எதிர்பாராத பெருவெள்ளம் எந்த நேரத்திலும் வரலாம்!
உத்தரகாண்ட் போன்ற வடமாநிலங்களில் வழக்கமாக ஏற்படும் பெருவெள்ளம், இந்த ஆண்டு தமிழ்நாட்டையும் விட்டுவைக்கவில்லை.
உத்தரகாண்ட் போன்ற வடமாநிலங்களில் வழக்கமாக ஏற்படும் பெருவெள்ளம், இந்த ஆண்டு தமிழ்நாட்டையும் விட்டுவைக்கவில்லை. கடந்த 3, 4-ந்தேதிகளில் 'மிக்ஜம்' புயல் மழையால், சென்னையில் பெரும்பாதிப்பு ஏற்பட்டது. சென்னை மட்டுமல்லாமல், அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களிலும் பலத்த சேதம் ஏற்பட்டது. சென்னையில் பெரும்பாலான இடங்கள் தண்ணீரில் மூழ்கின. தலைநகரமாம் சென்னையிலேயே பல இடங்களில் படகுகள் மூலமாகத்தான் மீட்புப் பணிகள் நடந்தன. ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரண நிதி அரசால் வழங்கப்பட்டுவருகிறது. சென்னையில் 47 ஆண்டுகளாக இதுபோல ஒரு மழை பெய்ததில்லை. 'பட்ட காலிலேயே படும்' என்பது போல, சென்னையில் மழை ஓய்ந்த நிலையில், வரலாறு காணாத அளவில் பெருமழை, பேய் மழை தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்தது. வானமே திறந்துவிட்டதோ என்பதுபோல, கடந்த சனிக்கிழமை இரவு முதல் பெய்யத்தொடங்கிய மழை, திங்கட்கிழமை காலை வரை கொட்டோ கொட்டென்று கொட்டியது. தெருக்களில் எல்லாம் ஆறுபோல தண்ணீர் ஓடியது. தாமிரபரணி ஆறு கரைபுரண்டு ஊருக்குள் புகுந்தது. மின்சாரமும் தடைபட்டது. அனைத்து அலுவல்களும், தொழில்களும் தடைபட்டன. சாலையில் எந்த வாகனமும் போகமுடியாத நிலையில், படகுகள்தான் உணவு பொட்டலங்களை எடுத்துக்கொண்டும், மீட்பு நடவடிக்கைகளுக்காகவும் சென்றன.
ரெயில் போக்குவரத்து மட்டுமல்லாமல், பஸ் போக்குவரத்து, விமான சேவையும் நிறுத்தப்பட்டன. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரிக்கு செல்ல வேண்டிய ரெயில்கள் வழியிலேயே ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு சனிக்கிழமை மாலை புறப்பட்ட ரெயில், பெருவெள்ளத்தால் தண்டவாளங்கள் அடித்து செல்லப்பட்ட நிலையில், ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த ரெயிலில் வந்த பயணிகள் இறங்கி எங்கும் செல்ல முடியாதவாறு தண்ணீர் சூழ்ந்து இருந்ததால், 500 பயணிகளும் ரெயிலிலேயே உணவு இல்லாமல் வாடினர். நேற்று காலையில்தான் ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு, அனைவரும் மீட்கப்பட்டு வாஞ்சி மணியாச்சியில் இருந்து சிறப்பு ரெயிலில் அழைத்து வரப்படுகிறார்கள்.
வெள்ளச் செய்தி பற்றி கேள்விப்பட்டதும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலத்தில் இருந்து கார் மூலம் திருநெல்வேலி விரைந்தார். தங்கம் தென்னரசு உள்பட 11 அமைச்சர்கள், 18 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி சென்று இருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு செல்கிறார். இன்னும் வெள்ளம் வடியவில்லை. பிரதமரிடம் முதல்-அமைச்சர் வெள்ள நிவாரண நிதி கேட்டிருக்கிறார். மத்திய குழு இந்த 4 மாவட்டங்களிலும் வெள்ள சேதத்தை பார்வையிட வருகிறது. மத்திய அரசாங்கம் தாராளமாக நிதி வழங்கவேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
இத்தகைய வெள்ளம் முடிந்த கதையல்ல, தொடர்கதையாக வரும்காலங்களிலும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் சொல்லியதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பருவநிலை மாற்றம், பூமி வெப்பமயமாதல் ஆகிய காரணங்களால், வடகிழக்கு பருவமழை காலத்தில் இனி எதிர்பாராத பெருமழை எந்த நேரத்திலும் வரும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதால், கடலோர மாவட்டங்கள் அனைத்தும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எல்லா ஆண்டுகளிலும் தயார் நிலையில் இருக்கவேண்டும். சென்னையில் மழைக்காக மேம்படுத்தப்படும் உள்கட்டமைப்பு வசதிகள், வடிகால் பணிகள் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படவேண்டும். அனைத்து நீர் நிலைகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ஆழப்படுத்தப்படவேண்டும்.