வாகன சோதனையா...? வாட்டி வதைக்கும் வேதனையா...?


வாகன சோதனையா...? வாட்டி வதைக்கும் வேதனையா...?
x

இதுவரை நடந்த வாகன சோதனைகளில் வாக்காளர்களுக்கு வினியோகிக்க பெருமளவில் கோடிக்கணக்கான ரூபாயோ, பரிசு பொருட்களோ பிடிபட்டது என்றால் அதுதான் இல்லை.

சென்னை,

18-வது மக்களவைக்கான 543 தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 19-ந்தேதி முதல் 7 கட்டங்களாக ஜூன் 1-ந்தேதி வரை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் தேதியை கடந்த மாதம் 16-ந்தேதி தேர்தல் கமிஷன் அறிவித்தவுடனேயே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டது. நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன் பல கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துவிட்டாலும், சாதாரண பொதுமக்கள் அதாவது சாமானியர்களையும் பெரிதும் பாதிப்பது ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எங்கும் கொண்டு போகமுடியாதபடி செய்யும் தேர்தல் பறக்கும் படையின் வாகன சோதனைதான்.

தேர்தல் பணி என்றாலே இது மட்டும்தான் என்பது போல, இருசக்கர வாகனங்கள் தொடங்கி அனைத்து வாகனங்களையும் இந்த பறக்கும் படையினர் வாகன சோதனை என்ற பெயரில் பாடாய்படுத்துகிறார்கள். இந்த சோதனையின் நோக்கம் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருள் முறைகேடாக வழங்கப்படுவதை தடுக்கத்தான் என்று கூறப்படுகிறது. நோக்கம் நல்ல நோக்கம் என்றாலும் அதை செயல்படுத்த அரசியல் கட்சிகள் பக்கம் பார்வை போகாமல், அப்பாவி மக்களை வாட்டி வதைத்து அவர்களை வருத்தப்படுத்துவதுதான் ஏற்புடையதாக இல்லை.

இதுவரை நடந்த வாகன சோதனைகளில் வாக்காளர்களுக்கு வினியோகிக்க பெருமளவில் கோடிக்கணக்கான ரூபாயோ, பரிசு பொருட்களோ பிடிபட்டது என்றால் அதுதான் இல்லை. சிறு தொழில் செய்பவர்கள், ஆடு-மாடு வாங்க செல்பவர்கள், திருமணத்துக்காக நகை வாங்க செல்பவர்கள், கடைகளுக்கு தேவையான பொருட்களை வாங்க செல்லும் வியாபாரிகள், சுற்றுலா வருபவர்கள்தான் மாட்டிக்கொள்கிறார்கள். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி 2 குழந்தைகளுடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்து கொண்டிருந்தபோது, அவர்கள் வந்த வாடகைக்காரை சோதனையிட்ட பறக்கும் படையினர், அந்த தம்பதி செலவுக்காக வைத்திருந்த ரூ.69,400-ஐ பறிமுதல் செய்தவுடன் அந்த தம்பதி குறிப்பாக இல்லத்தரசி கண்ணீர் விட்டு அழுது கதறிய காட்சி மனதை உருக்கியது.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள மாட்டு சந்தைக்கு 3 விவசாயிகள் தங்களின் 3 மாடுகளைக் கொண்டு வந்து விற்றுவிட்டு, அந்த பணமான ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 500-ஐ உசிலம்பட்டி அருகே உள்ள தங்கள் கிராமத்துக்கு ஒரு சரக்கு வாகனத்தில் செல்லும்போது, பறக்கும் படையினர் அந்த வாகனத்தை சோதனையிட்டு அந்த பணத்தை பறிமுதல் செய்து விட்டனர். சென்னையில் பணி முடித்து வீடு திரும்பிய டாக்டரிடம் இருந்து ரூ.76 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இப்படி எங்கு சென்றாலும் பறக்கும் படையால் ஏற்படும் தொல்லைக்கு அளவேயில்லை.

இந்த சோதனையால் தங்கநகை தொழிலே நசிந்துவிட்டது என்று அதன் உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். வார சந்தைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. தேர்தல் வருகிறது என்பதால் மக்களை இவ்வளவு பாடாய்படுத்துவது எந்த வகையில் நியாயம்? அரசியல் கட்சிகள் பணம் கொண்டு போவதை தகுந்த தகவல்களோடு பிடிப்பதில் எந்தவித ஆட்சேபமும் இல்லை. ஆனால் அந்த பெயரில் தேவையற்ற துன்பங்களை பொதுமக்களுக்கு கொடுப்பதுதான் நிறுத்தப்பட வேண்டும். மேலும் ஏப்ரல் 19-ந்தேதி தேர்தல் முடிந்தவுடனேயே நடத்தை விதிகள் விலக்கிக்கொள்வதற்கு பதிலாக ஜூன் 6-ந்தேதி வரை அமலில் இருப்பதையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏப்ரல் 19-ந்தேதியுடன் இந்த துன்பம் மறையட்டும்.


Next Story