இதுதான் மோடி மேஜிக்!


இதுதான் மோடி மேஜிக்!
x

பிரதமர் நரேந்திரமோடி ஆட்சியையும், கட்சியையும் நடத்திச்செல்லும் விதம் மிகவும் வித்தியாசமானது.

பிரதமர் நரேந்திரமோடி ஆட்சியையும், கட்சியையும் நடத்திச்செல்லும் விதம் மிகவும் வித்தியாசமானது. இதுதான் 'மோடி மேஜிக்' என்று சொல்லும் வகையில் இரண்டிலுமே தன்னுடைய முத்திரையை பதித்து வருகிறார். இப்படித்தான் செய்யப்போகிறார், இப்படித்தான் முடிவெடுப்பார் என்று யாரும் அறுதியிட்டு சொல்லமுடியாது. அவர் மத்திய மந்திரிகளையோ, பா.ஜ.க முதல்-மந்திரிகளையோ தேர்ந்தெடுக்கும்போது சாதியைப் பார்ப்பதில்லை.

மராட்டியத்துக்கு முதல்-மந்திரியாக அவர் தேவேந்திர பட்னாவிசை தேர்ந்தெடுத்தார். அவர் ஒரு நாக்பூர் பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர். மராட்டியர்கள் பெரும்பான்மையாக உள்ள மராட்டியத்தில் ஒரு பிராமணரை தேர்ந்தெடுத்தார். அரியானா முதல்-மந்திரியாக பஞ்சாபை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டரான, முதல்முறை எம்.எல்.ஏ.வாக தேர்தலில் வெற்றிபெற்ற மனோகர்லால் கட்டாரை தேர்ந்தெடுத்தார். உத்தரபிரதேசத்தில் எம்.எல்.ஏ.வாக இல்லாத யோகி ஆதித்யநாத்தை கடைசி நேரத்தில் முதல்-மந்திரியாக்கினார். குஜராத்தில் கூட முதல்-மந்திரியாக இருந்த ஆனந்திபென் பட்டேல், உத்தரபிரதேச கவர்னரான பிறகு, அவர் சார்ந்த பட்டேல் சமுதாயத்தினர் புதிய முதல்-மந்திரியாகவில்லை. யாரும் எதிர்பாராதவாறு, ஜைன சமுதாயத்தை சேர்ந்த விஜய் ரூபானி முதல்-மந்திரியாக்கப்பட்டார். இது குஜராத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இப்போது நாட்டில் 12 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது. 12 முதல்-மந்திரிகளில் ஒருவர் மட்டும் பிராமணர். 2 பேர் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர். ஒருவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர். மீதமுள்ளவர்கள் பொதுப்பட்டியலில் உள்ள உயர் சாதியினர்.

பெண்கள் ஆதரவு அதிகமுள்ள பா.ஜ.க.வில் பெண் முதல்-மந்திரிகள் யாருமில்லை என்பது எந்தவித சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. சமீபத்தில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. அமோக வெற்றிபெற்றது. இந்த மாநிலங்களில் முதல்-மந்திரி வேட்பாளர்கள் பெயர் எதுவும் அறிவிக்கப்படாவிட்டாலும், மக்கள் பிரதமர் நரேந்திரமோடியை மனதில் வைத்தே வாக்களித்தனர். தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு ராஜஸ்தானில் இருமுறை முதல்-மந்திரியாக இருந்த ராஜ குடும்பத்தை சேர்ந்த வசுந்தரா ராஜே சிந்தியாவும், மத்திய பிரதேசத்தில் 4 முறை முதல்-மந்திரியாக இருந்த சிவராஜ்சிங் சவுகானும், சத்தீஷ்காரில் 3 முறை முதல்-மந்திரியாக இருந்த ரமன்சிங்கும் முதல்-மந்திரிகளாக பதவியேற்பார்கள் என்று நாடே எதிர்பார்த்தது.

ஆனால் நாடு போட்ட கணக்கு ஒன்று, மோடியின் கணக்கு மற்றொன்று என்பதுபோல ராஜஸ்தானில் ராஜ்புத் சமுதாயத்தை சேர்ந்தவர் இல்லாமல், இந்தி பேசும் மாநிலங்களில் முதல்முறையாக பிராமண சமுதாயத்தை சேர்ந்த பஜன்லால் சர்மா பா.ஜ.க. முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ளார். மத்திய பிரதேசத்தில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மோகன்யாதவ் பெயர், சிவராஜ்சிங் சவுகானால் முன்மொழியப்பட்டுள்ளது. தன் தந்தையின் டீ-பஜ்ஜி கடையில் அவருக்கு உதவியாக தன் இளமை காலத்தில் பணியாற்றிய மோகன் யாதவ் இன்று மத்தியபிரதேச முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ளார்.

இதுபோல சத்தீஷ்கார் முதல்-மந்திரியாக இதுவரையில் இந்த மாநிலத்தில் இல்லாத வகையில் முதல்முறையாக மலைவாழ் சமுதாயத்தை சேர்ந்த விஷ்ணு தியோ சாய் முதல்-மந்திரியாகியிருக்கிறார். இந்த 3 மாநிலங்களிலும், உத்தரபிரதேசத்தைப்போல தலா 2 துணை முதல்-மந்திரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆக, பா.ஜ.க.வில் பிரதமர் நரேந்திர மோடி செய்வதுதான் தேர்வு, யாரும் எதிர்பார்க்காதவர்களை எந்த பதவிக்கும் தேர்வுசெய்ய அவரால் முடியும், அதை எல்லோரும் மனதார ஏற்றுக்கொள்வார்கள் என்பதை இந்த 3 மாநிலங்களிலும் நடந்த முதல்-மந்திரிகள், துணை முதல்-மந்திரிகள் தேர்வு நிரூபித்துக்காட்டியுள்ளது.


Next Story