தடைகளைத் தாண்டி வளர்ச்சியை நோக்கிய பட்ஜெட் இது


தடைகளைத் தாண்டி வளர்ச்சியை நோக்கிய பட்ஜெட் இது
x
தினத்தந்தி 20 Feb 2024 5:15 AM IST (Updated: 20 Feb 2024 5:15 AM IST)
t-max-icont-min-icon

வருகிற ஜூன் மாதத்துக்குள் 10 ஆயிரம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு இளைஞர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்து வரும் தமிழக அரசின் 4-வது பட்ஜெட்டை நேற்று சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அவருக்கும், நிதித்துறை முதன்மை செயலாளர் உதயசந்திரனுக்கும் இது முதல் பட்ஜெட்டாக இருந்தாலும், முத்திரை பதித்து விட்டார்கள். இந்த பட்ஜெட்டின் கருப்பொருள் 'தடைகளைத் தாண்டி... வளர்ச்சியை நோக்கி...' என்பதாகும்.

கடுமையான நிதி நெருக்கடியில் அரசு தத்தளித்துக் கொண்டு இருக்கும் சூழ்நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பேய் மழை, கடும் வெள்ளம், சரக்கு சேவை வரி இழப்பீட்டை மத்திய அரசாங்கம் நிறுத்தியதால் ரூ.20 ஆயிரம் கோடிக்கும் மேல் வருவாய் இழப்பு, மத்திய அரசாங்கத்தின் குறைவான நிதி பகிர்வு என்று பல தடைகளைத் தாண்டி இந்த பட்ஜெட் தன் வளர்ச்சி பயணத்தை தொடங்கி உள்ளது. மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 2023-2024-ல் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 182 கோடி ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு இருந்தது. அதாவது மொத்த வருவாயில் இது 78.9 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மழை, வெள்ளம் காரணமாக இந்த இலக்கை அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களில், அரசு இந்த பட்ஜெட்டில் எந்த குறையும் வைக்கவில்லை. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 1.15 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் அறிவிக்கப்பட்டு, மகளிர் வாழ்க்கையில் விளக்கேற்றி வைக்கிறது என்றால், இந்த பட்ஜெட்டில் அரசு பள்ளிக்கூடங்களில் படித்து கல்லூரிகளில் உயர் படிப்புகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமை பெண் திட்டம் போல, தமிழ் புதல்வன் திட்டம் மாணவர்களுக்கு புது வாழ்வை தந்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் அரசு பள்ளிக்கூடங்களில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும், வருகிற ஜூன் மாதத்துக்குள் 10 ஆயிரம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு இளைஞர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

இது தவிர சென்னை, கோயம்புத்தூரில் ஆயிரம் பேருக்கு மத்திய அரசாங்க பணியாளர் தேர்வாணையம், ரெயில்வே, வங்கி பணி தேர்வுகளுக்காக 6 மாத கால உறைவிட பயிற்சி வழங்கப்படும். தூத்துக்குடியில் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விண்வெளித் தொழில் மற்றும் உந்து சக்தி பூங்கா, கோயம்புத்தூரில் ரூ.1,000 கோடி செலவில் புதிய தகவல் தொழில் நுட்ப பூங்கா, மதுரை, திருச்சியில் டைட்டல் பூங்காக்கள், விருதுநகர், சேலத்தில் 2 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஜவுளி பூங்காக்கள், தஞ்சாவூரில் சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா போன்ற அறிவிப்புகள் தொழில் வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புக்கும் பெரிய உந்து சக்தியாக விளங்கும். கல்விக்கும், தொழில் வளர்ச்சிக்கும் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளுக்கும் அறிவிப்புகளை கொண்ட திட்டமாகவும், நிதி நிலைமையை மாநில மக்கள் அறிந்து கொள்ளும் வகையிலான, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய வரியில்லா பட்ஜெட் உரையாகவும் இது இருக்கிறது.


Next Story