செஸ் விளையாட்டில் கொடிகட்டிப் பறக்கிறது தமிழ்நாடு !


செஸ் விளையாட்டில் கொடிகட்டிப் பறக்கிறது தமிழ்நாடு !
x

உலக சாம்பியனுடன் மோதும் வீரரை தேர்வு செய்வதற்கு, கேன்டிடேட் செஸ் தொடர் கனடாவின் டொரோன்டோ நகரில் கடந்த 3-ந் தேதி தொடங்கியது.

சென்னை,

மூளைக்கு வேலை கொடுக்கும் செஸ் விளையாட்டு, இன்று நேற்றல்ல, கி.பி. 6-ம் நூற்றாண்டு முதலே இந்தியாவில் விளையாடப்பட்டு வருகிறது. மன்னர்கள் ஆட்சி காலமான அப்போது, சதுரங்கம் என்ற பெயரில் விளையாடப்பட்டது. போரில் ராணுவ வியூகங்களை வகுப்பதற்காக இந்த விளையாட்டு பயன்படுத்தப்பட்டது. காலப்போக்கில் மேற்கத்திய நாடுகளுக்கு பரவிய செஸ் விளையாட்டு, நவீன நுட்பங்களோடு அபரிமிதமான வளர்ச்சியை கண்டது.

நமது மூளைக்கு சிறந்த பயிற்சியை கொடுக்கும் செஸ் விளையாட்டை நன்றாக விளையாடத் தெரிந்தவர்களுக்கு நினைவாற்றல் திறன் மிகவும் அதிகம் இருக்கும். அதனால் தான் இன்று ஏராளமான சிறுவர்கள் செஸ் போட்டிகளில் பங்கேற்று ஆர்வமுடன் விளையாடுவதை பார்க்க முடிகிறது.

இந்தியாவில், செஸ் இன்று மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாக திகழ்கிறது. இவற்றில் தமிழ்நாடுதான் முன்னோடியாக விளங்குகிறது என்றால் மிகையாகாது. இந்தியாவில் இருந்து இதுவரை 84 கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகியுள்ளனர். இதில் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற விஸ்வநாதன் ஆனந்தில் இருந்து பிரக்ஞானந்தா, குகேஷ், வைஷாலி வரை என 30 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது பெருமைக்குரிய விஷயம்.

2022-ம் ஆண்டு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்பட்டது. மிக குறுகிய காலத்தில் ஏற்பாடுகளை சிறப்பாக செய்து உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திக் காட்டினார். இதில், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பங்கும் அளப்பரியது. அதில் 186 நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் அளிக்கப்பட்ட வரவேற்பு, உபசரிப்பை கண்டு நெகிழ்ந்து போன வீரர், வீராங்கனைகள் ஏராளமானோர் உண்டு.

இதற்கு எல்லாம் மணிமகுடமாக, செஸ் போட்டியில் மேலும் ஒரு முத்திரையை பதித்திருக்கிறார், தமிழ்நாட்டின் குகேஷ். உலக சாம்பியனுடன் மோதும் வீரரை தேர்வு செய்வதற்கு, கேன்டிடேட் செஸ் தொடர் கனடாவின் டொரோன்டோ நகரில் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. இதில் 8 வீரர்கள் கலந்து கொண்டனர். செஸ் விளையாட்டை பற்றி நன்கு தெரிந்த எல்லோருமே உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் அமெரிக்காவின் காருனா, 3-ம் நிலை வீரர் ஹிகரு நகமுரா ஆகியோரில் ஒருவருக்கே வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று கணித்திருந்தனர்.

ஆனால், அந்த ஜாம்பவான்களை எல்லாம் அலறவிட்டார், நம்ம சென்னை நாயகன் குகேஷ். பதற்றம் இல்லாத மனநிலை, ஆட்டத்தில் தெளிவு, சாதுர்யமான நகர்வுகள் அவருக்கு வெற்றியை பரிசாக தந்தது. அதுவும் 17 வயதில் செஸ் கேன்டிடேட் போட்டியில் பட்டம் வென்றிருப்பது எளிதான ஒரு நிகழ்வு அல்ல. விஸ்வநாதன் ஆனந்த் கூட கேன்டிடேட் போட்டியில் வெல்லும் போது அவரது வயது 25-ஐ எட்டியிருந்தது.

குகேஷின் இந்த வெற்றிக்கு அவரது பெற்றோர் செய்த தியாகங்கள் ஏராளம். குறிப்பாக அவரது தந்தை டாக்டர் ரஜினிகாந்த், டாக்டர் தொழிலை நிறுத்திவிட்டு மகனுடன் உலகம் முழுவதும் பயணித்துக் கொண்டிருக்கிறார். பதின் பருவத்தில் சிகரத்தை எட்டியிருக்கும் குகேஷ், அடுத்து உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் டிங் லிரனுடன் இந்த ஆண்டின் கடைசியில் மோதப்போகிறார். அதிலும் அவர் வாகை சூடி, இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பார் என்று நம்புவோம். வாழ்த்துவோம்.


Next Story