எண்ணங்களை சுத்திகரிக்கும் ஏகாதசி விரதம்

ஏகாதசி நாளில் வீட்டில் புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து சுவாமிக்கு படைக்கலாம்.;

Update:2025-03-25 16:45 IST
எண்ணங்களை சுத்திகரிக்கும் ஏகாதசி விரதம்

மகாவிஷ்ணுவுக்குரிய விரதங்களில் முதன்மையானது ஏகாதசி விரதம் ஆகும். ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை ஏகாதசி தினம் வரும். ஏகாதசி நாளில் விரதம் இருந்து இருந்து வழிபடும் பக்தர்களுக்கு நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம், அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் இறைவன் அருள்வார் எனது ஐதீகம்.

ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் கோபம், குரோதம், மாச்சர்யங்கள் விலகி எண்ணங்கள் சுத்திகரிக்கப்பட்டு தூய்மை அடையும். ஏகாதசி உபவாசம் இருப்பது, இந்த ஜன்மாவை நமக்குக் கொடுத்த பரம்பொருளுக்கு, நாம் செலுத்தும் நன்றிக் காணிக்கை என்றே தர்மசாஸ்திரம் கூறுகிறது.

தேவர்களும், அசுரர்களும் மந்தார மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தபோது ஏகாதசி நாளில் அமிர்தம் வெளிப்பட்டது. அந்த அமிர்தத்தை மறுநாள் துவாதசியன்று தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. எனவேதான், ஏகாதசியன்று விரதம் மேற்கொண்டு துவாதசி அன்று விரதத்தை முடிக்கின்றனர்.

ஏகாதசி திருநாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, பூஜைகள் மற்றும் அனுஷ்டானங்களை செய்துவிட்டு மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும். நாள் முழுவதும் உணவு அருந்தாமல் முழு உபவாசம் இருப்பது நல்லது. தாகசாந்திக்காக தண்ணீர் குடிக்கலாம். அதேபோல் உடல் நலம் குறைவாக இருப்பவர்கள், சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை மட்டும் சாப்பிடலாம். தானிய உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

ஏகாதசியன்று பெருமாளை நினைத்து வீட்டில் விளக்கேற்றி, பெருமாளின் திவ்ய நாமங்களைச் சொல்லி பாராயணம் செய்வது நல்லது. புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து சுவாமிக்கு படைக்கலாம். குறிப்பாக, பெருமாளுக்கு பிடித்தமான துளசி சார்த்தி வழிபடுவது பல நன்மைகளை வழங்கும். அதேபோல், துளசி தீர்த்தம் பருகவேண்டும். பெருமாளுக்கு படைக்கப்பட்ட நைவேத்தியத்தை அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவது வளம் சேர்க்கும். 

Tags:    

மேலும் செய்திகள்