தேர்தல் வாக்குறுதியில் பிரதமர் மோடி போட்ட முதல் •


தேர்தல் வாக்குறுதியில் பிரதமர் மோடி போட்ட முதல்  •
x

நரேந்திரமோடி பதவியேற்ற அடுத்த நாளே, தேர்தல் அறிக்கையில் சொன்ன ஒரு வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அதற்கு ‘டிக்’ அடித்துவிட்டார்

ந்துக்களுக்கு பகவத்கீதை, கிறிஸ்தவர்களுக்கு பைபிள், முஸ்லிம்களுக்கு திருக்குரான், சீக்கியர்களுக்கு குரு கிரந்தா சாகிப் என்று புனித நூல்கள் இருப்பதுபோல, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் கட்சிகளுக்கு, அவர்கள் தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளாக வழங்கிய 'தேர்தல் அறிக்கை'தான் புனித நூலாகும். அதை ஒவ்வொன்றாக 5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றி கொடுத்து, மீண்டும் மக்கள் மனதில் இடம்பிடிப்பதுதான் அவர்களின் தலையாய கடமையாக இருக்கும்.

அந்த வகையில், பிரதமர் நரேந்திரமோடி பதவியேற்ற அடுத்த நாளே, தேர்தல் அறிக்கையில் சொன்ன ஒரு வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அதற்கு 'டிக்' அடித்துவிட்டார். கடந்த 9-ந்தேதி இரவு பதவி ஏற்ற அவர், அடுத்த நாளே பிரதமர் அலுவலகத்துக்கு சென்றார். தன்னை வரவேற்ற அலுவலக ஊழியர்கள் மத்தியில் பிரதமர் பேசும்போது, "பிரதமர் அலுவலகம் என்பது மக்களுக்கானதாக இருக்க வேண்டுமே தவிர, மோடிக்கான பிரதமர் அலுவலகமாக இருக்கக்கூடாது" என்று கூறினார்.

பின்னர் அலுவலக அறைக்கு சென்ற பிரதமர் மோடி, விவசாயிகளுக்கு நிதியுதவி அளிப்பதற்கான முதல் கோப்பில் கையெழுத்திட்டார். 2019-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளில் ரூ.6 ஆயிரம் வழங்கும் 'பி.எம்.கிசான்' என்ற பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தை அறிவித்தார். இப்போது 17-வது தவணையாக ரூ.20 ஆயிரம் கோடியை ஒதுக்கி 9 கோடியே 30 லட்சம் விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.

அதன் பிறகு, அவரது தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில், மக்களுக்கு தரமான வீடுகளை கட்டிக்கொடுப்பது உறுதி செய்யப்படும் என்பதையும், 'நாட்டில் உள்ள அனைவருக்கும் சொந்த வீடு' என்ற லட்சியத்தை நிறைவேற்றும் வகையிலும் தேர்தல் வாக்குறுதியில் சொன்ன 'பி.எம்.ஆவாஸ் யோஜனா' திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் மேலும் 3 கோடி வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட இருக்கிறது. இதற்கான அறிவிப்பை பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு முதல் முறையாக ஆட்சி அமைத்தபோது, 2015-ல் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் 4 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை 3 கோடியே 45 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தற்போது திட்டமிடப்பட்டுள்ள கூடுதலான 3 கோடி வீடுகளையும் 7 ஆண்டுகளுக்குள் கட்டிமுடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளுக்கு மத்திய அரசாங்கத்தின் சார்பில் கிராமப்புறங்களில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரமும், நகர்ப்புறங்களில் அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 70 ஆயிரமும் மானியமாக வழங்கப்படும். இந்த வீட்டில் கழிப்பறை, கியாஸ்சிலிண்டர், மின்சார வசதி, குடிநீர்வசதி உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் இருக்கும்.

தேர்தல் அறிக்கையில் சொன்ன முக்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பிரதமர் மோடி 'டிக்' செய்தது பாராட்டத்தக்கது. ஆனால், 'கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வீடு கட்ட இந்த மானியத்தொகை போதாது. இன்னும் கூடுதலாக வழங்கவேண்டும்' என்ற கோரிக்கை பொதுமக்களிடம் இருந்தும், இதேபோல், விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் 'பி.எம்.கிசான் திட்டத்தின் பலனை பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான நிபந்தனைகளை சற்று தளர்த்தவேண்டும்' என்ற கோரிக்கை விவசாயிகளிடம் இருந்தும் எழுந்துள்ளது. இதை மத்திய அரசு பரிசீலிக்கவேண்டும்.


Next Story