பசுவாக வந்த பகவதி... சோட்டாணிக்கரை ஆலய சிறப்புகள்


பசுவாக வந்த பகவதி... சோட்டாணிக்கரை ஆலய சிறப்புகள்
x

சோட்டாணிக்கரை ஆலய கருவறையின் தளம் மணல் பாங்காக உள்ளதால், அபிஷேக நீர் அந்த மணலில் ஊறி, சற்றுத் தொலைவில் உள்ள ஒனக்கூர் தீர்த்த குளத்தில் இறங்கி விடுகிறது.

கேரளாவில் கொச்சி நகருக்கு 20 கி.மீ தொலைவில் உள்ளது சோட்டாணிக்கரை பகவதி அம்மன் ஆலயம். கேரளாவில் பகவதி அம்மன் கோவில்கள் பல உண்டு. அவற்றில் சோட்டாணிக் கரை பகவதி அம்மன் கோவில் தனிச் சிறப்பு உடையது.

கோவில் வரலாறு

இன்று சோட்டாணிக்கரையாக இருக்கும் இடம் பல நூற்றாண்டுகளுக்கு முன் புளியமரக் காடாக இருந்தது. அங்குள்ள பழங்குடியின மக்களின் தலைவன் கண்ணப்பனுக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். தாயற்ற தன் மகளை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தான் கண்ணப்பன்.

காட்டில் உள்ள தேவதையை திருப்திப்படுத்தினால் தானும் தன் மகளும் நிம்மதியாக வாழ முடியும் என எண்ணினான் கண்ணப்பன். அந்த தேவதையை திருப்திப்படுத்த தினம் அந்த தேவதைக்கு ரத்த பலி கொடுத்து வந்தான்.

ஒரு நாள் தேவதைக்குப் பலி கொடுக்க காட்டிற்குப் போய் காட்டுப்பசு ஒன்றை பிடித்து வந்தான். அப்போது அந்தப் பசுவின் கூடவே அதன் கன்றுவும் வந்தது. அந்தக் கன்றைக் கண்ட கண்ணப்பன் மகள் அதன் மேல் ஆசை கொண்டு தானே கன்றை வளர்த்துவரத் தொடங்கினாள். அதன் மேல் பாசத்தைக் கொட்டி, அதை தன் தோழிபோல் நடத்தத் தொடங்கினாள். கன்று வளர்ந்து பசுவானது. கண்ணப்பனின் மகளுக்கு அதன் மேலிருந்த பாசம் கூடியதே தவிர குறையவில்லை.

ஒரு நாள் வன தேவதைக்கு பலி கொடுக்க பசு கிடைக்கவில்லை. எனவே, அந்தப் பசுவை பலி கொடுக்க எண்ணி அதைப் பிடிக்க முயன்றான் கண்ணப்பன். பசு ஓடிவந்து கண்ணப்பன் மகளின் காலடியில் வந்து படுத்துக் கொண்டது. பசுவைத் தர மறுத்துவிட்டாள் கண்ணப்பனின் மகள்.

'இந்தப் பசுவுக்குப் பதிலாக நான் பலியாகிறேன்' என்று கூறிக் கொண்டே சுருண்டு விழுந்து இறந்தாள் கண்ணப்பனின் மகள்.

மகளை இழந்த கண்ணப்பன் வேதனை அடைந்தான். மகள் மேல் வைத்த பாசத்தை பசுவின் மேல் வைத்தான். அதற்கு 'கொச்சுக் கருப்பி' எனப் பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்தான்.

ஒரு நாள் இரவு அவன் ஒரு கனவு கண்டான். அந்தக் கனவில் பசுவின் அருகே ஒரு மகான் நிற்பது போலவும், சுற்றிலும் ஞானிகளும் முனிவர்களும் வேத மந்திரம் ஓதியபடி நிற்பதையும் கண்டான்.

மறுநாள் காலை கண் விழித்தபோது, பசு கற்சிலையாக மாறி இருந்தது. அதனருகே, ஒளிச்சுடர் விடும் முகத்துடன் அந்த மகானும் கற்சிலை வடிவில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு முனிவர் 'உன் வீட்டில் கன்று உருவில் வளர்ந்தது மகாலட்சுமி. அன்னையின் அருகே இருப்பது நாராயணன்' என்றார்.

கண்ணப்பன் கோவில் கட்டி அந்தச் சிலைகளை வழிபட்டான். அதுவே சோட்டாணிக்கரை பகவதியம்மன் கோவிலாக வளர்ச்சி அடைந்தது.

'அம்மே நாராயணா... லட்சுமி நாராயணா... தேவி நாராயணா... பத்ரி நாராயணா...' என்ற முழக்கத்தை இன்றும் இக்கோவிலில் கேட்கலாம்.

சிறப்பு அம்சங்கள்

இந்த அம்மனுக்கு மூன்று சிறப்பு அம்சங்கள் உண்டு. காலை ஆறு மணி வரை மூகாம்பிகையாக சரசுவதி அம்சமாக இருகிறாள். பகல் பன்னிரெண்டு மணி வரை மகாலட்சுமியாக இருக்கிறாள். இரவில் துர்க்கையின் அம்சமாகத் திகழ்கிறாள்.

அபிஷேக நீர்

ஆலயங்களில் பொதுவாக அபிஷேக நீர் வெளியேறும். அதை பக்தர்கள் எடுத்துக் கொள்வது வழக்கம். ஆனால், இந்த ஆலயத்தில் அபிஷேக நீர் வெளியே செல்வதில்லை. கருவறையின் தளம் மணல் பாங்காக உள்ளது. எனவே, அபிஷேக நீர் அந்த மணலில் ஊறி, சற்றுத் தொலைவில் உள்ள ஒனக்கூர் தீர்த்த குளத்தில் இறங்கி விடுகிறது.

பில்லி, சூன்யம் அகல...

கண்ணப்பன் உயிர்ப்பலி கொடுத்த இடம் கீழக் காவு என்ற பெயருடன் விளங்குகிறது. இந்த இடம் சோட்டாணிக்கரை ஆலயத்திற்கு கீழ்புறம் அமைந்துள்ளது. பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்றவற்றை கட்டுப்படுத்தும் குருதி பூஜை இங்கு நிகழ்கிறது. குறிப்பாக பெண்களைப் பிடித்த ஆவிகளை விரட்ட இங்கு பூஜை நடைபெறுகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் இங்குள்ள பலா மரத்தில் ஆணி அடிப்பது வழக்கமாக உள்ளது. இவ்வாறு ஆணி அடிப்பதால் அவர்களை பிடித்துள்ள பேய், பிசாசு மற்றும் பீடைகள் விலகுவதாக நம்பப்படுகிறது.

திருவிழா

மாசி மாத ரோகிணி நட்சத்திரத்தன்று இங்கு திருவிழா தொடங்குகிறது. உத்திர நட்சத்திரத்தன்று திருவிழா நிறைவு பெறும். விழாக்காலத்தில் தினசரி தேவி தீர்த்தமாடி திருவுலா வருவது அற்புதமான காட்சியாக இருக்கும். மகம் நட்சத்திரத்தன்று அம்மனை தரிசித்தால் உன்னதமான பலன்களைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை!


Next Story