தோடு ஒளியால் தோன்றிய முழு நிலவு.. அன்னை அபிராமி அற்புதம் நிகழ்த்திய திருக்கடையூர் தலம்


தோடு ஒளியால் தோன்றிய முழு நிலவு.. அன்னை அபிராமி அற்புதம் நிகழ்த்திய திருக்கடையூர் தலம்
x

தன்னுடைய பக்தியால், அன்னையை அற்புதம் நிகழ்த்தச் செய்த அபிராமி பட்டருக்கு சரபோஜி மன்னர் பெரும் மானியம் வழங்கி சிறப்பித்தார்.

எமனை அழித்து, மார்க்கண்டேயருக்கு என்றும் பதினாறாய் இருக்கும் சிரஞ்சீவி தன்மை அளித்து கால சம்ஹார மூர்த்தியாக அருள்பாலிப்பவர் திருக்கடவூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர். தற்போது இத்தலம் திருக்கடையூர் என்று அழைக்கப்படுகிறது. எம பயத்தைக் கடக்க உதவும் ஊர் என்பதால் "கடவூர்" என்று பெயர் பெற்றது. சம்பந்தர், அப்பர், சுந்தரர், அருணகிரிநாதர் ஆகியோரின் பாடல் பெற்ற தலம் இது. காரிய நாயனார், குங்குலியக் கலய நாயனார் ஆகியோர் அவதரித்த ஊர் என்ற சிறப்பையும் இத்தலம் பெற்றுள்ளது. பிரம்மதேவர், இங்குள்ள ஈசனை வழிபட்டு ஞானோபதேசம் பெற்றுள்ளார்.

திருக்கடையூர் என்றால், அமிர்தகடேஸ்வரரை அடுத்து, அன்னை அபிராமி. தன் பக்தனுக்காக அமாவாசை நாளில் முழு நிலவை வானில் தோன்றச் செய்த அற்புதம்தான் அனைவரின் நினைவுக்கும் வரும்.

பஞ்சாங்கம் படிப்பவர்

திருக்கடையூர் ஆலயத்தில் கணக்கராய் இருந்த அமிர்தலிங்கம் என்பவரது மகன் சுப்பிரமணியம். இவர் திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில் தினமும் பஞ்சாங்கம் படிக்கும் பணியைச் செய்து வந்தார். அம்மன் மீது கொண்டிருந்த அளவுகடந்த பக்தியின் காரணமாக, பஞ்சாங்கம் படித்து முடித்ததும், அபிராமி சன்னிதி முன்பு யோக நிஷ்டையில் அமர்ந்து விடுவார். இதனை பார்க்கும் சிலர் இவரை பித்தர் என்று தூற்றி வந்தனர். அது பற்றி சுப்பிரமணியம் கவலை கொள்ளாமல், அன்னையின் பாதமே தஞ்சம் என்றிருந்தார்.

தன் பக்தன் சுப்பிரமணியத்தின் பக்தியை உலகிற்கு உணர்த்திட ஓர் அற்புதமான சந்தர்ப்பத்தை உருவாக்கினாள், அந்த அபிராமித் தாய். அன்றைய தினம் தை அமாவாசை. தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி மன்னர், கடல் நீராட காவிரிப்பூம்பட்டினம் சென்றார். பின்னர் அங்கிருந்து திருக்கடையூர் ஆலயம் வந்து சேர்ந்தார். அப்போது அபிராமி அம்மன் சன்னிதியில் சுப்பிரமணியம், இவ்வுலகை மறந்த நிலையில் யோக நிஷ்டையில் இருப்பதை கவனித்தார்.

யோக நிஷ்டையில்...

பின்னர் அவர் யார் என்று கோவில் அர்ச்சகர்களிடம் மன்னர் விசாரித்தார். அவர்களோ, 'அம்மன் சன்னிதியில் பஞ்சாங்கம் படிப்பவர்' என்று கூறினர். உடனே யோக நிஷ்டையில் இருந்தவரை அணுகிய மன்னர், 'இன்று என்ன திதி?' என்று கேட்டார். ஆனால் சுப்பிரமணியத்தின் காதிலோ அது 'ஸ்திதி' என்று விழுந்தது. அங்குதான் அன்னையின் விளையாட்டு ஆரம்பமானது. 'ஸ்திதி' என்றால் 'நிலை' என்று பொருள்.

மன்னர் கேட்ட சமயத்தில் சுப்பிரமணியம், பவுர்ணமி போன்ற ஒளி பொருந்திய அபிராமி அம்மனின் திருமுருக தரிசன நிலையில் லயித்திருந்ததால், 'பவுர்ணமி' என்று கூறிவிட்டார். மன்னனுக்கோ கடுமையான கோபம் வந்துவிட்டது. 'அமாவாசை, அதுவும் தை அமாவாசை என்னும் புண்ணிய தினம். ஆனால் பஞ்சாங்கம் வாசிக்கும் சுப்பிரமணியமோ, பவுர்ணமி என்று கூறுகிறாரே' என்று மனம் கொந்தளித்தார் மன்னர்.

மரண தண்டனை

அவர் கோபம் கொப்பளிக்கும் கண்களுடன் பேசத் தொடங்கினார். 'இன்று இரவு பூரண சந்திரன் வானில் உதிக்காவிட்டால் உமக்கு மரண தண்டனை' என்று கூறிவிட்டு அங்கிருந்து விறுவிறுவென புறப்பட்டுச் சென்று விட்டார்.

அபிராமி அம்மனை நினைத்து யோக நிஷ்டையில் இருந்து தன் நிலைக்கு திரும்பிய சுப்பிரமணியத்திடம், அர்ச்சகர்கள் நடந்ததைக் கூறினர். 'அமாவாசையில் எப்படி முழு நிலவு தோன்றும்?' என அர்ச்சகர்களும் சுப்பிரமணியத்திடம் கேட்டனர். அதற்கு சுப்பிரமணியத்திடம் இருந்து எவ்வித சலனமும் இல்லாது பதில் வந்தது. 'என்னை அந்த நிலையில் இருந்து அமாவாசையை, பவுர்ணமி என்று சொல்ல வைத்தவள் அன்னை அபிராமி. எனவே, அவளே இதற்கும் நிச்சயம் பதில் சொல்வாள்' என்றார்.

ஆலயத்தின் வெளியில் அக்கினிக் குண்டம் வளர்க்கப்பட்டது. அதற்கு மேல் நூறு கயிறுகள் தொங்கவிடப்பட்டன. அக்கயிறுகளின் மறுமுனையில் பெரிய உறி ஒன்றைக் கட்டித் தொங்க விட்டார்கள். அதற்கு 'அரிகண்டம்' என்று பெயர். நூறு கயிறுகளும் அறுக்கப்பட்டால் உறியில் இருப்பவர் அக்கினிக் குண்டத்தில் விழுந்து உயிர் துறப்பார்.

மாலை நேரம் வந்தது. அந்த உறியில் சுப்பிரமணியத்தை ஏற்றினர். அக்கினிக் குண்டத்தில் தீமூட்டப்பட்டது. தீ தகதகவென கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. சுப்பிரமணியம் உறியில் ஏறியதும், அபிராமி அம்மனின் கருவறை நோக்கி வணங்கிவிட்டு, சுற்றியிருந்த பக்தர்களுக்கும், மன்னனுக்கும் வணக்கம் தெரிவித்தார்.

அபிராமி அந்தாதி

பின்னர் 'தாரமர் கொன்றையும்' எனத் தொடங்கும் விநாயகர் துதியைப் பாடி விட்டு, அபிராமியைப் போற்றி பாடல்களைப் பாடினார் சுப்பிரமணியம். அதுவே அபிராமி அந்தாதியானது. 'உதிக்கின்ற செங்கதிர்' எனத் தொடங்கும் அபிராமி அந்தாதிப் பாடலை பாடத் தொடங்கினார். ஒவ்வொரு பாடல் நிறைவிலும், ஒவ்வொரு கயிறாக அறுக்கப்பட்டது. அந்தாதியில் 78 பாடல்கள் பாடி முடித்துவிட்டார். உறியிலும் 78 கயிறுகள் அறுக்கப்பட்டுவிட்டன. 78-வது பாடலின் நிறைவில் 'துப்பும் நிலவும் எழுதி வைத்தேன் என் துணை விழிக்கே' என்று உறுதிபட அபிராமியிடம் வேண்டினார். இதற்கு மேலும், தன் பக்தனை தவிக்க விடுவாளா அந்த அன்னை. சுப்பிரமணியம் 79-வது பாடலாக 'விழிக்கே அருளுண்டு' என்று பாடத் தொடங்கியதுதான் தாமதம், அன்னை அபிராமி சுப்பிரமணியத்துக்கு காட்சி தந்து, தன் காதில் இருந்த தாடங்கம் (தோடு) ஒன்றைக் கழற்றி வானில் வீச, அது முழு மதியாய் பூரண சந்திரனாய் பல மடங்கு பிரகாசத்துடன் ஒளி வீசியது.

வானில் அற்புதம்

ஆம்! அன்னையிடம் வேண்டிய பக்தனுக்காக, அமாவாசை நாளில் வானில் முழு நிலவு தோன்றியது. மன்னன் உள்பட அங்கு கூடியிருந்த அனைவரும் அன்னை அபிராமியின் அருள்திறத்தையும், சுப்பிரமணியத்தின் பக்தியையும் எண்ணி மெய்சிலிர்த்தனர். மன்னன் சுப்பிரமணியத்தின் காலில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டி, 'அபிராமி பட்டர்' என்னும் திருப்பெயரை அவருக்குச் சூட்டினார்.

அப்போது வானில் அசரீரி எழுந்தது. 'அன்பனே! நீ மன்னனிடம் கூறியச் சொல்லை மெய்ப்பித்து விட்டோம். தொடங்கிய அந்தாதியைத் தொடர்ந்து பாடி முடிப்பாயாக!' என்றது அந்தக் குரல்; அது அபிராமி அன்னையின் அமுதக் குரல். அன்னையின் சொல்படி தொடர்ந்து 100 பாடல்கள் பாடி, நூற்பயனாக 'ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை' என்னும் பாடலுடன் அபிராமி அந்தாதியை நிறைவு செய்தார் அபிராமி பட்டர். தன்னுடைய பக்தியால், அன்னையை அற்புதம் நிகழ்த்தச் செய்த அபிராமி பட்டருக்கு சரபோஜி மன்னர் பெரும் மானியம் வழங்கி சிறப்பித்தார். அதற்குச் சான்றாக உரிமை செப்புப் பட்டயம் ஒன்று, அபிராமி பட்டர் சந்ததியினரிடம் இன்றும் இருக்கிறது.

தனிக்கோபுரம்

அன்னை அபிராமியின் ஆலயம் தனிக்கோபுரத்துடன், அமிர்தகடேஸ்வரர் ஆலயத் தென்மதிலும், மேல் மதிலும் கூடும் இடத்தில் இருக்கிறது. 'அபிராமி' என்னும் வடமொழி சொல்லுக்கு 'அழகி' என்று பொருள். மூன்றடி உயர பீடத்தில், நான்கு திருக்கரங்களுடன் அன்னை அபிராமி கிழக்குப் பார்த்த வண்ணம் நின்றத் திருக்கோலத்தில் அருள்

பாலிக்கிறார். இத்தல அன்னையை, சரஸ்வதிதேவி பூஜித்து அருள் பெற்றுள்ளார். கருவறையின் பின்புறம் சரஸ்வதி தேவிக்கும், அபிராமி பட்டருக்கும் தனிச் சன்னிதிகள் உள்ளன.

திருக்கடையூரில் இன்றும் அபிராமி பட்டர் வாழ்ந்த வீடு இருக்கிறது. திருக்கடையூர் மேல் வளாகத் தெருவில் உள்ள மூன்றாவது வீடு அபிராமி பட்டர் வீடு ஆகும். இருபது அடி அகலம் கொண்ட ஓட்டு வீடு. வீட்டின் சுவரில், 'அருளாளர் ஸ்ரீ அபிராமி பட்டர் அவதார இல்லம் என பொறித்து பதித்திருக்கிறார்கள். தை அமாவாசை திருநாளில் அபிராமி அன்னையையும், அபிராமி பட்டரின் இல்லத்தையும் கண்டு தரிசித்து மகிழலாம்.


Next Story