கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா கோலாகலம்
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.;

இந்தியா-இலங்கை பக்தர்களின் பாரம்பரிய உறவுத் திருவிழாவாகக் கருதப்படும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலயத்தின் முன்புள்ள கொடிமரத்தில் நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன், ராமேஸ்வரம் வேர்க்கோடு பங்குத்தந்தை அசோக் வினோ ஆகியோர் அந்தோணியாரின் உருவம் பதித்த கொடியை ஏற்றினர்.
முன்னதாக இந்த விழாவில் பங்கேற்க இந்திய பக்தர்களுக்கு இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மறைமாவட்ட பிஷப் அழைப்பு விடுத்தார். இதன்படி, கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இந்தியாவில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 414 பேர் நேற்று படகுகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
தொடர்ந்து கச்சத்தீவு திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இருநாட்டு பக்தர்களும் ஜெபமாலையை சுமந்து வந்த சிலுவை பாதை நிகழ்ச்சியும், நற்கருணை ஆராதனையும், அந்தோணியார் தேர் பவனியும் நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து வந்திருந்த பங்குத் தந்தையர்கள், அருட்சகோதரிகள் உள்ளிட்ட சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.