இயற்கை அன்னை கருணை பொழிந்தாள்!


Mother Nature has shown mercy!
x

காவிரி உபரிநீர் திட்டத்தின் மூலம் ஏரி, குளங்களிலும் தண்ணீர் நிரப்பும் பணி நடந்துவருகிறது

சென்னை,

தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் ஏறத்தாழ 50 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பியே வாழ்கிறார்கள். இதில், மேட்டூர் அணையை நம்பி சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 13 டெல்டா மாவட்ட விவசாயிகள் இருக்கின்றனர். ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை வைத்து, ஜூன் மாதம் 105 நாட்கள் குறுவை, அக்டோபர் மாதம் 155 நாட்கள் தாளடி, ஜூலை மாதம் 180 நாட்கள் சம்பா ஆகிய பயிர் சாகுபடிகள் செய்யப்படுகின்றன. இந்த சாகுபடி சக்கரமெல்லாம் ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டால்தான் முறையாக சுழலும்.

நூற்றாண்டை நெருங்கிக்கொண்டு இருக்கும் மேட்டூர் அணையில் இருந்து இதுவரை 19 ஆண்டுகளில் மட்டுமே ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 12 ஆண்டுகள் அதற்கு முன்பாகவும், மற்ற ஆண்டுகளில் அதற்கு பிறகும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை, தனது முழு கொள்ளளவான 120 அடியை இதுவரை 61 முறைதான் எட்டியுள்ளது. இந்த ஆண்டு நீர்மட்டம் மிக குறைவாக இருந்ததால் ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்க முடியவில்லை.

இதுமட்டுமல்லாமல், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. தண்ணீரை மாதாந்திர பகிர்வு அடிப்படையில் வழங்கும் முறையை கர்நாடக அரசு பின்பற்றாததால் கடும் சிக்கல் ஏற்பட்டது. தமிழக அரசின் முறையீட்டின் பேரில், காவிரி ஒழுங்காற்று குழு கடந்த மாதம் 12-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரை தினமும் ஒரு டி.எம்.சி., அதாவது 11,500 கன அடி தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், கர்நாடக அரசாங்கமோ தினமும் 8 ஆயிரம் கன அடி தண்ணீரைத்தான் வழங்க முடியும் என்று விடாப்பிடியாக இருந்தது.

டெல்டா மாவட்ட விவசாயிகளின் ஏக்கத்தை கர்நாடகம் போக்காத நிலையில், இயற்கை அன்னை மழையாக பொழிந்து கருணை காட்டினாள். கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை உச்சம் தொட்டு, கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகள் வேகமாக நிரம்பின. இதனால், உபரிநீரை காவிரி ஆற்றில் திறந்துவிட வேண்டிய கட்டாயம் கர்நாடகத்துக்கு ஏற்பட்டது. மேட்டூர் அணையும் வேகமாக நிரம்பத் தொடங்கியதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 28-ந்தேதி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு முதலில் 5 ஆயிரம் கன அடியாக இருந்து, பிறகு படிப்படியாக உயர்த்தப்பட்டு, நேற்று முன்தினம் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதைப்போல் விவசாயிகள் உள்ளத்தில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டது. இதனால், பாசனத்துக்கு மட்டுமின்றி, காவிரி உபரிநீர் திட்டத்தின் மூலம் ஏரி, குளங்களிலும் தண்ணீர் நிரப்பும் பணி நடந்துவருகிறது. கர்நாடகாவில் இருந்து உபரிநீர் மேலும் திறந்துவிடப்பட்டால், காவிரி ஆற்றில் பாய்ந்தோடி கடலுக்கு செல்லும் நிலை ஏற்படும். அதுபோன்ற சூழ்நிலைகளை தடுக்க பசுமை தாயகத்தின் தலைவர் சவுமியா அன்புமணி கூறியதுபோல, காவிரி ஆற்றின் குறுக்கே 10 கி.மீ. இடைவெளியில் தடுப்பணைகள் கட்டும் திட்டத்தை மேற்கொள்ள முடியுமா? என்பதையும் அரசு பரிசீலிக்கவேண்டும். இது ஒரு நல்ல யோசனை.


Next Story