முத்து முத்தான முதல் பதில் உரை !


முத்து முத்தான முதல் பதில் உரை !
x

தமிழக சட்டசபை கூட்டம் இப்போது நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் அமைச்சர்கள் தங்கள் துறைகளுக்கு தேவையான நிதி ஒதுக்கக்கோரும் மானியக்கோரிக்கைகளை தாக்கல் செய்கிறார்கள்.

தமிழக சட்டசபை கூட்டம் இப்போது நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் அமைச்சர்கள் தங்கள் துறைகளுக்கு தேவையான நிதி ஒதுக்கக்கோரும் மானியக்கோரிக்கைகளை தாக்கல் செய்கிறார்கள். அதன் மீது நடக்கும் விவாதத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசிய பிறகு, அமைச்சர்கள் பதில் அளிக்கிறார்கள். இந்த பதிலுரையில்தான் அமைச்சர்கள் புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள் என்ற வகையில் பதில் உரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அந்தவகையில், வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் தொடர்பான மானியக்கோரிக்கை மீது நடந்த விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். கடந்த டிசம்பர் மாதம் அமைச்சராக பொறுப்பேற்று, 3 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய முதல் உரையாகும் இது. எப்படி சட்டமன்ற உறுப்பினராக அவர் சட்டசபையில் 2021-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந் தேதி தன் கன்னிப்பேச்சை பேசும்போது, எல்லோரும் ஆச்சரியப்படத்தக்க வகையில் இருந்ததோ, அதேபோல அமைச்சராக அவர் ஆற்றிய முதல் உரையும் முத்து முத்தாக இருந்தது.

கலைஞர் குடும்பத்துக்கே உரித்தான கணீர் கணீர் என்ற குரலில் பேசினார். அவர் துறை சார்ந்த அனைத்து அம்சங்களும் அவருக்கு அத்துபடி என்பதை இந்த பேச்சு பறைசாற்றியது. உரையின் தொடக்கத்திலேயே, முதன் முதலில் அமைச்சராக 1967-ம் ஆண்டு பொறுப்பேற்றவுடன் கலைஞர் சொன்ன ஒரு கருத்தை ஒப்பிட்டு, அந்த கருத்தை சொல்லி தன் உரையைத்தொடங்கினார். திராவிட மாடல் என்றால் என்னவென்று புரியாமல் இன்னமும் பலர் பேசுகிறார்கள், விமர்சிக்கிறார்கள். திராவிட முன்னேற்ற கழகத்தின் இறுதி லட்சியம் என்பது சமுதாய துறையில் சமத்துவம், பகுத்தறிவு; பொருளாதாரத்துறையில் சமதர்மம்; அரசியலில் ஜனநாயகம் என்ற கலைஞரின் கருத்துத்தான் திராவிட மாடல் என்றால் என்ன என்பதைத்தெரிந்து கொள்வதற்கான அரிச்சுவடி என்று திராவிட மாடலுக்கு விளக்கம் அளித்தார். இன்று கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஏழை-எளிய பெண்களுக்கு வாழ்வளித்துக்கொண்டு இருக்கும் சுய உதவி குழு திட்டம் 1989-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில்தான் தர்மபுரி மாவட்டத்தில் உருவாகி, இன்று ஆல்போல தழைத்து அருகு போல வேரோடி உயர்ந்து நிற்கிறது என்று கூறி, ஊரக பகுதிகள் மற்றும் நகர்ப்புறங்களில் இருக்கும் 4 லட்சத்து 48 ஆயிரம் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 50 லட்சத்து 80 ஆயிரம் ஏழை மற்றும் நலிந்த பிரிவுகளில் உள்ள உறுப்பினர்களுக்கு வாழ்வளிப்பதை விளக்கமாக கூறினார்.

கிராமப்புறங்களில் மேலும் 10 ஆயிரம் சுய உதவி குழுக்கள், 37 மாவட்டங்களில் சிறு தானிய உணவகங்கள், அனைத்து மாவட்டங்களிலும் 100 இளைஞர் திறன் மற்றும் வேலை வாய்ப்பு முகாம்கள், 45 ஆயிரம் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி என்பது உள்பட 19 அறிவிப்புகளை வெளியிட்டார். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக முதல்-அமைச்சர் நடத்தும் ஆய்வுகூட்டங்களிலும், அமைச்சர்கள் கலந்துகொள்ளும் கூட்டங்களிலும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவேண்டும். அனைவரும் ஒன்றாக சேர்ந்து மக்கள் பணியாற்றவேண்டும். உங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்குங்கள் என்று கேட்டுக்கொண்டு ஒரு நல்ல அரசியல்வாதியாக இந்த உரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னை வெளிக்காட்டியுள்ளார்.


Next Story