திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் அடுத்த ஆண்டு சனிப்பெயர்ச்சி விழா: கோவில் நிர்வாகம் அறிவிப்பு
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பின்பற்றப்படும் பாரம்பரிய வாக்கிய பஞ்சாங்க வழிபாட்டு மரபை கருத்தில் கொண்டு செயல்படுமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.;

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி சனி பகவான் வரும் 29-ம் தேதி (29.03.2025) கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு மாறுகிறார். மீன ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 03.06.2027 வரை இரண்டரை வருட காலத்துக்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். மீன ராசியில் இருந்து தனது மூன்றாம் பார்வையால் ரிஷப ராசியையும், ஏழாம் பார்வையால் கன்னி ராசியையும், பத்தாம் பார்வையால் தனுசு ராசியையும் பார்க்கிறார். இந்த இடப்பெயர்ச்சியை கணித்து பலன்கள் சொல்லப்பட்டு வருகின்றன. அதேசமயம் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழும் என கணிக்கப்பட்டுள்ளது.
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்டுள்ள சனிப்பெயர்ச்சி தொடர்பாக தகவல்கள் வெளியான நிலையில், தமிழகத்தில் சனிபகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு உள்ளிட்ட ஆலயங்களில் அன்றைய தினம் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் என தகவல் பரவி வருகிறது.
திருநள்ளாறு கோவிலைப் பொருத்தவரை வாக்கிய பஞ்சாங்க முறைப்படிதான் சனி பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். எனினும் வருகிற 29-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளதாக தகவல் பரவி வருவதால் பக்தர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து திருநள்ளாறு தேவஸ்தான நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் வாக்கிய பஞ்சாங்கம் முறையை பின்பற்றியே சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. இந்த பாரம்பரிய கணிப்பு முறையின்படி அடுத்த ஆண்டு (2026) சனிப்பெயர்ச்சி நடைபெறும். ஆனால் வருகிற 29-ந் தேதி அன்று சனிப்பெயர்ச்சி விழா நடைபெறாது என்பதை தெளிவுபடுத்துகிறோம். அன்றைய தினம் வழக்கமாக நடைபெறும் தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெறும்.
2026-ம் ஆண்டு நடைபெறும் சனிப்பெயர்ச்சி சம்பந்தமான நிகழ்வு நடைபெறும் சரியான தேதி, நேரம் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். எனவே பக்தர்கள், ஜோதிடர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பொது மக்கள் திருநள்ளாறு கோவிலில் பின்பற்றப்படும் பாரம்பரிய வாக்கிய பஞ்சாங்க வழிபாட்டு மரபை கருத்தில் கொண்டு செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.