எங்கெங்கு காணினும் சக்தியடா !
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த திட்டங்கள் பெண்களுக்கு அதிக அதிகாரம் வழங்க வைத்துள்ளது.
சென்னை,
பாவேந்தர் பாரதிதாசனின் முதல் பாட்டு சக்தி பாட்டு என்று அழைக்கப்படுகிறது. மகாகவி பாரதியாரின் ஏகோபித்த அன்பைப்பெற்ற பாரதிதாசன் அடிக்கடி அவர் வீட்டுக்கு சென்று அவரோடு அளவளாவுவதுண்டு. ஒரு நாள் அங்கு சென்றபோது பல தமிழறிஞர்கள் இருந்தனர். அப்போது, பாரதியார் பாரதிதாசனின் இயற்பெயரான கனகசுப்பு ரத்தினம் என்று குறிப்பிட்டு, இவர் கவிதை எழுதுவதில் வல்லவர் என்றார். உடனே அங்கிருந்த தமிழறிஞர்கள் ஒரு கவிதை புனையுமாறு கேட்டனர். அவ்வளவுதான், அவரது முதல் பாட்டு மடை திறந்த வெள்ளம் போல பாய்ந்தோடியது. "எங்கெங்கு காணினும் சக்தியடா- தம்பி ஏழுகடல் அவள் வண்ணமடா" என்று தொடங்கி, அவர் அன்று எழுதிய பாடல் இன்றளவும் பெண்ணின் பெருமையை பறைசாற்றுகிறது.
தந்தை பெரியார் பெண்களின் முன்னேற்றம் குறித்து ஆற்றிய கர்ஜனை கருத்துகள் பெண்கள் முன்னேற்றத்துக்கு அடிகோலின. "பெண் ஏன் அடிமையானாள்?" என்று 90 ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய நூல் இன்றும் பெண்களின் முன்னேற்றத்துக்கு ஒரு அடித்தளமாக இருக்கிறது. மறைந்த முதல்-அமைச்சர்கள் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் வித்திட்ட பெண்களுக்கான பல முன்னேற்ற திட்டங்கள் அவர்களை அனைத்து துறைகளிலும் கோலோச்ச வைத்துள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த திட்டங்கள் பெண்களுக்கு அதிக அதிகாரம் வழங்க வைத்துள்ளது. திட்டங்கள் இருந்தால் மட்டும் போதாது, அதை நடைமுறைப்படுத்த பெண்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும். அந்த வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் கொடுத்த வாய்ப்பு இன்று அவர்களை மின்ன வைத்துள்ளது. அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீட்டை 1989-ம் ஆண்டு கொண்டுவந்தவர், கலைஞர் கருணாநிதி. அப்போது முதல் அரசு பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீட்டில் பணியில் சேர்ந்த ஏராளமான பெண்கள் இப்போது பதவி உயர்வு பெற்று உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். இதுபோல, உள்ளாட்சி அமைப்புகளில் அனைத்து பதவிகளிலும் 30 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தவரும் கலைஞர் கருணாநிதிதான். அதை 50 சதவீதமாக உயர்த்தியவர் ஜெயலலிதா.
இப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் எங்கெங்கு காணினும் பெண்களடா என்பதுபோல, 38 மாவட்ட கலெக்டர்களில் 17 பேர் பெண்கள். தமிழ்நாட்டில் பணிபுரியும் 323 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் 96 பேர் பெண்கள். உள்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அமுதா திறம்பட பணியாற்றி வருகிறார். இதுபோல, 10 முக்கிய துறைகளின் செயலாளராக பெண்களைத்தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். இவ்வளவு ஏன், முதல்-அமைச்சரின் செயலாளர்களில் ஒருவர் பெண். தமிழ்நாடு தேர்தல் ஆணையராக சமீபத்தில் ஜோதி நிர்மலாசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோல, காவல் துறையில் அனைத்து மட்டங்களிலும் குறிப்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்பட உயர் பதவிகள் அனைத்திலும் பெண் அதிகாரிகளே மிடுக்குடன் பணிபுரிகிறார்கள்.
அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு இருப்பதால், அவர்களுக்கு வேலைவாய்ப்பும் எளிதாக கிடைக்கிறது. இப்படி நீதித்துறை உள்பட அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டில் பெண்கள் ஒளி வீசிக்கொண்டு இருக்கிறார்கள். பிரதமர் நரேந்திரமோடியின் கனவான பெண் சக்தி தமிழ்நாட்டில் நனவாகிவிட்டது. கீழ்மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை அனைத்து பதவிகளிலும் பெண்கள் மிடுக்குடன் பணியாற்றுவதை மகிழ்வுடன் பார்க்கும்போது, "எங்கெங்கு காணினும் சக்தியடா" என்று பாரதிதாசன் பாடிய பாடல்தான் அனைவரின் நினைவுக்கும் வருகிறது.