மாநில நெடுஞ்சாலைகளுக்கு சுங்கக் கட்டணம் கூடாது


மாநில நெடுஞ்சாலைகளுக்கு சுங்கக் கட்டணம் கூடாது
x

தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும்போது, ஆங்காங்கே சுங்கச்சாவடிகளில் நிற்க வேண்டியது இருக்கிறது.

தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும்போது, ஆங்காங்கே சுங்கச்சாவடிகளில் நிற்க வேண்டியது இருக்கிறது. அங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கிறார்கள். இதனால், பல சுங்கச்சாவடிகளில் மோட்டார் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு கியூவில் நிற்கவேண்டிய கட்டாயம் இருப்பதால், பயண நேரம் அதிகமாகிறது.

இப்போது 'பாஸ்ட்டேக்' என்று கூறப்படும் மின்னணு முறையில் வாகனங்கள் அதற்குரிய வில்லையை முன்புற கண்ணாடியில் ஒட்டிக்கொள்வதால், பணம் கட்டாமல், காத்திருக்காமல் செல்ல முடிகிறது. இத்தகைய சுங்கச்சாவடிகளில் கழிப்பறை வசதி, முதல் உதவி சிகிச்சை மருந்து வசதி, டயர்களுக்கு காற்றடிக்கும் வசதி உள்பட பல வசதிகள் இருக்க வேண்டும். மேலும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் அமைக்கப்படும் சாலைகளை உருவாக்கும் நிறுவனங்கள், அந்த செலவு தொகையை அந்த வழியாக செல்லும் வாகனங்களிடம் இருந்து வசூலித்துக்கொள்ள அனுமதி அளிக்கும் வகையில்தான், அவர்களுக்கு இதுபோல சுங்கச்சாவடி அமைத்துக்கொள்ள ஒப்புதல் வழங்கப்படுகிறது. சாலையை அமைத்ததற்கான அனுமதிக்கப்பட்ட முழு தொகையை வசூலித்தவுடன், இவ்வாறு போடப்பட்ட சாலைகளை பழுது பார்க்கவும், பராமரிக்கவும் முன்பு வசூலித்த கட்டணத்தில் 40 சதவீத கட்டணத்தை வசூலித்துக்கொள்ளலாம் என்றும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், காலம்தான் கடக்கிறதே தவிர, சுங்கச்சாவடி கட்டணத்தை குறைத்ததாக தெரியவில்லையே என்பது வாகன ஓட்டிகளின் மனக்குறை.

சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் ஆண்டுதோறும் உயர்த்தப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 53 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இதில் 30 சுங்கச்சாவடிகளுக்கு ஆண்டுதோறும் ஏப்ரல் 1-ந்தேதி முதலும், 20 சுங்கச்சாவடிகளுக்கு செப்டம்பர் 1-ந்தேதி முதலும் சுங்கக் கட்டணம் சீரமைக்கப்படுகிறது. 3 சுங்கச்சாவடிகளில் இன்னும் வசூலிக்க தொடங்கவில்லை.

இப்போது கடந்த 1-ந்தேதி முதல் 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இதுவரை செலுத்திய சுங்கக் கட்டணத்தைவிட மிக அதிகமாக செலுத்த வேண்டியது இருக்கிறதே, இதைக் குறைக்கக்கூடாதா? என்பது வாகன ஓட்டிகளின் ஆதங்கமாக இருக்கிறது. பொதுவாக மாநில நெடுஞ்சாலைகள் தமிழக அரசால் போடப்படுகிறது. இதில் பல நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைக்காக மத்திய அரசாங்கம் கேட்டு எடுத்துக்கொள்கிறது. தமிழக அரசின் நெடுஞ்சாலையின் அகலம் 7 மீட்டர் ஆகும். அதன்பிறகு தமிழக அரசு போட்ட சாலையின் இருபுறங்களிலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை தலா ஒன்றரை மீட்டர், அதாவது மொத்தம் 3 மீட்டர் விரிவாக்கம் செய்து பராமரிக்கிறது.

ஏற்கனவே, தமிழக அரசு 7 மீட்டர் அகலத்துக்கு போட்ட சாலைகளை எடுத்துக்கொண்டு கூடுதலாக 3 மீட்டர் அகலம் போட்டு, இவ்வாறு விரிவாக்கம் செய்யப்பட்ட சாலைகளில், சுங்கக்சாவடிகள் இருக்கக்கூடாது, சுங்கக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று முன்தினம் பெங்களூருவில் நடந்த மாநில நெடுஞ்சாலைத்துறை மந்திரிகள் மாநாட்டில் பேசியிருக்கிறார். இதற்கு முன்பு மத்திய மந்திரி நிதின் கட்காரியிடம் அவர் பேசும்போது, நகரங்கள், மாநகராட்சிகளையொட்டி, 10 கிலோ மீட்டருக்குள் சுங்கச்சாவடி இருக்கக்கூடாது என்பது விதி. ஆனால், தமிழ்நாட்டில் இவ்வாறு 10 கிலோ மீட்டருக்குள் 10 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. அந்த சுங்கச்சாவடிகளை எடுக்க வேண்டும் என்று கடிதங்கள் கொடுத்து வேண்டுகோள் விடுத்தார்.

இதை நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி நிதின் கட்காரி குறிப்பிட்டு, இனி 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி இருக்கும் என்று மிகுந்த பயனளிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இது தமிழக அரசுக்கு, குறிப்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலுவுக்கு கிடைத்த வெற்றியாகும். சுங்கச்சாவடிகள் அமைப்பதில் தவறில்லை. ஆனால் சாலைகள் தரமாக பராமரிக்கப்பட வேண்டும், அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது, சுங்கச்சாவடிகளில் உயர் வசதிகள் வேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாக இருக்கிறது.


Next Story