மாநிலம் முழுவதும் ஜவுளி பூங்காக்கள்!


மாநிலம் முழுவதும் ஜவுளி பூங்காக்கள்!
x

ஜவுளித்துறையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழ்ந்திடும் வகையில், மாநிலம் முழுவதிலும் தமிழக அரசு ஜவுளிப்பூங்காக்களை உருவாக்கிட முயற்சித்து வருகிறது.

தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளெல்லாம் காற்றோடு கலந்த கீதங்களாக போய்விடக்கூடாது, அனைத்தும் நிறைவேற்றப்பட்டே ஆகவேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிக தீவிரமாக உள்ளார். சட்டசபை தேர்தலை சந்தித்த நேரத்தில், 13-3-2021 அன்று அவர் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அந்த தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை அளித்திருந்தார். பதவியேற்ற முதல் நாளிலேயே 5 வாக்குறுதிகளை நிறைவேற்றி நல்ல தொடக்கத்தை காண்பித்தார்.

தேர்தல் அறிக்கையில் நெசவாளர் நலன் என்ற தலைப்பில் 137 முதல் 150 வரை எண்கள் கொண்ட 14 வாக்குறுதிகளை அளித்திருந்தார். 145-வது வாக்குறுதியில், "கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் 2 மாதத்துக்கு 200 யூனிட் என்பது 300 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும். விசைத்தறிக்கு 2 மாதத்திற்கு 750 யூனிட்டாக உள்ள இலவச மின்சாரம் ஆயிரம் யூனிட்டாக உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும். இச்சலுகை விசைத்தறி பாய் நெசவு தொழிலுக்கும் அளிக்கப்படும். விசைத்தறி தொழில் வளர்ச்சிக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் அரசு முழுமையாக அளிக்கும்" என்று கூறியிருந்தார்.

2 மாதத்துக்கு ஒருமுறை கைத்தறி நெசவாளர்களுக்கு 100 யூனிட்டுகள் வரையும், விசைத்தறி தொழிலாளர்களுக்கு 500 யூனிட்டுகள் வரையிலும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை 2006-ம் ஆண்டு வழங்கியது, மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதிதான். அவர் தொடங்கிவைத்த திட்டத்துக்கு மெருகூட்டி, நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையிலும், தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை நிறைவேற்றும் வகையிலும், எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஒரு அரசாணை மூலம் விலையில்லா மின்சாரம் கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட்டுகள் என்பது 300 யூனிட்டுகளாகவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட்டுகள் என்பது ஆயிரம் யூனிட்டுகளாகவும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 73 ஆயிரத்து 642 கைத்தறி நெசவாளர்களும், ஒரு லட்சத்து 68 ஆயிரம் விசைத்தறி நெசவாளர்களும் பயனடைவார்கள்.

விசைத்தறி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ஆயிரம் யூனிட்டாக உயர்த்தி வழங்கப்பட்டதன் மூலம் 6 தறிகள் வரை வைத்து ஓட்டும் ஏழை, எளிய நெசவாளர்கள் மின்சார கட்டணமே இல்லாமல் தொழில் நடத்த முடியும் அளவுக்கு நல்ல சலுகைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். இதுமட்டுமல்லாமல், 1000 யூனிட்டுகளுக்கு மேல் விசைத்தறிகளுக்கான கட்டணம் 50 சதவீதம் குறைத்து, யூனிட்டுக்கு 70 காசு மட்டுமே என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக கோவை-கருத்தம்பட்டியில் அவருக்கு நெசவாளர்கள் ஒன்றாக இணைந்து நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தினர். எந்த கூட்டத்திலும் ஏதாவது அறிவிப்பை வெளியிடுவதை வழக்கமாகக்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த விழாவிலும் புதிய அறிவிப்பை வெளியிட்டார்.

அதாவது, ஜவுளித்துறையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழ்ந்திடும் வகையில், மாநிலம் முழுவதிலும் தமிழக அரசு ஜவுளிப்பூங்காக்களை உருவாக்கிட முயற்சித்து வருகிறது. அந்தவகையில், சேலத்தில் அடுத்து ஒரு ஜவுளிப்பூங்கா அமைக்கப்பட இருக்கிறது என்ற நெசவாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் பல புதிய வேலை வாய்ப்புகளை அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து விருதுநகரிலும் ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டத்தை மத்திய அரசாங்கம் அறிவித்து அந்த பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதிலும் பல இடங்களில் ஜவுளிப்பூங்காக்கள் அமைத்தால், நெசவுத்தொழில், ஜவுளித்தொழில் ஆகியவை புத்துயிர்பெறும். நெசவாளர்கள் புது வாழ்வு பெறுவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.


Next Story