இனி வயநாடுக்கு தேவை மறுவாழ்வு !


இனி வயநாடுக்கு தேவை மறுவாழ்வு !
x

கடந்த 30-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் நரேந்திரமோடி இன்று வருகிறார்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் கடந்த 30-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் நரேந்திரமோடி இன்று வருகிறார். அப்போது, அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலன் தரும் வகையில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலச்சரிவின்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் துல்லியமாக தெரியவில்லை. சில கிராமங்கள், அங்கு மனிதர்கள் வாழ்ந்த சுவடே தெரியாத வகையில் அழிந்துபோய் உள்ளது. புஞ்சரிமட்டம் என்ற கிராமம் எங்கே இருந்தது? என்ற அடையாளமே தெரியவில்லை. அந்த பகுதியில் 33 ஆண்டுகளாக பணியாற்றிய ஒரு தபால்காரர், "தபால் அலுவலகத்தை காணவில்லை. இனி தபால்கள் வந்தாலும் யாரைத்தேடி எங்கு சென்று கொடுப்பேன்" என்று தவித்துக் கொண்டிருப்பது சோகத்தின் உச்சம். இத்தனை நாட்கள் ஆகியும் இன்னும் மீட்புப் பணிகள் முடியவில்லை. 18 ஆயிரம் தன்னார்வலர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், மீட்பு பணியிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதிலும் தீவிரமாக ஈடுபட்டுவருவது பாராட்டுக்குரியது.

நேற்று முன்தினம் வரை 413 பேர் உயிரிழந்துள்ளனர். 131 பேரை இன்னும் காணவில்லை. இதில், யாரும் உயிர் பிழைத்து இருப்பதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. பாதிக்கப்பட்ட 648 குடும்பங்களை சேர்ந்த 2,225 பேர் 16 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 845 பெண்களும் 533 குழந்தைகளும் அடங்குவார்கள். தாய் - தந்தையை இழந்த 533 குழந்தைகளை தத்தெடுக்க ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். தத்தெடுப்பதற்கான நடைமுறைகளை தளர்த்தி அந்த குழந்தைகளை கருணைமிக்க குடும்பங்களின் பாதுகாப்பில் வளர்க்க ஒப்படைக்கவேண்டும் என்ற கருத்து மக்களிடம் இருக்கிறது.

இனி பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசாங்கங்கள் மேற்கொள்ளவேண்டும். கேரள அரசாங்கம் ஒரு பாதுகாப்பான இடத்தில் புதிய நகரியம் அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. அவர்களுக்கு வீடு கட்டிக்கொடுப்பதுடன் மட்டுமல்லாமல், குடும்பம் நடத்துவதற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் உடனடியாக வழங்கவேண்டும். அவர்களின் உழைப்புக்கான வேலைவாய்ப்பை வழங்கி பிழைப்புக்கு வழிவகைசெய்யவேண்டும். அங்குள்ள மக்களெல்லாம் மலைப்பகுதிகளில் வாழ்ந்து பழகியவர்கள். தேயிலை தோட்டங்களில் வேலை செய்தவர்கள். எனவே, அவர்களுக்கு வசதியாக பாதுகாப்பான ஒரு இடத்தை தேர்வு செய்து இந்த நகரியத்தை உருவாக்கவேண்டும்.

ஏற்கனவே, காங்கிரஸ் தலைவரும், வயநாடு தொகுதி எம் பியுமான ராகுல்காந்தி 100 வீடுகள், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா 100 வீடுகள் மற்றும் வணிகர் சங்கம் 50 வீடுகள், மற்றொரு தனியார் நிறுவனம் 50 வீடுகள், துபாயில் உள்ள ஒரு தொழில் அதிபர் 50 வீடுகள் உள்பட பல தொழில் அதிபர்கள் வீடுகள் கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளனர். இது அந்த நல் உள்ளங்களின் இரக்க குணத்தை வெளிப்படுத்துகிறது. என்றாலும், இவர்கள் அத்தனை பேரும் அரசை அணுகும்போது, அவர்களுக்கான உதவிகளை செய்துகொடுத்து விரைவாக வீடுகளை கட்டி, அவர்களின் கைகளாலேயே பயனாளிகளிடம் வழங்கி கவுரவிக்கவேண்டும்.

மத்திய அரசும் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ,2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மூணாறு நிலச்சரிவில் இறந்த 70 பேரின் குடும்பங்களுக்கு மத்திய அரசு அறிவித்த நிதியுதவி இன்னும் வழங்கப்படவில்லை. எனவே, அந்த நிதியையும், தற்போது அறிவிக்கப்பட்ட நிதியையும் சம்பந்தப்பட்ட குடும்பத்தாருக்கு விரைந்து வழங்க மத்திய அரசு முன்வரவேண்டும்.


Next Story