பெரணமல்லூர் வரத ஆஞ்சநேயர் கோவில்
திருமணத் தடை இருப்பவர்கள் விரைவில் திருமணம் நடைபெறவும், பிரிந்த தம்பதியர் ஒன்றுபடவும் இந்த ஆஞ்சநேயரை வழிபடுகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகே உள்ளது பெரணமல்லூர். இங்கு வரத ஆஞ்சநேயர் குன்றின் மீது குடிகொண்டு அருள்பாலித்து வருகிறார்.
தல வரலாறு
இயற்கை எழில் சூழ்ந்த இப்பகுதியில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு தம்பதியினர் குழந்தை இல்லாமல் கவலைப்பட்டு வந்தனர். அவர்கள் இறைவனை வழிபட்டு குழந்தை வரம் வேண்டினர். ஒரு முறை கணவனும், மனைவியும் தங்கள் நிலத்தில் உழவு செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏர் கலப்பையில் ஏதோ தட்டுப்பட்டது. இதையடுத்து அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது, அங்கு ஆஞ்சநேயர் சிலை இருந்தது.
அந்த விக்ரகத்தை அப்பகுதி மக்கள் உதவியுடன் அங்கிருந்த சிறிய குன்றின் மீது பிரதிஷ்டை செய்து கணவன்- மனைவி இருவரும் வழிபட்டு வந்தனர். இவ்வாறு வழிபடத் தொடங்கிய மறு வருடமே, அந்தத் தம்பதியருக்கு குழந்தை பிறந்தது. இதையடுத்து ஆஞ்சநேயரின் சக்தி அந்த ஊர் முழுவதும் பரவியது. பக்கத்து ஊர்களுக்கும் பரவியது. அனைத்து தரப்பு மக்களும் அங்கு வந்து அனுமனை வழிபடத் தொடங்கினர். பிரார்த்தனைக்ள விரைவாக நிறைவேறியதால் இந்தத் தலம் மிக வேகமாக வளரத் தொடங்கியது. பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற, ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி, அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.
ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. ஆனால் ஆஞ்சநேயர் வடக்கு முகமாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவரது வலது கரம் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு உடனடியாக அபயம் அளித்து வேண்டிய வரத்தைக் கொடுப்பதாக உள்ளது. இடது கரத்தில் சக்தி வாய்ந்த தண்டம் ஏந்தி நிற்கிறார். நவக்கிரகங்களின் அளவற்ற சக்தியைக் கூட கட்டுப்படுத்தும் இணையற்ற சக்தி ஆஞ்சநேயரின் வாலுக்கு உண்டு. அந்த வாலுக்கு பொட்டு வைத்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
அமாவாசை கிரிவலம்
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி அன்று மலை வலம் வந்து ஈஸ்வரனை வழிபடுவதுபோல், இங்கும் கிரிவலம் வந்து அனுமனை வழிபடும் வழக்கம் உள்ளது. ஆனால் பவுர்ணமி தினத்தில் இல்லை; அமாவாசை தினத்தில்தான் இங்கு கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
ஆலயத்தைச் சுற்றி சுவர் இல்லாத காரணத்தால், 2003-ம் ஆண்டுக்கு முன்பு வரை இந்த ஆலயம் புதர் மண்டிப்போய், குன்றின் மீது ஏறி ஆஞ்சநேயரை வழிபட முடியாத நிலையில் இருந்துள்ளது. பின்னர் பொதுமக்கள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக முட்புதர்கள் அகற்றப்பட்டு 2003-ம் ஆண்டு முதல் மீண்டும் ஆலயம் வழிபாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அனுமனுக்கு தினந்தோறும் பூஜைகளும், அமாவாசையில் கிரிவலமும், அனுமன் ஜெயந்தி அன்று கோலாகல விழாவும் நடத்தப்பட்டு வருகிறது.
அமாவாசை தோறும் இத்தல ஆஞ்ச நேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். அன்று ராம நாம கோஷத்துடன் கிரிவலம் நடைபெறும். அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அனுமனை வழிபட்டு, அவர் அருள்பெற்றுச் செல்கின்றனர். மார்கழி மாதத்தில் வரும் அமாவாசையின்போது, சிறப்பு அபிஷேகத்துடன் 1008 வடை மாலை சாத்தி, அனுமனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படும். அன்றைய தினம் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும். இந்த ஆலயத்தில் ராமர் அவதரித்த தினமாக கருதப்படும், ராம நவமி விழாவும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
திருமணத்தடை அகலும்
திருமணத்தடை இருப்பவர்கள் விரைவில் திருமணம் நடைபெறவும், பிரிந்த தம்பதியர் ஒன்றுபடவும், குழந்தைச் செல்வம் வேண்டுபவர்களும் இந்த தலத்திற்கு வந்து ஆஞ்சநேயரை வழிபட்டுச் செல்கின்றனர். மேலும் வழக்குகளில் சிக்கித் தவிப்பவர்களும் இங்கு வந்து வழிபாடு செய்து செல்கின்றனர். தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் திறந் திருக்கும்.
சென்னையில் இருந்து 120 கிலோமீட்டர் தூரத்திலும், தாம்பரத்தில் இருந்து 100 கிலோமீட்டர் தூரத்திலும், செய்யாறில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்திலும், ஆரணியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், வந்தவாசியில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது பெரணமல்லூர்.