காஷ்மீரில் பயங்கரவாத ஒழிப்பு முயற்சி இறுதி மூச்சு வரை தொடரும்; கவர்னர் பேச்சு

காஷ்மீரில் பயங்கரவாத ஒழிப்பு முயற்சிகள் இறுதி மூச்சு உள்ள வரை தொடரும் என கவர்னர் மனோஜ் சின்ஹா பேசியுள்ளார்.

Update: 2022-10-18 15:32 GMT



ஸ்ரீநகர்,


ஜம்மு மற்றும் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு மூன்றாண்டுகள் ஆன நிலையில், நடப்பு ஆண்டில் காஷ்மீரி பண்டிட்டுகள் மீது நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

காஷ்மீரின் சோபியான் மாவட்டம் சவுத்ரி குண்ட் பகுதியை சேர்ந்த, தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த காஷ்மீரி பண்டிட்டான பூரண் கிருஷ்ணன் பட் என்பவர் மீது கடந்த 15-ந்தேதி துப்பாக்கி சூடு நடத்தி விட்டு பயங்கரவாதிகள் தப்பி சென்றனர். இதில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்து விட்டார்.

இந்த தாக்குதல் சம்பவம் காஷ்மீரி பண்டிட்டுகள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்படுத்தி உள்ளது. இதனை கண்டித்து ஸ்ரீநகரில் உள்ள அனைத்து கட்சி ஹுரியத் அலுவலகத்தின் முன் காஷ்மீரி பண்டிட்டுகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து, ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் காஷ்மீரி பண்டிட்டுகள் கொல்லப்படுவது பற்றி துணைநிலை ஆளுனர் மனோஜ் சின்ஹா கூறும்போது, காஷ்மீர் முழுவதும் பயங்கரவாதம் ஒழிக்கப்படுவதற்கான முயற்சிகள் இறுதி மூச்சு உள்ள வரை தொடரும். இதற்கு நான் உறுதி கூறுகிறேன் என பேசியுள்ளார்.

இந்த பகுதியில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை என கொல்லப்பட்ட பண்டிட்டின் சகோதரி கூறியுள்ளார். எங்களுக்கு பக்கத்தில் வசிக்கும் முஸ்லிம்களால் கூட எங்களை பாதுகாக்க முடியாது என கூறி விட்டனர் என்று அவர் கூறியுள்ளார். இந்த படுகொலைக்கு காஷ்மீர் சுதந்திர போராளிகள் பொறுப்பேற்று கொண்டனர். இதுபோன்ற பல சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற உள்ளன என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்