வரவேற்கத்தக்க இ-பாஸ் தீர்ப்பு !
கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது.
கோடை காலத்தில் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், எல்லோருமே குடும்பத்துடன் சுற்றுலா செல்ல விரும்புவார்கள். வெயிலுக்கு இதமாக இருக்கும் மலைப்பிரதேசங்கள்தான் அவர்களின் முதல் தேர்வாக இருக்கும். அந்த வகையில், கோடை வாசஸ்தலங்களான ஊட்டி, கொடைக்கானலுக்கு தற்போது நிறைய சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருவதால், மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஊட்டிக்கு சாதாரண நேரங்களில் தினமும் 2 ஆயிரமாக இருந்த வாகனங்களின் வருகை எண்ணிக்கை, தற்போதைய சீசனில் 20 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்து இருப்பதாக அரசு கணக்கு கொடுத்துள்ளது. அதுபோல, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் தற்போது 15 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது.
இப்படி வாகனங்கள் அணிவகுத்து செல்வதால், ஊட்டி, கொடைக்கானல் மலைப்பாதைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பலர் மணிக்கணக்கில் காத்திருக்க முடியாமல், மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பி விடுகின்றனர். அரசு தகவலின்படி கொடைக்கானலில் தினமும் 13,700 பேர் தங்குவதற்குத்தான் ஓட்டல்களில் அறைகள் இருக்கின்றன. ஊட்டியிலும் மொத்தம் உள்ள 5,620 அறைகளில் 20 ஆயிரம் பேர்தான் தங்க முடியும். ஆனால், இரு இடங்களிலும் இப்போது அதைவிட பல மடங்கு சுற்றுலா பயணிகள் வந்து குவிகிறார்கள். "இதனால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவேண்டும். இவ்வளவு பேர் வருவதால் உள்ளூர் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது" என்று சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி ஆகியோர் அளித்த தீர்ப்பு ஒரு நல்ல வழியை காட்டியுள்ளது.
"இந்த மலைப்பிரதேசங்களில் எவ்வளவு பேர் தங்கவும், வந்து போகவும் முடியும் என்பதற்கான ஒரு ஆய்வை சென்னை ஐ.ஐ.டி.யும், பெங்களூரு ஐ.ஐ.எம்-ம் மேற்கொண்டு விரிவான அறிக்கை தரவேண்டும். அதற்கு இடைப்பட்ட காலத்தில் இ-பாஸ் முறையை அமல்படுத்தவேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளனர். இ-பாஸ் என்பது கொரோனா காலத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்ட எல்லைக்குள் செல்வதற்காக வழங்கப்பட்டதாகும். இப்போது அதே நடைமுறை ஊட்டி, கொடைக்கானலிலும் பின்பற்றப்பட இருக்கிறது. இ-பாஸ் பெறுவதற்கு, வாகனங்களின் விவரம், எத்தனை பேர் செல்கிறார்கள் என்ற விவரங்களை அளிக்கவேண்டும். இதில், உள்ளூர் மக்களுக்கும், சரக்கு வாகனங்கள் மற்றும் விவசாய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பரீட்சார்த்த முறையில் வருகிற 7-ந்தேதி முதல் 30-ந்தேதிவரை இதை அமல்படுத்தவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இது வரவேற்கத்தகுந்த தீர்ப்பாகும். ஆனால், ஒரு நாளைக்கு எத்தனை பேர் வரலாம் என்பதற்கு கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை. அரசு நடைமுறைகளை வெளியிடும்போது, அந்தக் கட்டுப்பாடு பற்றி தெரியும். கட்டமைப்பு வசதி இல்லாமல் இவ்வளவு பேர் வருவதால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இப்போதே அங்கு தண்ணீர் பஞ்சம் அதிகமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில், மக்கள் அதிகமாக குவிந்தால் எப்படி சமாளிக்க முடியும்?, கட்டமைப்பு வசதியில்லாமல் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் இயற்கை வளமும் பெரிதும் பாதிக்கப்படும். ஊருக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை சமாளிக்க, தனியார் வாகனங்களுக்கு அனுமதி மறுத்து பேட்டரி வாகனங்களை அரசு இயக்கவேண்டும் என்ற யோசனையும் கூறப்படுகிறது. மேலும், இந்த இ-பாஸ் நடைமுறையை சீசன் நேரத்தில் மட்டுமல்லாமல், ஆண்டு முழுவதும் நடைமுறைப்படுத்தவேண்டும்.