இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றார் தமிழகத்தை சேர்ந்த வி.நாராயணன்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த வி. நாராயணன் பொறுப்பேற்றுக்கொண்டார்.;

Update:2025-01-14 21:57 IST

சென்னை,

இஸ்ரோவின் தலைவராக தற்போது சோம்நாத் உள்ளார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைந்தநிலையில், இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த வி. நாராயணனை மத்திய அரசின் நியமனக்குழு நியமனம் செய்தது.

இந்நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய தலைவராக வி. நாராயணன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதுதொடர்பாக இஸ்ரோ தனது எக்ஸ் வலைதளத்தில், "புகழ்பெற்ற விஞ்ஞானி (அபெக்ஸ் கிரேடு) டாக்டர் வி. நாராயணன், விண்வெளித் துறை செயலாளர், விண்வெளி ஆணையத் தலைவர் மற்றும் இஸ்ரோவின் தலைவர் பதவிகளை ஏற்றுக்கொண்டார். இது இந்தியாவின் விண்வெளித் திட்டத்திற்கான ஒரு முக்கிய தலைமைத்துவ மாற்றத்தைக் குறிக்கிறது. இஸ்ரோவில் கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக பணியாற்றி வரும் அவரது தலைமை, இந்தியாவின் லட்சிய விண்வெளிப் பயணங்களுக்கு வழிகாட்ட உள்ளது" என்று அதில் பதிவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் வி.நாராயணன். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள திரவ உந்து அமைப்பு மையத்தின் (எல்பிஎஸ்சி) இயக்குநராக பணியாற்றியுள்ளார். கரக்பூர் ஐஐடி-யில் பட்டம் பெற்ற இவர், 1984-ம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்தார். இந்திய விண்வெளித் துறையில் 40 ஆண்டு அனுபவமுள்ள ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியாக இருக்கிறார். ராக்கெட் மற்றும் விண்கல திரவ உந்து விசையில் நிபுணத்துவம் பெற்றவர்.

தொடக்க காலத்தில், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் ஒலி ராக்கெட்டுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஏவுதளம் மற்றும் துருவ செயற்கைக்கோள் ஏவுதளம் ஆகியவற்றின் திட உந்துவிசை பகுதியில் பணியாற்றினார். இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி57, சூரிய ஆய்வுக்கான ஆதித்யா எல்1 திட்டம், ஜிஎஸ்எல்வி மாக்-3 வகை ஏவுகணைக்கான 'சிஇ20 கிரையோஜெனிக்' இன்ஜின் தயாரிப்பு, சந்திரயான் 2 மற்றும் 3 உள்ளிட்ட பல திட்டங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளார்.




Tags:    

மேலும் செய்திகள்