பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறுமா?
இந்திய அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவு பெண்களுக்கு சம உரிமை வழங்குவதை உறுதிப்படுத்தியுள்ளது. எல்லா அரசியல் கட்சிகளுமே, பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படவேண்டும் என்பதை தங்கள் கொள்கையாக வைத்திருக்கின்றன.
இந்திய அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவு பெண்களுக்கு சம உரிமை வழங்குவதை உறுதிப்படுத்தியுள்ளது. எல்லா அரசியல் கட்சிகளுமே, பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படவேண்டும் என்பதை தங்கள் கொள்கையாக வைத்திருக்கின்றன. பெண்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இப்போது ஆண்களுக்கு நிகராக சாதனை படைத்து வருகிறார்கள். விண்வெளி ஆராய்ச்சியில் கூட பெண்கள், குறிப்பாக தமிழக பெண் விஞ்ஞானிகள் ஒளி வீசிக்கொண்டு இருக்கிறார்கள். எல்லைப் பகுதியில் நாட்டைப் பாதுகாக்கும் முக்கிய பணிகளில், கப்பல் படையில் முக்கிய பொறுப்புகளில், விமான படையில் போர் விமானிகள் என்று பெண்கள் கால் பதிக்காத இடமே இல்லை. அத்தனை பணிகளிலும் அவர்கள் முத்திரை பதித்து வருகிறார்கள்.
ஏன், இப்போது இந்திய நாட்டு ஜனாதிபதி பதவியில் இருப்பதும் ஒரு பெண்தான். பிரதமர் பதவி, மாநில முதல்-மந்திரிகள், கவர்னர்கள் என்று, ஆட்சி பொறுப்புகள் அனைத்திலும் பெண்கள் பிரகாசித்து இருந்தாலும், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள். தமிழ்நாடு பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு அளிப்பதில் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதிதான் முதன் முதலில் உள்ளாட்சி தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை 1996-ம் ஆண்டு கொண்டுவந்து நிறைவேற்றினார். ஜெயலலிதா இந்த இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தினார். ஆக, தமிழ்நாட்டில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், 50 சதவீத இடத்தை பெண்கள் அலங்கரித்துக்கொண்டு இருக்கிறார்கள். இதுபோல, நாடாளுமன்றத்திலும், சட்டசபையிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருக்கிறது.
மக்களவை, மாநிலங்களவையில் இதற்கான மசோதாவை நிறைவேற்ற வேண்டும். 542 உறுப்பினர்கள் உள்ள மக்களவையில், இப்போது 78 பெண் உறுப்பினர்களும், 224 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் இப்போது 24 பெண் உறுப்பினர்கள் மட்டுமே இருக்கிறார்கள். தேர்தல் அறிக்கையில், பா.ஜ.க., காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் பெண்களுக்கு இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவோம் என்று உறுதியளித்து இருக்கிறார்கள். இதற்கான மசோதா முதலில் 1996-ல் தேவேகவுடா பிரதமராக இருந்தபோது தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து வாஜ்பாய் அரசாங்கத்தில் 1998, 1999, 2002, 2003-ம் ஆண்டுகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அது நிறைவேறவில்லை.
2008-ல் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டாலும், எதிர்ப்பு காரணமாக மக்களவையில் நிறைவேற்றப்படாமல் இன்றும் கிடப்பிலேயே இருக்கிறது. இப்போது 18-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை நடக்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று அரசியல் வட்டாரங்களில் உறுதியாக எதிர்பார்க்கப்படுகிறது. இது பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி, வாஜ்பாயின் கனவு. இப்போது பெண் சக்தி பற்றி பிரதமர் நரேந்திர மோடி அதிகம் பேசுகிறார். எனவே, இந்த மசோதாவை கொண்டு வருவது உறுதி. அதுபோல, தேர்தல் நெருங்குவதால் மற்ற எதிர்க்கட்சிகளும் நிச்சயமாக இதற்கு ஆதரவு அளிக்கும். நீண்ட காலமாக கனவாக இருக்கும் பெண்களுக்கான இடஒதுக்கீடு நிறைவேறப்போகும் காலம் வந்துவிட்டது என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.