பெட்ரோல் - டீசல் விலை குறையாதா?


பெட்ரோல் - டீசல் விலை குறையாதா?
x

எல்லா பொருட்களுமே, மூலப்பொருட்கள் விலை குறைந்தாலும், வரி குறைந்தாலும் அதன் எதிரொலியாக விலை குறைந்துவிடும்.

எல்லா பொருட்களுமே, மூலப்பொருட்கள் விலை குறைந்தாலும், வரி குறைந்தாலும் அதன் எதிரொலியாக விலை குறைந்துவிடும். வேளாண் பொருட்கள் கூட விளைச்சல் அதிகம் இருந்தால், தானாக விலை குறைந்துவிடும். பொருளாதார தத்துவப்படி கூட, சப்ளை அதிகம் இருந்தால் விலை குறைந்துவிடும். ஆனால், பெட்ரோல்-டீசல் விலை மட்டும் இந்த தத்துவத்துக்குள் அடங்குவதில்லை. கச்சா எண்ணெய் விலையும் குறைந்துவிட்டது, தட்டுப்பாடும் இல்லை, வரியும் குறைந்துவிட்டது, ஆனால் விலையை மட்டும் எண்ணெய் கம்பெனிகள் குறைக்க முன்வரவில்லை.

பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் 13 ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. அரசுதான் இந்த விலையை நிர்ணயித்து அறிவித்தது. 2010-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் பெட்ரோல் விலை மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. விலை நிர்ணயம் செய்யும் உரிமையும் மத்திய அரசாங்கத்திடம் இருந்து எண்ணெய் கம்பெனிகளுக்கே வழங்கப்பட்டது. 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து, டீசல் விலை நிர்ணயத்துக்கும் கட்டுப்பாடு எடுக்கப்பட்டது. அதன்பிறகு எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் செய்து கொண்டிருந்தன.

இப்போது, எந்த அடிப்படையில் எண்ணெய் கம்பெனிகள் விலை நிர்ணயம் செய்கிறது என்பது புரியவில்லை. காரணம் 2014-ம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 86.8 அமெரிக்க டாலராக இருந்தபோது, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67 ஆகத்தான் இருந்தது. அதே நேரத்தில், 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கச்சா எண்ணெய் விலை படுவீழ்ச்சி அடைந்து, ஒரு பீப்பாய் விலை 28.1 டாலருக்கு வந்தபோதும், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.60 ஆகத்தான் இருந்தது. 2021-ல் கச்சா எண்ணெய் விலை 65 டாலரை எட்டிய நேரத்தில்கூட பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.90-ஐ தாண்டியது.

நேற்று கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 81.85 டாலராக இருந்தது. ஆனால், பெட்ரோல் விலை மட்டும் லிட்டருக்கு ரூ.102.63 ஆக நிலையாக இருந்தது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 ஆக இருந்தது. சரி கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், அதனால் விலை குறைவதில்லை. வரி குறைப்பால் தாக்கம் இருக்கிறதா? என்று பார்த்தால், அதிலும் இல்லை. வழக்கமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், அதனால் பெட்ரோல் விலை உயர்ந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில், அரசாங்கம் கலால் வரியை குறைப்பது உண்டு. கச்சா எண்ணெய் விலை குறைந்தால், கலால் வரியை மத்திய அரசாங்கம் உயர்த்தும். ஆனால், இது எதுவும் பெட்ரோல் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இல்லை.

அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ந்துள்ளது என்றாலும், அதை பெட்ரோல் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக சொல்ல முடியாது. ஏனெனில், குறைந்துள்ள கச்சா எண்ணெய் விலையையும், ரூபாய் மதிப்பையும் கணக்கிட்டால், 2014-ல் இருந்த விலையைவிட பெட்ரோல் விலை 43.8 சதவீதமும், டீசல் விலை 61.2 சதவீதமும் உயர்ந்திருக்கிறது. இதனால், பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள். விலைவாசியும் உயர்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, மத்திய அரசாங்கம் எண்ணெய் கம்பெனிகளுடன் பேசி பெட்ரோல்-டீசல் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். கச்சா எண்ணெய் விலையும், வரியும் குறைவாக இருக்கும்போது, பெட்ரோல்-டீசல் விலை மட்டும் இவ்வளவு இருப்பது ஏன்? என்பதே மக்களின் கேள்வியாக இருக்கிறது.


Next Story