பெட்ரோல் - டீசல் விலை குறையுமா?
இந்தியாவில் பெட்ரோல்-டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்க்காக வெளிநாடுகளைத்தான் நம்பியிருக்கிறோம்.
சென்னை ,
அனைவரது வாழ்விலும் போக்குவரத்து என்பது இன்றியமையாததாகிவிட்டது. போக்குவரத்து வாகனங்களுக்கு முக்கிய எரிபொருளான பெட்ரோல்-டீசல் என்பது மிக அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. மாத பட்ஜெட்டில் பெட்ரோல்-டீசல் வாங்குவதற்கே ஒரு பெரிய தொகையை ஒதுக்க வேண்டியுள்ளது. சரக்கு வாகனங்கள் பயன்பாட்டுக்கான டீசல் விலை உயர்வை பொறுத்தே அனைத்து பொருட்களின் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. பஸ் போக்குவரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்தியாவில் பெட்ரோல்-டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்க்காக வெளிநாடுகளைத்தான் நம்பியிருக்கிறோம். காரணம், இந்தியாவில் எண்ணெய் வளம் இல்லை. நமது தேவைக்காக ரஷியா, ஈராக், அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்டவைகளைத்தான் நம்பியிருக்கிறோம். 40 சதவீதம் அளவுக்கு ரஷியாவில் இருந்துதான் கச்சா எண்ணெயை வாங்கிக் கொண்டிருக்கிறோம். கடந்த ஜூலை மாதம் மட்டும் 46 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை வாங்கி இருக்கிறோம். அது ஆகஸ்டு மாதத்தில் நமது எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் பராமரிப்பு பணிகள் நடந்து வந்த காரணத்தால், இந்த இறக்குமதி சற்று குறைந்து இருக்கிறது. அதே சமயத்தில் ஈராக், அமெரிக்கா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது சற்று குறைந்து இருக்கிறது.
ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலை மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விலையைவிட மிக குறைவு. ஏனெனில் ரஷியா-உக்ரைன் போர் காரணமாக மேற்கத்திய நாடுகள் ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை தற்காலிகமாக நிறுத்திவைத்து இருக்கின்றன. பொதுவாக, நாம் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் விலையை வைத்துத்தான் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதுவரை அந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால், இப்போது கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும், இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படவில்லை. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை அதிகபட்சமாக 2008-ம் ஆண்டு 147 அமெரிக்க டாலராக இருந்த நேரத்தில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.55 ஆகத்தான் இருந்தது. டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.35 ஆகத்தான் இருந்தது.
இப்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 68.56 டாலர் என்ற அளவில்தான் இருக்கிறது. ஆனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.75 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.92.34 ஆகவும் இருக்கிறது. இப்போது இருக்கும் பெட்ரோல்-டீசல் விலை கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி முதல் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. மார்ச் 28-ந்தேதி கச்சா எண்ணெய் விலை 83.69 அமெரிக்க டாலராக இருந்தது. கச்சா எண்ணெயின் சர்வதேச விலை குறைந்தபோதும், இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை குறையவில்லை. தேர்தல் வந்தால் மட்டும் குறைக்கப்பட்டு விடுகிறது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி மார்ச் மாதம் 28-ந்தேதிக்கு முன் பெட்ரோல்-டீசல் இரண்டுக்குமே லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. இப்போது, கச்சா எண்ணெய் விலைதான் இவ்வளவு குறைந்துவிட்டதே இன்னும் ஏன் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க தயக்கம் என்பதுதான் மக்கள் கேட்கும் கேள்வி. ஆனால், 4 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் வர இருப்பதால் அதன் நெருக்கத்தில் விலை குறையும் என்பது மக்களின் நம்பிக்கை.