திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் முன்னிலையில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தைத் தொடர்ந்து, ஏராளமான பெண்கள் தங்களது தாலிக் கயிற்றை புதிதாக மாற்றிக் கொண்டனர்.;

திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் பங்குனி பெருவிழா பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க பல்லக்கிலும், மாலையில் தங்க மயில் வாகனம், தங்க குதிரை வாகனம், வெள்ளி ஆட்டு கிடா வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
விழாவின் 11-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று சுப்பிரமணிய சுவாமிக்கு நவரத்தினங்கள் பதித்த செங்கோல் சேவல் கொடி சாற்றப்பட்டு தங்க கிரீடம் சூட்டி பட்டாபிஷேகம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாண வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு அதிகாலையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்பாளுக்கு பால், சந்தனம், திரவியம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் திருக்கல்யாண அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினார்.
பின்னர், மதுரையில் இருந்து சுந்தரேஸ்வரர்-மீனாட்சி அம்மன் எழுந்தருள வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிகள் கோவிலுக்கு புறப்பாடானார்கள். வழி நெடுகிலும் பக்தர்கள் அமைத்த திருக்கண் மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர். தொடர்ந்து கோவிலின் ஒடுக்க மண்டபத்தில் கன்னி ஊஞ்சல் நடைபெற்று கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளினார். மீனாட்சி அம்மன் மீனாட்சி சுந்தரேஸ்வரரும் ஆறு கால் மண்டபத்தில் எழுந்தருளினர்.
அங்கு திருமண நிகழ்ச்சிகள் நடை பெற்று மங்கள வாத்தியம் முழங்க சுப்ரமணிய சுவாமி-தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் முன்னிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்ப கோலாகலமாக நடைபெற்றது. அப்போது திருமணமான பெண்கள் புதிய திருமாங்கல்ய கயிறு மாற்றிக் கொண்டனர்.
திருக்கல்யாண விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு கந்த சஷ்டி மண்டபம் மற்றும் வள்ளி தேவசேனா திருமண மண்டபத்தில் அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.
இன்று மாலையில் வெள்ளி யானை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (19-ந் தேதி) காலை 5 மணிக்கு சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருள கிரிவல பாதை வழியாக சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
பங்குனி திருவிழாவின்போது, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றம் வந்து மகனான முருகப்பெருமானின் திருமணத்தை நடத்தி வைத்து கோவிலுக்கு திரும்புவது தொன்றுதொட்டு நடந்து வருகிறது.