குஜராத்தில் விசுவாசமிக்க ஊழியர்களுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக அளித்த தொழிலதிபர்

குஜராத்தில் தொழிலதிபர் ஒருவர் ரூ.1 கோடி மதிப்பிலான பென்ஸ் காரை தலா 3 ஊழியர்களுக்கு பரிசாக அளித்துள்ளார்.

Update: 2018-10-01 03:36 GMT
சூரத்,

குஜராத்தின் சூரத் நகரில் தொழிலதிபர் சவ்ஜி தோலகியா என்பவர் ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட்டர்ஸ் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இவரது நிறுவனத்தில் ஊழியர்களாக பணியாற்றி வருபவர்கள் நிலேஷ் ஜடா (வயது 40), முகேஷ் சந்த்பாரா (வயது 38) மற்றும் மகேஷ் சந்த்பாரா (வயது 43).  இவர்களுக்கு தோலகியா, மெர்சிடெஸ் பென்ஸ் ரக காரை பரிசாக அளித்து அசத்தியுள்ளார்.

இதற்காக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய பிரதேச ஆளுநர் மற்றும் குஜராத் முன்னாள் முதல் மந்திரியான ஆனந்திபென் பட்டேல் அவர்களுக்கு கார் சாவிகளை வழங்கினார்.  அப்படி என்ன செய்து விட்டனர் அந்த ஊழியர்கள் என்கிறீர்களா?

இதுபற்றி கூறும் தோலகியா, இவர்கள் 3 பேரும் தங்களது 13 அல்லது 15 வயதில் எங்களது நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தனர்.  அவர்கள் வைரங்களை எப்படி வெட்டுவது மற்றும் மெருகேற்றுவது என கற்று கொண்டனர்.

இவர்கள் இதில் நிபுணர்களாக உள்ளதுடன், மிக மூத்த மற்றும் நாட்டின் மிக நம்பிக்கைக்கு உரிய நபர்களாக உள்ளனர்.

அவர்களின் பணி மற்றும் நிறுவனத்திற்கு நம்பக தன்மையுடன் செயலாற்றியது ஆகியவற்றிற்காக அங்கீகாரம் அளிக்க வேண்டும் என நான் உணர்ந்தேன்.  அதனால் அவர்களின் நம்பக தன்மை மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றுக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்த கார்களை பரிசாக அளிப்பது என முடிவு செய்தேன் என கூறியுள்ளார்.

பல நவீன வசதிகளை உடைய இந்த கார் சூரத் நகர மதிப்பின்படி ரூ.1 கோடி விலை கொண்டது.

இதற்கு முன்பு கடந்த 2 வருடங்களுக்கு முன் தனது ஊழியர்களுக்கு 400 குடியிருப்புகள் மற்றும் 1,260 கார்களை பரிசாக அளித்து உள்ளார்.  தொடர்ந்து தனது நிறுவன ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் தோலகியா செயல்பட்டு வருகிறார்.

மேலும் செய்திகள்