மம்தா பானர்ஜியுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி டாக்டர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை

பெண் மருத்துவர் விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜி மற்றும் மருத்துவர் குழு இடையே பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கி உள்ளது.

Update: 2024-09-16 16:40 GMT

கோப்புப்படம்

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த மாதம் 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கை போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவையடுத்து, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் என கோரியும், சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ தொழிலாளர்களின் நலன்களுக்காக 10 உறுப்பினர்கள் கொண்ட தேசிய பணி குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு அமைத்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் கடந்த செவ்வாய் கிழமை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனால், முதலில் எங்களுடைய கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும். அதன்பின்னரே, எங்களுடைய பணிநிறுத்தம் பற்றி பரிசீலனை செய்வோம். இல்லையெனில், மருத்துவமனைகளில் இன்று காணப்படும் நிலைமைக்கு அரசே பொறுப்பேற்க நேரிடும் என டாக்டர்கள் கூறினர்.

இதற்கிடையே மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தும் மருத்துவர்களை பேச்சுவார்த்தை அழைத்தார். எனினும், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, மருத்துவர்களும் அதற்கு தயாரான சூழலில், கடைசி நிமிடங்களில் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இந்த நிலையில், மாநில அரசு சார்பில் பேச்சுவார்த்தைக்கு ஐந்தாவது மற்றும் கடைசி முறை அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் மருத்துவர்கள் இன்று மாலை மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இல்லத்திற்கு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள சென்றுள்ளனர்.

பேச்சுவார்த்தையில் 30 பேர் அடங்கிய மருத்துவர்கள் குழு மம்தா பானர்ஜி இல்லத்திற்கு இன்று மாலை 6.20 மணி அளவில் வந்தனர். மருத்துவர்கள் மற்றும் மேற்கு வங்காள முதல்-மந்திரி இடையிலான பேச்சுவார்த்தை மாலை 5 மணிக்கு துவங்க இருந்த நிலையில், இரவு 7 மணிக்கு தான் பேச்சுவார்த்தை துவங்கியது. இந்த பேச்சுவார்த்தையில் நடைபெறும் வாதங்களை பதிவு செய்ய மருத்துவர்கள் குழு சார்பில் சுருக்கெழுத்தாளர்களும் உடன் சென்றுள்ளனர்.

சுருக்கெழுத்தாளர்கள் பதிவு செய்யும் ஆவணத்தை பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் அனைவரும் கையெழுத்திட உள்ளனர். இதுதவிர அரசு சார்பில் வீடியோ பதிவும் செய்யப்படுகிறது. பேச்சுவார்த்தைக்கு பிறகு என்ன முடிவு எடுக்கப்படும் என்பதை மருத்துவர்கள் குழு களத்தில் போராடும் மருத்துவர்களிடையே ஆலோசனை செய்த பிறகே தெரிவிக்கும் என்று முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

Tags:    

மேலும் செய்திகள்