மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார் கோவில்


மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார் கோவில்
x

பேயாழ்வாருக்கு இறை உபதேசம் அருளிய தாயாரை வணங்கினால் பாவச் சுமை நீங்கும் என்பது நம்பிக்கை

சென்னையில், மயிலாப்பூரில் அமைந்துள்ள ஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார் கோவில் மிகவும் பழமை வாய்ந்த தொண்டைநாட்டுத் திருத்தலமாகும். மயிலாப்பூர் என்பது முற்காலத்தில் மயூரபுரி, மயூரநகரி என்று அழைக்கப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. திவ்ய தேசங்கள் தவிர இன்னும் பல தலங்கள் ஆழ்வார்கள் அவதாரத் தலமாகவும், ஆச்சார்யர்கள் அவதாரத் தலமாகவும் உள்ளன. அந்த வகையில் மயிலாப்பூர் திரு ஆதிகேசவ பெருமாள் கோவில் பேயாழ்வார் அவதாரத்தலமாக அமைந்துள்ளது.

கோவில் அமைப்பு

இந்த ஆலயம் ஏழு கலசங்களுடன் ஐந்துநிலை ராஜகோபுரமாக கம்பீரமாக காட்சியளிக்கிறது. கோபுரத்தின் உள்ளே நுழையும்போது அங்குள்ள தூண்களில் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. ஆழ்வார்கள், தசாவதார காட்சி மற்றும் சில சிற்பங்கள் கலைநயத்துடன் செதுக்கப்பட்டு இந்த கோவிலின் பழமையை பறைசாற்றுகின்றன. பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார், ஆண்டாள் சன்னிதிகள் கிழக்கு முகமாக அமைந்துள்ளது. ராமர் சன்னிதி தெற்குநோக்கியும், அனுமன் சன்னிதி மேற்குநோக்கியும் உள்ளது. பேயாழ்வார் மற்றும் மணவாள மாமுனிகள் சன்னிதிகள் தெற்குநோக்கி காணப்படுகின்றன. திருமழிசைபிரான் சன்னிதி, பேயாழ்வார் சன்னிதிக்கு நேர் எதிராக அமைந்துள்ளது.

ஆதிகேசவபெருமாள் நின்ற திருக்கோலத்தில் தனியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தாயாரின் திருநாமம் மயூரவல்லித் தாயார் என்பதாகும். பேயாழ்வாருக்கு உபதேசம் செய்வதற்காக, தாயாரை மயூரபுரியில் அவதரிக்க பெருமாள் உத்தரவிட்டார். அதன்படி தாயார் ஆம்பல் மலரில் இருந்து ஒரு பங்குனி உத்திரத் திருநாளில் வெளிப்பட்டார். பின் பேயாழ்வாருக்கு இறை உபதேசம் அருளினார் என்கிறது தல வரலாறு.

இத்தல தாயார், இரு கைகளில் அபய முத்திரை, வரத முத்திரைகளை தாங்கியும், மேலும் இரு கைகளில் தாமரைப் பூவை கொண்டும், பத்மாசனத்தில் அமர்ந்தபடி காட்சியளிக்கிறார். இந்த தாயாரை வணங்கினால் நிறைந்த செல்வம் தேடி வரும். பாவச் சுமை நீங்கும் என்பது நம்பிக்கை. பக்தர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறியதும், தாயாருக்கு இரண்டு மணிகளை வாங்கி காணிக்கையாக சமர்ப்பிக்கின்றனர்.

தாயாரிடம் உபதேசம் பெற்ற பேயாழ்வார், தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார். இவரது சன்னிதிக்கு எதிரே அவரது சீடரான திருமழிசை ஆழ்வார் இருக்கிறார். ராமபிரான் சீதை, லட்சுமணருடன் தனி சன்னிதியில் இருந்து அருள்பாலிக்கிறார்.

ராவண வதம் முடிந்து சீதையை மீட்ட பின் ராமர் அயோத்தி புறப்பட்டார். அப்போது வழியில் இந்தத் தலத்தில் சில காலம் தங்கியதாக கூறப்படுகிறது. இந்த சன்னிதியில் ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோரை விபீஷண ஆழ்வார் வணங்கிக் கொண்டு இருப்பதை காணலாம். இந்த ஆலயத்தில் அனைத்து ஆழ்வார்களின் உற்சவ சிலையும் இருப்பது தனித்துவமாக அமைந்துள்ளது.

முன்னொரு காலத்தில் மயிலாப்பூரில் இருந்து திருவல்லிக்கேணிக்கு ஓர் நீரோடை ஓடிக் கொண்டிருந்தது. அந்த நீரோடைக்கு 'கைரவணி' என்ற பெயர் இருந்தது. அதில் அல்லி, தாமரைப் பூக்கள் நிறைந்திருந்தன. அந்த ஓடையில் இருந்த ஒரு அல்லிப்பூவில் இருந்து பேயாழ்வார் அவதரித்தார். அந்த நீரோடையின் ஒரு பாகமே, ஒரு கிணறாக அமைந்து மயிலாப்பூர் அருண்டேல் தெருவில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த நீரோடையின் மறுபாகம் திருவல்லிக்கேணியில் ஒரு தடாகமாக அமைக்கப்பட்டு இருக்கிறது.

திருமாலுடைய திவ்யகுணங்களிலே மூழ்கி, தன்னை மறந்து ஆழ்ந்து போகிறவர்களை 'ஆழ்வார்கள்' என்று அழைத்தனர். இப்படி அவதரித்த ஆழ்வார்களில், பொய்கையார், பூதத்தார் மற்றும் பேயாழ்வார் போன்றவர்களை 'முதலாழ்வார்கள்' எனப் பெயரிட்டு அழைத்துள்ளனர். பேயாழ்வார், மகாவிஷ்ணுவின் நந்தகம் என்னும் வாள் படையின் அம்சம் ஆவார். இவர் எப்போதும் மக்களில் இருந்து தனித்து, இறைவன் சிந்தனையில் மூழ்கி அழுதல், சிரித்தல், தொழுதல், ஆடுதல், பாடுதல் போன்ற செய்கைகளை செய்து கொண்டே இருந்ததால், இவரைக் கண்டவர்கள் பேயன் என்று அழைத்தனர். இதனால் அவர் பேயாழ்வார் என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பேய் என்ற சொல்லுக்கு பெரியவர் என்னும் பொருள் உண்டு. எனவே அவருக்கு இந்தப் பெயர் வந்ததாகவும் காரணம் சொல்லப்படுகிறது.

ஆதிகேசவ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், பங்குனி மாதம் 10 நாட்கள் நடைபெறும். பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தில் தீர்த்தவாரி நடைபெறும். தாயாருக்கு பிரதி வெள்ளிக்கிழமை வில்வ அர்ச்சனை, ஹோமம் நடைபெறுகிறது. பங்குனி உத்திர உற்சவம், நவராத்திரி உற்சவம், தை மாத லட்சார்ச்சனை போன்றவை சிறந்த முறையில் செய்யப்படுகிறது. ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பேயாழ்வாருக்கு 10 நாட்கள் உற்சவ விழா நடத்தப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் சுதர்சன ஹோமம் செய்யப்படுகிறது. ஆண்டாளுக்கு ஆடிப்பூரம், மார்கழி மாத உற்சவம், சொர்க்கவாசல் திறப்பு சிறப்பாக நடைபெறுகிறது. தை அமாவாசையொட்டி தெப்ப உற்சவம் ஐந்து நாட்கள் நடக்கிறது.

பேயாழ்வாரின் சீடர்

பேயாழ்வார், ஆதிகேசவ பெருமாளை வைகானச விதிப்படி வழிபட்டு வந்தார். அவர் ஒரு பூந்தோட்டத்தை நிர்மாணித்து, இறைவனுக்கு தேவையான பூ, துளசி போன்றவற்றை வளர்த்து இறைவனுக்கு சேவை செய்து வந்தார். இந்த நிலையில் திருமழிசை தலத்தில் அவதரித்த திருமழிசையாழ்வார், பல மத தெய்வங்களை வழிபட்டு, பல இடங்கள் சுற்றி விட்டு மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் சன்னிதிக்கு வந்தார். அவருக்கு காட்சி தந்த பெருமாள், பேயாழ்வாரைக் கண்டு ஞான உபதேசம் பெற்று வரும்படி பணித்தார்.

திருமழிசையாழ்வார், பூ கைங்கர்யத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்த பேயாழ்வாரை சந்தித்தார். திருமழிசையாழ்வார் வருவதைக்கண்ட பேயாழ்வார், துளசிச்செடியை தலைகீழாக நட்டு வைத்து அதற்கு நீர் ஊற்றிக்கொண்டிருந்தார். இதனைக் கண்ட திருமழிசை ஆழ்வார், 'என்ன பேயரே! இப்படி தலைகீழாக நட்டால் துளசிச் செடி முளைக்குமா?' என்று கேட்டார்.

அதற்கு பேயாழ்வார், 'மற்ற தெய்வங்கள் மூலம் மோட்சம் கிடைக்கும் என்றால், இதுவும் சாத்தியமே' என்றார்.

'இவர் ஒரு பைத்தியம் என்று நினைத்த திருமழிசை ஆழ்வார், மீண்டும் ஆதிகேசவ பெருமாளிடம் வந்து சேர்ந்தார். இப்போதும் பேயாழ்வாரை முறைப்படி சென்று வணங்கு என்று கூறி அனுப்பிவைத்தார் பெருமாள்.

பேயாழ்வாரை மறுபடியும் வந்து சந்தித்த திருமழிசைபிரான், அவரை முறைப்படி வணங்கி, தானும் அவருடன் சேர்ந்து பூ கைங்கர்யத்தில் ஈடுபட விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து அவரை தனது சீடராக ஏற்று ஞான உபதேசம் வழங்கினார். 'பக்திசாரர்' என்ற திருநாமத்தையும் சூட்டினார்.

சந்திரன் சாபம் நீக்கிய தீர்த்தம்

கருடபுராணத்தின் 3 மற்றும் 4-வது அத்தியாயங்களிலே வரும் சில ஸ்லோகங்கள் மயிலாப்பூரில் உள்ள தீர்த்தத்தின் மகிமையைக் கூறுகிறது. குருவின் சாபத்திற்கு ஆளான சந்திரன் மிகவும் வேதனையடைந்தான். அந்த சாபம் தீர, மயிலாப்பூர் வந்து ஆதிகேசவ பெருமாளை வணங்கி துதித்தான். இதையடுத்து இறைவன் எல்லாப் புண்ணிய நதிகளையும் மயிலாப்பூரில் கூடும்படி பணித்தார். புண்ணிய நதிகள் கூடிய தீர்த்தத்தில் நீராடிய சந்திரன் சாபம் நீங்கப்பெற்றான். இந்தக் குளத்திற்கு 'சர்வ தீர்த்தம்' என்ற பெயர் உண்டாயிற்று. சந்திரன் சாபம் நீங்கியதால் சந்திர புஷ்கரணி என்ற பெயர் அமைந்தது. பின்பு சித்திரபுஷ்கரணி என்று மாறி தற்போது சித்திரக்குளம் என்று அழைக்கப்படுகிறது.


Next Story