2 லட்சம் உயிர்களை காப்பாற்றிய இன்னுயிர் காப்போம் திட்டம் !
2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந்தேதி 'இன்னுயிர் காப்போம் - நம்மைக்காக்கும் 48' திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
தமிழ்நாட்டில் மிக அதிகமாக சாலை விபத்துகள் நடக்கின்றன. விபத்துகளால் உயிரிழப்புகளும் அதிகமாக ஏற்படுகின்றன. விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க முதல் ஒரு மணி நேரம் 'தங்க நேரம்' என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துவிட்டால், உயிரைக் காப்பாற்றிவிடலாம். இதற்காக நெடுஞ்சாலைகளில் 108 ஆம்புலன்சுகள் ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலையோரம் அரசு மருத்துவமனைகள் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், தனியார் மருத்துவமனைகள் நிறைய இருக்கும்.
விபத்து நடந்தவுடன் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்பவர்களுக்கு தமிழக அரசு ரூ.5 ஆயிரமும், மத்திய அரசாங்கம் ரூ.5 ஆயிரமும் ஊக்கத்தொகையாக வழங்குகிறது. விபத்தில் சிக்கும் எல்லோருமே வசதி படைத்தவர்களாக இருக்கமுடியாது. அரசு மருத்துவமனையை தேடி அழைத்து செல்வதற்குள் சில மணி நேரம் காலம் கடந்துவிடுகிறது. இத்தகைய சூழ்நிலையில், கடந்த 18-11-2021 அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்தும், சாலை விபத்துகளை குறைப்பது குறித்தும், சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு நடத்தினார்.
அப்போது சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதல் 48 மணி நேரத்துக்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும் வகையில், 'இன்னுயிர் காப்போம் - நம்மைக்காக்கும் 48' என்ற திட்டத்தை செயல்படுத்த ஆணையிட்டார். அந்த ஆணையில், முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை உள்ளவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வேற்று நாட்டவர் என அனைவருக்கும் தமிழக எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடையும் நேரத்தில், முதல் 48 மணி நேர சிகிச்சைக்காக ரூ.1 லட்சம் அரசே வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆணை பிறப்பித்த ஒரு மாதத்துக்குள், அதாவது 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந்தேதி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில், இந்த 'இன்னுயிர் காப்போம் - நம்மைக்காக்கும் 48' திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
இந்த திட்டத்தின்படி, தமிழ்நாட்டில் உள்ள 237 தனியார் மருத்துவமனைகள், 455 அரசு மருத்துவமனைகள் என 692 மருத்துவமனைகளில், சாலை விபத்துகளில் சிக்கியவர்களுக்கு முதல் 48 மணி நேரம் சிகிச்சை அளிக்க அரசு சார்பில் ரூ.1 லட்சம் தரப்படுகிறது. இது ஒரு மகத்தான திட்டம். இத்திட்டம் அமலுக்கு வந்தபிறகு, ஏற்பட்ட முதல் விபத்தில் சிக்கியவர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்திலும், 50-வது பயனாளியை சித்தலபாக்கத்திலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
விபத்தில் சிக்கிய 2 லட்சமாவது பயனாளியும், 2 லட்சத்து ஒன்றாவது பயனாளியும் சென்னை ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். ரேலா மருத்துவமனை ஒரு பெரிய தனியார் மருத்துவமனை. அந்த மருத்துவமனையிலும் சிகிச்சை பெற இந்த திட்டம் உதவுகிறது. 2 ஆண்டுகளில் 2,09,078 உயிர்களைக் காப்பாற்றிய இந்த திட்டம் ஒரு மகத்தான கருணை திட்டம். எவ்வளவு உதவிகள் செய்தாலும் ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்கு இணை எதுவும் கிடையாது என்ற வகையில், இது ஒரு ஈடுஇணையற்ற திட்டம்.