் இந்தியர்களும் இணைந்திருப்பது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஒரு சிலர் கொல்லப்பட்டு இருந்தனர். எனவே ரஷிய ராணுவத்தில் பணியாற்றி வந்த இந்தியர்களை விடுவிக்க வேண்டும் என ரஷியாவிடம் இந்தியா கேட்டுக்கொண்டது. அதன்படி 40-க்கும் மேற்பட்டோர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். எனினும் சுமார் 20 பேர் வரை அங்கே இன்னும் இருக்கலாம் என மத்திய அரசு தெரிவித்து இருந்தது. அவர்களையும் மீட்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தநிலையில் கேரளாவை சேர்ந்த எலெக்ட்ரீஷியன் ஒருவர் உக்ரைனுடனான போரில் கொல்லப்பட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து இந்தியர்களை விடுவிக்குமாறு மத்திய அரசு மீண்டும் ரஷியாவை கேட்டுக்கொண்டு உள்ளது.இது தொடர்பாக வெளியுறவு செய்தித்தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ரஷியாவில் உயிரிழந்த கேரள மாநிலத்தவரின் உடலை விரைவில் இந்தியா கொண்டு வரும் நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளோம். இந்த விவகாரத்தை ரஷியாவுடன் தீவிரமாக எடுத்துக்கூறியதுடன், மீதமுள்ள இந்தியர்களையும் உடனடியாக திருப்பி அனுப்ப வலியுறுத்தி உள்ளோம்' என குறிப்பிட்டு உள்ளார்.