ஒப்பிலியப்பன் கோவிலில் பங்குனி பெருவிழா தேரோட்டம்
அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் பொன்னப்பர், பூமிதேவி தாயாருடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தார்.;

தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன்கோவிலில் வேங்கடாசலபதி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்தலம் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவிலாகும். 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், 'தென்னக திருப்பதி' என போற்றப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா 12 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் உற்சவர் பொன்னப்பன், பூமிதேவி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இங்கு திருவோண நட்சத்திரத்தன்று தேரோட்டம் நடைபெறுவது கூடுதல் சிறப்பாகும்.

அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் பொன்னப்பர்- பூமிதேவி தாயாருடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருள, பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு முன்பு கோவில் யானை 'பூமா' அசைந்தாடியபடி சென்றது. மேலும், ரதவீதிகளில் தேருக்கு முன்பாக அம்மன் வேடம் அணிந்த பெண்களின் நடனம், நாட்டிய குதிரையின் நடனம், செண்டை மேளம் என பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
தேர் நான்கு ரத வீதிகள் வழியாக வந்து நிலைக்கு வந்ததும், கோவில் புஷ்கரணியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின், நிறைவு நாளான 28-ந்தேதி காலை மூலவர் சன்னதியில் அன்னப்பெரும்படையலும், மாலை புஷ்பயாகமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவிலின் உதவி ஆணையர் ஹம்சன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர், அறங்காவலர்கள் பணியாளர்கள் செய்திருந்தனர்.