தங்கக்கடத்தல் வெகுவாக குறைந்தது


தங்கக்கடத்தல் வெகுவாக குறைந்தது
x

வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை கடத்திவர தனியாக குருவிகள் என்ற கடத்தல்காரர்கள் இருக்கிறார்கள்.

இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தங்கத்துக்கு குடும்பங்களில் பெரிய மவுசு உண்டு. உலகிலேயே இந்திய குடும்பங்கள்தான் அதிக அளவில் தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கிறார்கள். இந்திய குடும்பங்கள் தங்கத்தை ஆபரணத்துக்காக மட்டுமல்லாமல், சேமிப்புக்காகவும் ஆபத்துக்கு அடகுவைத்து கடன் பெறமுடியும் என்பதால் அதை வாங்கிவைக்கிறார்கள். விவசாயிகள், சிறு வியாபாரிகள் ஆத்திர அவசரத்துக்கு கடன் வாங்க தங்கம் இருந்தால் கை மேல் பணம் கிடைக்கும் என்ற உணர்வில் தங்கத்தின் மீதே முதலீடு செய்கிறார்கள்.

சமீபத்திய ஆய்வுப்படி, உலகிலுள்ள மொத்த தங்கத்தில் 11 சதவீதம் இந்திய குடும்பங்கள் கையிருப்பில் உள்ளது. அதாவது, ஏறத்தாழ 30 ஆயிரம் டன் (ஒரு டன் என்பது ஆயிரம் கிலோ) தங்கம் இந்திய குடும்பங்களிடம் இருக்கிறது. இது அமெரிக்கா, சுவிட்சர்லாந்து மற்றும் சர்வதேச நிதியம் ஆகியவற்றின் கையிருப்பைவிட அதிகமாகும். இந்தியாவில் ஆண்டுக்கு தங்கத்தின் தேவை 800 டன். தங்கத்தின் விலை உலக தங்க கவுன்சிலால் நிர்ணயிக்கப்படுகிறது. அந்தவகையில், உலகம் முழுவதும் ஒரே விலை என்றாலும் அந்தந்த நாடுகளின் வரிவிதிப்புக்கேற்ப மக்கள் கைக்கு வரும்போது விலை மாறுபடுகிறது. வரி அதிகமாக இருக்கும் நாடுகளில் விலை அதிகமாக இருக்கிறது. வரி குறைந்த நாடுகளில் விலை குறைவாக இருக்கும் சூழ்நிலையில், அந்த நாடுகளில் இருந்து விலை அதிகமாக இருக்கும் நாடுகளுக்கு கடத்தப்படுகிறது.

இதுபோன்ற காரணங்களுக்காக இந்தியாவுக்குள் ஆண்டுதோறும் 160 டன் அளவுக்கு தங்கம் கடத்தப்பட்டதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்திருந்தது. அத்தகைய சூழ்நிலையில், இந்தியாவில் தங்கத்தின் மீது 15 சதவீத சுங்கக் கட்டணம் மற்றும் 3 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி இருந்ததால் தங்கத்தின் விலை அப்போது அதிகமாக இருந்தது. இதனால், கடத்தல்காரர்கள் வரி குறைவாக உள்ள நாடுகளில் இருந்து, குறிப்பாக துபாய் போன்ற நாடுகளில் இருந்து கடல் மார்க்கமாகவும், விமானம் மூலமாகவும் தங்கத்தை கடத்திக்கொண்டுவந்தார்கள். இந்த கடத்தல் தங்கம் வங்காளதேசம், நேபாளம், மியான்மர், இலங்கை வழியாக கடத்தப்பட்டுவந்தது.

வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை கடத்திவர தனியாக குருவிகள் என்ற கடத்தல்காரர்கள் இருக்கிறார்கள். பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதி உயர்ந்துகொண்டேபோகிறது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் தங்கம் இறக்குமதி 221.41 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. மக்களும் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கிவிட்டார்கள். சர்வதேச அளவில் தங்கத்தின் விலையும், மக்களின் தேவையும் அதிகரித்துக்கொண்டே இருப்பதாலும் தங்கத்தின் விலையும் அதிகமாகத்தான் இருக்கிறது.

ஆனாலும் இந்தியாவில் உள்ள தங்கத்தின் விலையையும், துபாயில் உள்ள தங்கத்தின் விலையையும் ஒப்பிட்டால், குறைந்த அளவே வித்தியாசம் இருக்கிறது. இதனால் கள்ளக்கடத்தல் மூலம் தங்கம் கொண்டுவருவதில் லாபம் அதிகமில்லாமல் சுங்க இலாகா, போலீசாரிடம் பிடிபடும் ஆபத்தும் அதிகமாக இருப்பதால், தங்க கடத்தல் வெகுவாக குறைந்துவிட்டது. சுங்க வரி குறைக்கப்பட்டுவிட்டது என்ற செய்தியை கேள்விப்பட்டவுடனேயே குருவியாக செயல்படும் ஒருவர், "எங்கள் சோலியை முடித்துவிட்டார்கள்" என்று கூறியதாக ஓய்வுபெற்ற சுங்க இலாகா அதிகாரி தெரிவித்தார். உலக அளவில் தங்கத்தின் விலை இன்னும் அதிகரித்தாலும் இந்தியாவில் சுங்க வரி குறைவு என்பதால் கள்ளக்கடத்தலுக்கு எதிர்காலத்திலும் வாய்ப்பு குறைவு.


Next Story