சிந்துவெளி பண்பாடு யாருக்கு சொந்தம் ?


சிந்துவெளி பண்பாடு யாருக்கு சொந்தம் ?
x

1999-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒடிசா மாநிலத்தில் உள்ள மயுர்பஞ்ச் என்ற மாவட்டத்தில் தொழுநோயாளிகளுக்கான இல்லம் நடத்தி வந்த ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த கிறிஸ்தவ மிஷனரி கிரஹாம் ஸ்டுவர்ட் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது 10 வயது, 6 வயது மகன்கள் உயிரோடு தீவைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.

1999-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒடிசா மாநிலத்தில் உள்ள மயுர்பஞ்ச் என்ற மாவட்டத்தில் தொழுநோயாளிகளுக்கான இல்லம் நடத்தி வந்த ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த கிறிஸ்தவ மிஷனரி கிரஹாம் ஸ்டுவர்ட் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது 10 வயது, 6 வயது மகன்கள் உயிரோடு தீவைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. அப்போது சென்னையில் இருந்து 'தினத்தந்தி' செய்தியாளர் இதுகுறித்து நிறைய தகவல்களை திரட்டுவதற்காக அந்த மாவட்ட கலெக்டரை டெலிபோனில் தொடர்புகொண்டார். ஒடிசா மாநில கலெக்டர் என்பதால் அவரிடம் ஆங்கிலத்தில், "நான் தமிழ்நாட்டில் இருந்து 'தினத்தந்தி' பத்திரிகை செய்தியாளர் பேசுகிறேன்'' என்றவுடன், அந்த கலெக்டர் 'சொல்லுங்கள், நான் தமிழ்நாட்டை சேர்ந்தவன்தான், என் பெயர் பாலகிருஷ்ணன், நான் தமிழில் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ். அதிகாரியானேன்' என்று இனிமையான தமிழில் பேசி நிறைய தகவல்களை கொடுத்தார்.

அடுத்த நாள் 'தினத்தந்தி'யில் அவரது பெயருடன் செய்தி வெளியிடப்பட்டது. அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி மிகுந்த தமிழ் பற்றுள்ளவர். ஒடிசா மாநில தலைமை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவுடன், ஒடிசா மாநில முதல்-மந்திரியின் தலைமை ஆலோசகராக இப்போது பணியாற்றி வருகிறார். மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதியால் 'திருவாரூர் மாப்பிள்ளை' என்று அன்புடன் அழைக்கப்பட்ட ஆர்.பாலகிருஷ்ணன், சிந்துவெளி பண்பாடு தமிழுக்கே சொந்தமென்பதை பறைசாற்ற தொல்லியல் ஆராய்ச்சிகளை அசைக்கமுடியாத சான்றுகளுடன் வடித்துள்ளார்.

7 ஆண்டுகளுக்கு முன்பு சிந்துவெளி பண்பாட்டில் 'திராவிட அடித்தளம்' என்று ஒரு நூலை எழுதிய அவர், இப்போது 'ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை' என்ற நூலை வெளியிட்டுள்ளார். இது அவர் 3 ஆண்டுகளுக்கு முன்னால் 'சிந்து முதல் வைகை வரையிலான நாகரிகத்தின் பயணம்' என்று எழுதிய ஆங்கில நூலின் தமிழ் வடிவமாகும். இந்த நூலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு புகழாரம் சூட்டினார்.

சிந்து பண்பாடு என்பது 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றால், அங்கு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ்தான் என்பதை ஆய்ந்து இந்த நூலில் சொல்லியிருக்கிறார். சிந்துவெளி பண்பாட்டுக்கு சங்க இலக்கியம்தான் திறவுகோல் என்பதையும், அங்கு வாழ்ந்த மக்கள் சங்ககால தமிழரின் மூதாதையர்கள் என்பதையும் சான்றுகளோடு தன் நூலில் விளக்கியுள்ளார். சிந்து பண்பாடு என்பது குஜராத், மராட்டியம், ராஜஸ்தான் மற்றும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரானில் சில பகுதிகளையும் உள்ளடக்கியது, அந்த பகுதிகளில் சங்க இலக்கியங்கள் மற்றும் தொல் தமிழ் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் பல்வேறு இடப்பெயர்களும், நில தலைவர்கள் மற்றும் தனி மனிதர்களின் பெயர்களும் அச்சு அசலாக இன்றுவரை நிலைத்து இருப்பதை 'கொற்கை வஞ்சி தொண்டி வளாகம்' என்ற புது சான்று தொகுப்பு மூலம் நிலைநாட்டியுள்ளார்.

சிந்துவெளி விட்ட இடமும், சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே, என்று பொதுவெளியில் தொடர்ந்து பேசியும், எழுதியும் வரும் ஆர்.பாலகிருஷ்ணன், தன் ஆய்வு முடிவுரையாக 'சிந்துவெளி பண்பாட்டுக்கு சொந்தம் கொண்டாடும் தகுதி தமிழுக்கே உண்டு' என்று கூறி பல அரிய தகவல்களை தனது ஆய்வுகளின் அடிப்படையில் முதல்-அமைச்சர் வெளியிட்ட அவரது நூலில் மிக விளக்கமாக கூறியுள்ளார்.


Next Story