காலந்தவறிய ஜெகநாதர் ரத யாத்திரை விவகாரம்: இஸ்கான்- பூரி கோவில் நிர்வாகம் பேச்சுவார்த்தை
இந்த ஆண்டு பூரி ஜெகநாதர் ரத யாத்திரை தொடங்கும் நாளில் உலகம் முழுவதும் ரத யாத்திரை திருவிழாவை நடத்தும்படி இஸ்கானிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.;

புவனேஸ்வர்:
ஒடிசாவின் பூரி நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜெகநாதர் ரத யாத்திரை உலக பிரசித்தி பெற்றது. இந்த ரத யாத்திரையானது இந்து நாட்காட்டியின் ஆஷாட மாதத்தில் வேத வழிகாட்டுதலின்படி குறிப்பிட்ட நாளில் நடத்தப்படும். பூரியில் கடந்த ஆண்டு ஜூலை 7-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை ரத யாத்திரை நடைபெற்றது.
பூரி நகரில் ரத யாத்திரை நடைபெறும் போது நாட்டின் பல்வேறு இடங்களிலும் ரத யாத்திரை நடத்தப்படும். இஸ்கான் அமைப்பு சார்பில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இந்த காலகட்டத்தில் ஜெகநாதர் ரத யாத்திரை நடத்தப்படும்.
வெளிநாடுகளில் இஸ்கான் நடத்தும் ஜெகநாதர் ரதயாத்திரையானது, பூரி ரத யாத்திரை மரபுகளில் இருந்து விலகி, வேதப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட நாள் அல்லாமல் வேறு நாட்களில் நடத்தப்படுகிறது. இந்து இந்துக்களின் மத உணர்வை காயப்படுத்துவதாக பூரி கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் கவலை தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நவம்பர் 9-ம் தேதி நடத்தவிருந்த ரத யாத்திரை, பக்தர்களின் எதிர்ப்பு மற்றும் பூரி மன்னரின் எதிர்ப்பைத் தொடர்ந்து கைவிடப்பட்டது.
இந்த விவகாரத்தில் கருத்தொற்றுமையை ஏற்படுத்தி, மரபுகளின் படி ஒரே நாளில் ரத யாத்திரையை நடத்துவது தொடர்பாக இஸ்கான் அமைப்புடன் பூரி ஜெகநாதர் கோவில் நிர்வாகம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. பூரி மன்னர் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் ஜெகநாதர் கோவில் நிர்வாகிகள் மற்றும் இஸ்கான் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
காலந்தவறி ரத யாத்திரையை நடத்துவது, கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளை காயப்படுத்துவதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, மரபுபடி குறிப்பிட்ட தேதியில் ரத யாத்திரையை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. எனினும், முடிவு எதுவும் எட்டப்படாமல் கூட்டம் நிறைவடைந்தது.
இதுபற்றி ஸ்ரீ ஜெகநாதர் கோவில் நிர்வாகத்தின் தலைமை நிர்வாகி அரவிந்த பதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இன்றைய சந்திப்பு சுமூகமாக நடைபெற்றது. எங்கள் கவலைகளை இஸ்கான் பிரதிநிதிகளிடம் தெரிவித்தோம். மேலும் பூரியில் நடத்தப்படும் ரத யாத்திரை அட்டவணைப்படி உலகம் முழுவதும் நடத்தும்படி கேட்டுக் கொண்டோம். இருப்பினும், கூட்டத்தில் எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை.
வேத வழிகாட்டுதல்களின்படி, இந்து நாட்காட்டியின் ஆஷாட மாதத்தில் சுக்லபட்சத்தின் இரண்டாவது மற்றும் பத்தாம் நாளுக்கு இடையில் ரத யாத்திரை நடத்தப்பட வேண்டும் என்று இஸ்கான் பிரதிநிதிகளிடம் கூறினோம். இந்த ஆண்டு ஜெகநாதர் ரத யாத்திரை ஜூன் 27-ம் தேதி தொடங்கும். அதே நாளில் உலகம் முழுவதும் ரத யாத்திரை திருவிழாவை நடத்தும்படி இஸ்கானிடம் கேட்டுக்கொண்டோம். இந்த விஷயத்தில் பக்தர்களின் மத உணர்வுகளை இஸ்கான் மதிக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இஸ்கான் பிரதிநிதி முகுந்த்தாஸ் ஜி மகராஜ் கூறும்போது, "இன்றைய பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது. மேலும் இந்த விஷயத்தில் மன்னரின் (கஜபதி மகாராஜ்) கவலையை நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்த பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த அவர் ஏற்கனவே இரண்டு முறை எங்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். இஸ்கான் நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து பேச உள்ளோம்" என்றார்.