மகத்துவம் நிறைந்த துளசி பூஜை

புரட்டாசி மாதம் முழுவதும் தினமும் வழிபாட்டுக்கு துளசி பயன்படுத்துவது மிகவும் நல்லது.

Update: 2024-09-23 06:22 GMT

மகா விஷ்ணுவிற்கான வழிபாட்டில் துளசி முக்கியத்தும் பெற்றுள்ளது. பெருமாள் கோவில்களில் துளசி தீர்த்தத்தையே பிரசாதமாக வழங்குகிறார்கள். துளசி ஊறிய புனித நீரானது நல்ல மருந்தாகிறது. இதனால் மனம்கூட நல்ல தூய்மை பெறும். துளசியை கார்த்திகை பவுர்ணமியில் பூஜிக்க எல்லா சித்திகளும் ஏற்படும். எப்போதும் தர்மம் செய்யும்போது ஒரு துளசி இலை வைத்தே தானம் செய்ய வேண்டும் என தர்மசாஸ்திரம் கூறுகிறது. பொருளைவிட துளசி மேன்மையானதால் துளசிதானம் கொடுக்கப்படுகிறது என்றே கூறுவர்.

துளசி தீர்த்தம் வயிறை சுத்திகரித்து ரணம் குணமடைய வழி செய்யும். மரணப் படுக்கையில் இருப்பவர்க்கு துளசித் தீர்த்தம் கொடுக்க, விஷ்ணு லோகம் போக வாய்ப்பு கிடைக்கும் என்று கூறுவார்கள். துளசிக்கு சமஸ்கிருதத்தில் 'பிருந்தா' எனப்பெயர். காடு போல் துளசி வளர்ந்திருக்கும் தலத்திற்கு பிருந்தாவனம் எனப்பெயர். இதனால்தான் துளசிக் காடாகிய பிருந்தாவனம் ராமருக்குரிய விருப்பமான தலமானது.

பூஜைக்குப் பூக்களை அர்ப்பணிக்கும்போது அன்று பூத்த மலர்களையே கீழே உதிர்வதற்கு முன்பிருக்கும் நிலையில் பறித்து பயன்படுத்த வேண்டும் என்பது நியதி. இதனால் பழைய பூ, புதிய பூ என்ற வேறுபாடுகள் உள்ளன. ஆனால் பூஜைக்குரிய துளசியில் இம்மாதிரியான நிலைகள் இல்லை. எப்போதும் புதிய நிலையைக் கொண்டது துளசி. எனவே பூஜைக்கு எப்போதும் உகந்ததாகத் துளசி கருதப்படுகிறது.

புரட்டாசி மாதம் முழுவதும் தினமும் வழிபாட்டுக்கு துளசி பயன்படுத்துவது மிக, மிக நல்லது. துளசி பூஜை செய்வதால் செல்வம் பெருகும், திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும், திருமணமான பெண்களுக்கு சுமங்கலி பாக்கியத்துடன் சுகமுடன் நீடூழி வாழ்வர் என்பது நம்பிக்கை.

வீட்டில் துளசி மாடம் அமைத்து அதற்கு விளக்கேற்றி, காலை, மாலை பூஜை செய்து மாடத்தினை வலம் வந்து வணங்க வேண்டும். துளசி மாடத்தை பூஜிக்க வேறு துளசியில் இருந்தே தழைகள் பறிக்க வேண்டும். வீட்டில் துளசிமாடம் இல்லாதவர்கள் பெருமாள் கோவிலில் உள்ள துளசி மாடத்திற்கு நெய் விளக்கேற்றி வழிபடலாம். கோவில்களில் துளசியைப் பிரசாதமாக கொடுத்தால் ஒரு தழையை காதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

துளசிச் செடிகள் அதிகமாக இருக்கின்ற வீடு மிக புனிதம் உடையதாக கருதப்படுகிறது. இதனால் யம தூதர்கள் அங்கு வர மாட்டார்கள் என்பது ஐதீகம்.

திருமணத் தடைகள் ஏற்பட்டு மன அமைதி இழப்போர், மன அமைதியற்றவர்கள், செல்வம் நிறைய அளவில் இருந்தும் நற்பணிகளைச் செய்ய முடியாத நிலையில் உள்ளோர், நல்ல எண்ணங்கள் கைகூட வேண்டுமென்று முயலுவோர், சமய பேதம் சிறிதுமின்றித் திங்கட்கிழமை தோறும் அதிகாலையில் நீராடி தூய ஆடை அணிந்து, தூய மனத்தினராய், தொட்டாற் சிணுங்கியையும் துளசியையும் ஒன்றாக வைத்து வளர்க்கும் தொட்டியை அலங்காரம் செய்து வழிபடவேண்டும். ஏதேனும் பழம் வைத்து தீபாராதனை செய்தும், கற்பூரம் ஏற்றியும் வழிபட வேண்டும். இவ்விதமாக வழிபடும்போது இருபத்தியொருமுறை அந்தத் தொட்டியைச் சுற்றி வந்து வணங்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து வழிபட்டு வந்தால் நான்காவது வார இறுதியில் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

Tags:    

மேலும் செய்திகள்