திருத்துறைப்பூண்டி: ஆகாச மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆகாச மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீயில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.;
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரங்கம் குடிச்சேத்தி பகுதியில் உள்ள பழமையான ஆலயம் ஆகாச மாரியம்மன் ஆலயம். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெறும். அவ்வகையில் இந்த வருடம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னால் காப்பு கட்டுதலுடன் பங்குனி திருவிழா தொடங்கியது.
திருவிழாவில் தினசரி சுவாமி வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலையிலிருந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும் தீப ஆராதனையும் நடைபெற்றது. 3000 மேற்பட்ட பக்தர்களுக்கு பிரமாண்ட அன்னதானம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மாலை அருள்மிகு அரங்கநாத பெருமாள் ஆலயத்தில் இருந்து செடல் காவடி, அலகு காவடி மற்றும் பால்குடங்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டு ஆகாச மாரியம்மன் ஆலயத்தில் எதிரே அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட தீக்குளியில் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஆதிரங்கம் கிராமவாசிகள் செய்திருந்தனர்.