ஆன்லைன் சூதாட்டம்
சூதாட்டத்தால் பழைய காலங்களில் பல மன்னர்கள் தங்கள் நாட்டையே இழந்திருக்கிறார்கள்.
சூதாட்டத்தால் பழைய காலங்களில் பல மன்னர்கள் தங்கள் நாட்டையே இழந்திருக்கிறார்கள். அப்போதே பல இலக்கியங்கள் இதன் கேட்டை விளக்கியுள்ளன. இன்றளவும் பல குடும்பங்களில் சூதாட்டத்தால் நிம்மதி போவது மட்டுமல்லாமல், வருமானத்தையே சூதாடி தொலைத்துவிடும் பல குடும்ப தலைவர்களும் இருக்கிறார்கள். சட்டவிரோதமான சூதாட்ட விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்துவது, சூதாட்ட எண்ணம் கொண்ட பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஆன்லைன் சூதாட்டம் எந்தவித அச்சமும் இல்லாமல் அதற்கு அடிமையானவர்கள் விளையாட உதவியாக இருக்கிறது. மேலும் சூதாட்ட விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்துவது போல, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதும் எளிதல்ல.
3 நாட்களுக்கு முன்பு மாலைமலரிலும், நேற்று முன்தினம் 'தினத்தந்தி'யிலும் வந்த ஒரு செய்தியும், படமும் மனதை உருக்குவதாக இருந்தது. சென்னையில் 2 மகன்கள், கணவரோடு இனிமையான வாழ்க்கை நடத்திவந்த ஒரு இளம்பெண், தன் 20 பவுன் நகைகளை விற்றும், தன் சகோதரிகளிடம் கடன் வாங்கியும் ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சம் ரூபாயை இழந்ததால் தூக்கில் தொங்கி தன் உயிரை மாய்த்துக்கொண்டார். இவர் மட்டுமல்ல கடந்த 10 மாதங்களில் மட்டும் 23 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து இருக்கிறார்கள். சென்னை பெண்ணை தொடர்ந்து கரூர் மாவட்டத்திலும் ஒரு இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னையில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட நாளுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஒரு வீடியோ பதிவு வெளியிட்டார். அதில், 'ஆன்லைன் ரம்மி விளையாட்டு வேண்டாம். அது ஒரு மோசடி விளையாட்டு. பெரிய அளவில் பணம் இழப்பீர்கள். லட்சக்கணக்கில் பணம் போய்விடும். நீங்கள் கடன் வாங்கி விளையாடுவீர்கள். மீண்டும் மீண்டும் விளையாட தூண்டும். அது அவமானத்தை தேடித்தரும். குடும்பத்தில் பிரச்சினைகளை உருவாக்கும். தற்கொலை செய்துகொள்ளக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும். இந்த வீடியோவை பார்த்தபிறகு யாரும் அந்த தவறை செய்யாதீர்கள். இது காவல்துறையின் அன்பான வேண்டுகோள்', என்று தெரிவித்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது கடந்த அ.தி.மு.க ஆட்சியிலேயே ஆன்லைன் விளையாட்டை தடை செய்து சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற பெஞ்சு, தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் முரண்பாடாகவும், முறையாக உருவாக்கப்படாத வகையிலும் இருக்கிறது என்று கூறி இந்த ஆன்லைன் தடை சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. அதேநேரத்தில் 'அரசியலமைப்பு சட்டத்துக்குட்பட்டு ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டத்தை அரசு கொண்டு வருவதற்கு இந்த உத்தரவு தடையாக இருக்காது', என்றும் நீதிபதிகள் அந்த உத்தரவில் கூறியுள்ளனர்.
இந்த தடை உத்தரவை நீக்கக்கோரி அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகள் இருக்கத்தான் செய்யும். அதை தடுப்பது அவ்வளவு எளிதல்ல. புகைப்பிடித்தல் உடல்நலத்துக்கு கேடு என்றாலும் அதை முழுமையாக தடை செய்ய முடியவில்லை. ஆனால் சிகரெட் பாக்கெட்டுகளில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், "புகையிலை மிக வேதனையான உயிரிழப்பை ஏற்படுத்துகிறது" என்ற வாசகங்களுடன் வாயில் புற்றுநோய் பாதிப்பு பற்றிய படமும் அச்சிடப்பட்டுள்ளது. அதுபோல அரசு சட்டப்பூர்வமாக இதை தடை செய்யும் வரையில், இதுபோன்ற விளையாட்டுகளால் தற்கொலை செய்துகொள்ளும் உணர்வு வராத வகையில், டி.ஜி.பி. சைலேந்திரபாபு போல அனைத்து தரப்பினரும் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளில் இன்னும் தீவிரமாக ஈடுபட வேண்டும். விழிப்புணர்வினால்தான் திருத்த முடியுமே தவிர, வெறும் சட்டத்தினால் தடைசெய்வது இயலாத ஒன்றே…