படகுகள் சீரமைப்பு; பறவைகள் மீட்பு!


படகுகள் சீரமைப்பு; பறவைகள் மீட்பு!
x

கடந்த மாதம் 3, 4-ந் தேதிகளில் ‘மிக்ஜம்’ புயலால் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் சென்னையையும், அதை சுற்றிலும் உள்ள மாவட்டங்களையும் புரட்டிப்போட்டது.

கடந்த மாதம் 3, 4-ந் தேதிகளில் 'மிக்ஜம்' புயலால் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் சென்னையையும், அதை சுற்றிலும் உள்ள மாவட்டங்களையும் புரட்டிப்போட்டது. வடசென்னையில் உள்ள எண்ணூர் பகுதிகளில் வெள்ள நீரோடு கறுப்பு நிறத்தில் அடர்த்தியாக எண்ணெய் படலமும் வந்தது. கொசஸ்தலை ஆறு, பக்கிங்காம் கால்வாய் மட்டுமல்லாமல், எண்ணூர் முகத்துவாரத்திலும் இந்த எண்ணெய் படலம் படர்ந்திருந்தது. கடலோர காவல்படை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு நடத்தியது. அப்போது, முகத்துவாரத்துக்கு அருகில் உள்ள கடலோர பகுதியிலும் எண்ணெய் படலம் கண்டறியப்பட்டது.

சென்னை பெட்ரோலியம் தொழிற்சாலையில் பக்கிங்காம் கால்வாய் வழியாக எண்ணூர் முகத்துவாரத்துக்கு இந்த கழிவு எண்ணெய் வந்து கலந்துவிட்டது என்று தமிழக அரசின் தொழில்நுட்ப குழு தெரிவித்துள்ளது. ஆனால், சென்னை பெட்ரோலியம் நிறுவனம், "இதற்கு நாங்கள் மட்டும் காரணம் இல்லை. தமிழக அரசின் நீர் வளத்துறை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பூண்டி மற்றும் புழல் நீர்தேக்கங்களில் இருந்து வினாடிக்கு 48 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்துவிட்டதால், மணலியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் வெள்ளக்காடாகிவிட்டது" என்று கூறுகிறது. மேலும், "எங்கள் தொழிற்சாலையில் இருந்து மட்டுமல்லாமல், இந்தப் பகுதியில் உள்ள மற்ற ஆலைகளில் இருந்தும் எண்ணெய் கழிவுகள் வெளியேற்றப்பட்டு இருக்கலாம்" என்றும் குற்றம்சாட்டுகிறது.

யார் என்ன சொன்னாலும், இந்த பகுதியிலுள்ள பல மீனவ கிராமங்களில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டது. அவர்களின் மீன்பிடி வலைகள், படகுகளில் இந்த எண்ணெய் படலம் படிந்து பெரும் சேதம் ஏற்பட்டது. மீன்பிடி தொழிலை மேற்கொள்ள முடியவில்லை. எண்ணெய் கசிவால் கரையோரம் உள்ள மீன்களெல்லாம் செத்து மிதந்தன. அதுமட்டுமல்லாமல், அந்த பகுதியில் பிடிக்கப்பட்ட மீன்களை வாங்க மக்களும் தயங்குகிறார்கள். எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களில் வசிக்கும் 2,301 மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.12,500-ம், எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 787 மீன்பிடி படகுகளை சரிசெய்ய, படகு ஒன்றுக்கு தலா ரூ.10 ஆயிரமும் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சென்னை மாநகராட்சி மண்டலம் 1, வார்டு 4, 6, 7 ஆகிய பகுதிகளில் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 6,700 குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 வீதம் வழங்கவும் அவர் ஆணையிட்டுள்ளார். இது சற்று ஆறுதல் அளித்தாலும், முழு நிவாரணம் சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தால் வழங்கப்படவேண்டும் என்பது பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாகும். இந்த எண்ணெய் படலத்தால் பாதிக்கப்பட்ட படகுகளை சரிசெய்ய இந்தத் தொகை போதாது, மேலும் அப்படியே பழுதுபார்த்தாலும் எந்த அளவு சரிசெய்ய முடியும் என்று தெரியவில்லை. எனவே, சரிசெய்ய முடியாத படகுகளுக்கு பதிலாக புதிய படகுகள் தரவேண்டும் என்பதும் அவர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. மேலும், கடலில் மீன்பிடித்து உண்ணும் ஏராளமான நாரைகள், இந்த எண்ணெய் படலத்தால் இறக்கை நனைந்து, அதை விரித்து பறக்க முடியாமல் பரிதாப நிலையில் கரையோரம் தவித்துக்கொண்டு இருப்பது உள்ளத்தை உருக்குகிறது. மரணத்தின் விளிம்பில் உள்ள இந்த பறவைகளை மீட்டு, அதன் சிறகுகள் மற்றும் பல பாகங்களில் படிந்துள்ள எண்ணெய் படலத்தை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்படவேண்டும். அதுமட்டுமல்லாமல், இதுபோல எண்ணெய் கசிவு இனியும் ஏற்படாமல் இருக்கும் வகையில் நிரந்தர தீர்வுக்கும் வழிவகை காணவேண்டும்.


Next Story