உற்பத்தி துறையில் மின்னும் பெண்மணிகள்!


உற்பத்தி துறையில் மின்னும் பெண்மணிகள்!
x
தினத்தந்தி 23 Nov 2023 3:15 AM IST (Updated: 23 Nov 2023 3:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் வேகமாக நடந்து வரும் தொழில் முன்னேற்றத்தில், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக உயர்ந்துவிடும் என்று நம்பலாம்.

'பெண்களுக்கு ஏது ஈடு; பெண்களால் உயர்கிறது நாடு! உற்பத்தி பெருகுது பாரு-அது பொற்கரங்கள் தருகின்ற சீரு!' என்பது பெண்களின் முன்னேற்றம் குறித்து கவிஞர் தியாரூ எழுதிய கவிதைகளில் உள்ள சில வரிகள். 'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு' என்று சொன்ன காலமெல்லாம் போய்விட்டது. 'பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம், எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி' என்ற பாரதியார் பாடலுக்கிணங்க, ஆண்களைவிட அதிகமாக படிப்பில் முன்னேறிவிட்டார்கள்.

இப்போதெல்லாம் ஆண்டுதோறும் பிளஸ்-2 தேர்வு எழுதுபவர்களிலும், தேர்வு பெற்றவர்களிலும் மாணவிகளின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. அதுபோல, அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவிகள் கல்லூரி படிப்புக்கு சென்றால், அவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைக்கு கொண்டு வந்த பிறகு, கல்லூரிக்கு சென்று படிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.

படிப்பை முடித்து வேலை தேடும் பெண்களுக்கு, அரசு பணிகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு இருக்கிறது. அதையும் தாண்டி கூடுதல் வேலைவாய்ப்பை பெற்று விடுகிறார்கள். இதுதவிர, உற்பத்தி துறையிலும் பெண்களுக்கு நிறைய வேலைவாய்ப்பு இருக்கிறது. அங்கும் பெண்கள் மின்னிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா முழுவதிலும் உள்ள உற்பத்தித்துறையில், அதாவது தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் பெண்கள் எண்ணிக்கையில் 43 சதவீதம் பேர் தமிழ்நாட்டில்தான் வேலை பார்க்கிறார்கள். இந்த எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து கொண்டே போகிறது. 2019-2020-ம் ஆண்டுக்கான தொழிற்சாலைகள் குறித்த ஆய்வு முடிவுகளை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்கத்துறை வெளியிட்டுள்ளது. இதில், நாடு முழுவதிலும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் 59 வயது வரையிலான பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 80 ஆயிரம் ஆகும். இதில் தமிழ்நாட்டில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 43 சதவீதம், அதாவது 6 லட்சத்து 70 ஆயிரம் ஆகும்.

இதுபோல, தேசிய சாம்பிள் சர்வே அலுவலகம் 2022 ஜூலை மாதம் முதல் 2023 ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் எடுத்த கணக்கீட்டில், தமிழ்நாட்டில் நகர்ப் புறங்களிலும், கிராமப் புறங்களிலும் மொத்த தொழிலாளர்களில், பெண் தொழிலாளர்கள் 43.9 சதவீதம் என்று கூறப்பட்டுள்ளது. பெருகி வரும் மின்சார வாகனங்கள், பேட்டரி மின்னணுவியல், சோலார் செல் தொழிற்சாலைகள் மற்றும் பாரம்பரிய தோல், ஜவுளி தொழில்கள், மோட்டார் வாகன தொழிற்சாலைகளில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் பெண்களாகவே இருக்கிறார்கள். சில தொழிற்சாலைகளில் 100 சதவீதம் பெண் தொழிலாளர்கள்தான் இருக்கிறார்கள்.

பெண்களால் உற்பத்தி திறனை மட்டுமல்லாமல், அவர்களின் உற்பத்தியில் தரமும் இருக்கிறது என்று தொழில் நிறுவனங்கள் கூறுகின்றன. பெண்கள் படி தாண்டக்கூடாது என்று சொன்ன காலம் போய், இப்போது பெண்கள் ஊர் விட்டு ஊர் போய் வேலை பார்ப்பதோடு மட்டுமல்லாமல், வேலை பார்க்கும் இடங்களில் தங்கள் திறமையையும் காட்டி பிரகாசிப்பது பாராட்டுக்குரியது. சமையலறையில் கையில் கரண்டி பிடித்த பெண்கள் இப்போது தொழிற்சாலையில் ஸ்பேனரை லாவகமாக கையாளுகிறார்கள். தமிழ்நாட்டில் வேகமாக நடந்து வரும் தொழில் முன்னேற்றத்தில், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக உயர்ந்துவிடும் என்று நம்பலாம்.


Next Story