காலை உணவு திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் பெயர்
காலை உணவுத்திட்டம் மூலமாக 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.
சென்னை,
மானியக்கோரிக்கைகளுக்கான தமிழக சட்டசபை கூட்டம் நடந்துவருகிறது. வழக்கமாக ஏறத்தாழ ஒரு மாதம் நடக்கும் இந்த கூட்டத்தொடரை விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருவதால் தினமும் காலையும், மாலையும் என 9 நாட்களில் முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். நேரம் குறைவு என்றாலும் அமைச்சர்கள் வெளியிடும் அறிவிப்புகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது மானியக்கோரிக்கை மீது அளித்த பதிலுரையில் அரசியல் குடும்பத்தில் பிறந்தவருடைய பாரம்பரிய திறமையை பளிச்சிட்டிருக்கிறார்.
அவரது தாத்தா அன்பில் தர்மலிங்கம் அண்ணா, கலைஞரின் அன்பையும், நம்பிக்கைக்குரியவராகவும் திகழ்ந்த பழம்பெரும் தலைவர். கலைஞரின் அமைச்சரவையில் 1975-க்கு முன் அமைச்சராக இருந்தவர். அவரது தந்தை பொய்யாமொழி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உற்ற நண்பரான சட்டமன்ற உறுப்பினர். அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ஆருயிர் நண்பர். ஆக கலைஞர் குடும்பத்தோடு நெருங்கிய உறவு கொண்டுள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வி மானியக்கோரிக்கைக்கு இப்போது 4-வது முறையாக பதிலளித்தார்.
அப்போது அவர் புதிய அறிவிப்புகளை மட்டுமல்லாமல், ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்புகளையும், தான் நிறைவேற்றிய சாதனைகளையும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் பள்ளிக்கல்வி அமைச்சர் என்ற முறையில் அவரிடம் 2,641 கோப்புகள் வந்திருக்கின்றன என்றும், அந்த கோப்புகள் அத்தனையிலும் கையெழுத்திட்டு ஒரு கோப்பும் நிலுவையில் இல்லை என்பதையும் சட்டமன்றத்தில் பதிவுசெய்துள்ளார். அதுபோல இதுவரை சட்டமன்றத்தில் 158 அறிவிப்புகள் வெளியிட்டதாகவும், அதில் 143 அறிவிப்புகளை செயல்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டு, மீதம் இருக்கின்ற 15 அறிவிப்புகளையும் விரைவில் செய்துகாட்டுவோம் என்று உறுதியளித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித்துறை சார்பில் இதுவரை 67-க்கும் மேற்பட்ட திட்டங்களைக் கொண்டுவந்திருப்பதாக தெரிவித்தார்.
இந்த ஆண்டு மானியக்கோரிக்கையில் 25 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவர் சட்டசபையில் ஒரு வேண்டுகோளையும் விடுத்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்துள்ள காலை உணவுத்திட்டம் மூலமாக 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 18 லட்சத்து 53 ஆயிரம் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இப்போது சமூகநலத்துறை மூலமாக சுவைமிகு காலை உணவு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் இந்த ஆண்டு முதல் ஊரகப்பகுதிகளில் அமைந்துள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிக்கூடங்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. இந்த காலை உணவுத்திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் காலை உணவுத்திட்டம் என்ற பெயரை வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை அன்பில் மகேஷ் பொய்யாமொழி விடுக்க உறுப்பினர்கள் மேஜையை தட்டியதால் அவையே அதிர்ந்தது.
இந்த கோரிக்கை நியாயமான கோரிக்கைதான். முதல்-அமைச்சரின் சிந்தையில் உதித்து, அவர் செயல்படுத்திய இந்த திட்டத்துக்கு அவர் பெயரை வைப்பதே சாலப்பொருத்தமாகும். சத்துணவுத்திட்டத்தை கொண்டுவந்த எம்.ஜி.ஆரின் பெயரைக்கொண்டுதான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத்திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டு இன்றும் அந்த பெயரிலேயே இயங்குகிறது. ஏற்கனவே மனிதநேய மையம் சார்பில் மலிவு விலை உணவகம் நடத்திய சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தான் பதவியேற்றவுடன் அதுபோல மலிவு விலை உணவகத்தை 'அம்மா உணவகம்' என்ற பெயரில் கொண்டு வந்தார். ஜெயலலிதா பெயரிலான இந்த அறிவிப்பை வெளியிட்டபோது தி.மு.க.வினர் எதிர்க்கவில்லை. எனவே தொடங்கியவர்கள் பெயரை சூட்டுவது மரபு என்ற வகையில், மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம் கொண்டுவந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரையே அந்த திட்டத்துக்கு சூட்டலாம்.