சாலை வரி இன்னும் உயரப்போகிறதா?
மக்களின் அன்றாட வாழ்க்கையில் போக்குவரத்து என்பது மிகவும் இன்றியமையாதது.
மக்களின் அன்றாட வாழ்க்கையில் போக்குவரத்து என்பது மிகவும் இன்றியமையாதது. பொது போக்குவரத்து இருந்தாலும் பெரும்பாலானோர் தங்களுக்கென்று சொந்தமாக இருசக்கர வாகனங்களையும், கார்களையும் வைத்து பயன்படுத்துகிறார்கள். 2021-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி நிலவரம் போக்குவரத்துத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அன்றைய காலக்கட்டத்திலேயே தமிழ்நாட்டில் 2 கோடியே 61 லட்சத்து 45 ஆயிரத்து 113 இருசக்கர வாகனங்களும், 28 லட்சத்து 95 ஆயிரத்து 959 கார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இருசக்கர வாகனங்களும், கார்களும் பதிவு செய்யப்பட்டு வருவதால் இந்த எண்ணிக்கை இப்போது மிகமிக அதிகமாக இருக்கும். 2022-2023-ம் ஆண்டில் மட்டும் 14 லட்சத்து 77 ஆயிரம் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில், 12 லட்சத்து 50 ஆயிரம் வாகனங்கள் இருசக்கர வாகனங்களாகும். வாகனங்களை வாங்கும்போது அதற்கான விலையோடு சாலை வரியையும் கட்டவேண்டும். அரசின் வருவாயில் இந்த சாலை வரி ஒரு கணிசமான வருவாயை ஈட்டித்தருகிறது.
போக்குவரத்துத்துறை வருவாயான ரூ.6 ஆயிரத்து 674 கோடியே 29 லட்சத்தில், 88 சதவீதம் அதாவது ரூ.5 ஆயிரத்து 873 கோடி சாலை வரி மூலமாகவே கிடைக்கிறது. கடைசியாக தமிழ்நாட்டில் 2008-ல் இருசக்கர வாகனங்களுக்கும், 2010-ல் கார்களுக்கும் சாலை வரி உயர்த்தப்பட்டது. அதன்படி, இப்போது இருசக்கர வாகனங்களின் விலையில் 8 சதவீதம் சாலை வரியாக வசூலிக்கப்படுகிறது. அதுபோல கார்களை எடுத்துக்கொண்டால் ரூ.10 லட்சத்துக்கு குறைவான விலை உள்ள கார்கள் என்றால் அதன் விலையில் 10 சதவீதமும், அதற்கு மேல் விலையுள்ள கார்களுக்கு 15 சதவீதமும் சாலை வரி வசூலிக்கப்படுகிறது.
இப்போது இந்த சாலை வரி விகிதத்தை உயர்த்த போக்குவரத்துத்துறை அரசுக்கு ஒரு கருத்துரை அனுப்பியுள்ளது. அதை அரசும் பரிசீலித்து வருகிறது. இதன்படி, ரூ.1 லட்சம் விலையுள்ள இருசக்கர வாகனங்களுக்கு 10 சதவீத வரியும், அதற்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு 12 சதவீத வரியும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுபோல, ரூ.5 லட்சம் வரை விலையுள்ள கார்களுக்கு 12 சதவீத சாலை வரியும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை விலையுள்ள கார்களுக்கு 13 சதவீத வரியும், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை விலையுள்ள கார்களுக்கு 15 சதவீத சாலை வரியும், ரூ.20 லட்சத்துக்கு அதிகமான விலையுள்ள கார்களுக்கு 20 சதவீத சாலை வரியும் விதிக்க திட்டம் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வரி திருத்தம் அமல்படுத்தப்பட்டால் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.1,000 கோடி கிடைக்கும். அரசு பரிசீலித்து மோட்டார் வாகனங்களுக்கு அதிக வலி ஏற்படுத்தாத வகையில் வரி உயர்வை அறிவிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரி உயர்வு அரசுக்கு அவசியம் என்று முடிவெடுக்கும் பட்சத்தில் சாலை வரி வருவாயைக்கொண்டு தரமான சாலைகளை அமைக்கவும், இப்போது இருக்கும் சாலைகளை மேடு-பள்ளம் இல்லாமல் பராமரிக்கவும், விளக்கு வசதிகள், சிக்னல் வசதிகள் ஏற்படுத்தவும், வழியில் வாகனங்களை நிறுத்தவும் கழிப்பிட வசதி ஏற்படுத்தவும் மருத்துவ வசதி, உணவு வசதி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் செலவழிக்கவேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.