விலைவாசி குறைய வேண்டும்; வேலைவாய்ப்பு பெருக வேண்டும்!


Prices should come down; Employment should increase!
x

ப.சிதம்பரம் மாநிலங்களவை உறுப்பினர் என்ற வகையில், பட்ஜெட் மீது நடந்த விவாதத்தில் மிகவும் ஆக்கப்பூர்வமான கருத்துகளை கூறினார்.

சென்னை,

மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் அரசியல் வாழ்வில் நீண்ட நெடிய அனுபவத்துக்கு சொந்தக்காரர். இதுவரை 7 முறை நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராகவும், இருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்து வருகிறார். 4 முறை மத்திய நிதி மந்திரியாக பதவி வகித்தவர். 9 ஆண்டுகள் அந்த பதவியில் இருந்து 9 முறை பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார். இந்த 9 ஆண்டுகளும் சிறந்த பொருளாதார நிபுணராக செயல்பட்டார். அமெரிக்காவில் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். அவர் நாடாளுமன்றத்தில் பேச தொடங்கினால் ஆளும் கட்சி-எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மந்திரிகள், ஏன் பிரதமரால்கூட உற்று கவனிக்கப்படும்.

அத்தகைய திறமைக்கு சொந்தக்காரரான ப.சிதம்பரம் இப்போது மாநிலங்களவை உறுப்பினர் என்ற வகையில், பட்ஜெட் மீது நடந்த விவாதத்தில் மிகவும் ஆக்கப்பூர்வமான கருத்துகளை கூறினார். இந்த பேச்சின்போது அவர் 5 கோரிக்கைகளை நரேந்திரமோடி அரசாங்கத்தின் முன்வைத்தார். "குறைந்தபட்ச தினசரி ஊதியம் ரூ,400 என்று நிர்ணயிக்கவேண்டும். விவசாய விளை பொருட்களுக்கான அடிப்படை ஆதார விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்படவேண்டும். 'நீட்' தேர்வு வேண்டாம் என்று முடிவெடுக்கும் மாநிலங்களுக்கு, அதில் இருந்து விலகிக்கொள்ள அனுமதி அளிக்கவேண்டும்" என்று கோரினார்.

இதுதவிர, தன்னுடைய பேச்சில் அவர், பெருகிவரும் வேலையில்லா திண்டாட்டம் குறித்தும் விலைவாசி உயர்வு குறித்தும் மத்திய அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தார். "வேலையில்லா திண்டாட்டம் ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இருக்கும் வேலை வாய்ப்புகளைவிட வேலை தேடுபவர்கள் எண்ணிக்கை பல மடங்கு இருக்கிறது. ஒவ்வொரு குடும்பமும் விலைவாசி உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது நடந்த 13 சட்டசபை இடைத்தேர்தல்களில் 10 தொகுதிகளில் 'இந்தியா' கூட்டணி வெற்றி பெற்றது என்றால், கடும் விலைவாசி உயர்வுக்காக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் கொடுத்த தண்டனையும், எச்சரிக்கையும் ஆகும். விலைவாசி உயர்வை இந்த அரசாங்கம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால் மக்கள் இன்னும் தண்டனை கொடுப்பார்கள்" என்று பேசினார். இது அவருடைய பேச்சு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களின் உணர்வும் இதுவாகத்தான் இருக்கிறது.

நாடு முழுவதும் மக்கள் விலைவாசி உயர்வாலும், வேலையில்லா திண்டாட்டத்தாலும் பெரிதும் அவதிப்படுவதை யாரும் மறுக்க முடியாது. ஒவ்வொரு அரசு பணிக்கும் தேர்வு நடக்கும்போது நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பணிகளுக்கு லட்சக்கணக்கில் இளைஞர்கள் விண்ணப்பம் செய்வது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

விலைவாசி இப்போது தாங்க முடியாத அளவில் இருக்கிறது. விலைவாசி தொடர்பான ஆய்வு அறிக்கையில், கடந்த ஜூன் மாத நிலவரப்படி மொத்த விலைவாசி குறியீட்டு எண் 16 மாதங்களில் இல்லாத அளவு 3.4 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. உணவு பொருட்களின் விலைவாசி 22 மாதங்களில் இல்லாத அளவுக்கு 8.7 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. காய்கறி விலை உயர்வு 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு இரட்டிப்பாகியுள்ளது. இதுபோல, வேலையில்லா திண்டாட்டத்தையும் பொருளாதார ஆய்வு அறிக்கை நன்கு மதிப்பிட்டுள்ளது. விவசாயம் அல்லாத பிற வேலை வாய்ப்புகளில் ஆண்டுக்கு 78.5 லட்சம் வேலை வாய்ப்புகளை 2030-ம் ஆண்டு வரை உருவாக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஆக, ஒவ்வொரு குடும்பத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள விலைவாசி உயர்வை குறைக்கவும், வேலை வாய்ப்புகளை பெருக்கவும் மத்திய அரசாங்கம் முன்னுரிமை கொடுத்து செயலாக்கவேண்டும் என்பதே இப்போதுள்ள கோரிக்கையாக இருக்கிறது.


Next Story