பக்தர்களுக்காக பச்சைப் பட்டினி விரதம் இருக்கும் அம்மன்

சமயபுரம் மாரியம்மன் பச்சைப் பட்டினி விரதம் இருக்கும் 28 நாட்களும், அம்மனுக்கு சமைத்த உணவுகள் எதுவும் படைக்கப்படாது.;

Update:2025-03-25 16:18 IST
பக்தர்களுக்காக பச்சைப் பட்டினி விரதம் இருக்கும் அம்மன்

திருச்சியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் காவிரியின் வடகரையில் அமைந்திருக்கிறது சமயபுரம். பிரசித்திபெற்ற இந்த திருத்தலத்தில் சமயபுரம் மாரியம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

இந்த ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா, பூச்சொரிதல், சித்திரை பெருந்திருவிழா, புரட்டாசியில் நவராத்திரி பெருவிழா ஆகியவை முக்கியமான திருவிழாக்கள் ஆகும். தை மாதத்தில்த்தில் 11நாட்கள் தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது. பத்தாம் திருநாளில் திருவரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இருந்து மாரியம்மன் சீர் பெறுதல் வைபவம் நடைபெறும்.

மாசி மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெறுகிறது. மகிஷாசுரனை வதம் செய்த பாவம் தீரவும், தன் கோபம் அடங்கவும் தவம் செய்து, பச்சைப் பட்டினி விரதம் இருந்து சாந்த சொரூபியாக மாறிய மாரியம்மனுக்கான திருவிழா இது.

வருடந்தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை பக்தர்களுக்காக அம்மனே 28 நாட்கள் பச்சைப் பட்டினி விரதம் இருப்பது சமயபுரம் மாரியம்மன் கோவிலின் தனிச்சிறப்பு ஆகும். உலக மக்களின் நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தோய்கள், தீவினைகள் அணுகாது இருக்கவும், சகல சவுபாக்கியங்கள் கிடைக்கவும் இந்த பச்சைப்பட்டினி விரதம் இருப்பதாக ஐதீகம்.

சமயபுரத்தில் வழக்கமாக அம்பாளுக்கு தினந்தோறும் 6 கால பூஜையில், 6 விதமான தளிகையும் நைவேத்தியமாக வைக்கப்படும். சமைத்த உணவுப் பொருட்களையே 'தளிகை' என்று சொல்வார்கள். ஆனால் அம்மன் பச்சைப் பட்டினி விரதம் இருக்கும் 28 நாட்களும், அம்மனுக்கு சமைத்த உணவுகள் எதுவும் படைக்கப்படாது. இந்த 28 நாட்களிலும் இளநீர், பானகம், உப்பில்லாத நீர்மோர், துள்ளுமாவு, கரும்பு, பழ வகைகள் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படும்.

இந்த ஆண்டுக்கான பச்சைப் பட்டினி விரதம் கடந்த 9-ந் தேதி (9.3.2025) தொடங்கியது. வருகிற ஏப்ரல் 6-ந் தேதி வரை இந்த விரத காலம் உள்ளது. இந்த இடைப்பட்ட நாளில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடை பெறும்.

Tags:    

மேலும் செய்திகள்