நமது நாட்டை பாருங்கள்!


நமது நாட்டை பாருங்கள்!
x

இந்தியாவின் வளர்ச்சியில் மத்திய - மாநில அரசுகளின் முயற்சிகளில் தனியார் பங்களிப்பும் இருந்தால், அது வேகமான வளர்ச்சியாக இருக்கும். அதனால்தான், புதிய தொழில்களை தொடங்குவதற்கு தனியார் முதலீடுகளை ஈர்க்க அரசுகளின் சார்பில் பெரும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

மக்களும் பல நேரங்களில் தனியார் சேவைகளை பயன்படுத்த மிக ஆர்வமாக இருக்கிறார்கள். சற்று கூடுதலாக கட்டணம் செலுத்தினாலும், தங்களுக்கு மகிழ்வான சேவைகள் கிடைக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

ரெயில் போக்குவரத்தை எடுத்துக்கொண்டால், இந்தியன் ரெயில்வே மட்டுமே பொதுமக்களுக்கு பயணச் சேவையை அளித்து வந்தது. இப்போது முதல் முறையாக, ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக தனியார் ரெயில்களை இயக்கவும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. "நமது நாட்டை பாருங்கள்" என்ற திட்டத்தின் அடிப்படையில், "இந்தியாவின் கவுரவம்" ரெயில்களை இயக்க தனியாருக்கு அனுமதி வழங்க, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரெயில்வே துறை முடிவெடுத்தது. இந்தியாவின் வளமான கலாசாரத்தையும், வரலாற்று சிறப்பு மிகுந்த இடங்களையும் மக்களுக்கு, குறிப்பாக வெளிநாட்டினருக்கு, சுற்றிக்காட்டுவதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.

இதன்படி, தனியார் ரெயில்வே நிர்வாகத்திடம் ரெயில்களை ஒரு குறிக்கோள் அடிப்படையிலான பயணத்துக்காக குத்தகைக்கு பெற்றுக்கொள்ளலாம். எந்த வழியில் ரெயில்கள் செல்ல வேண்டும்?, எங்கு நிற்க வேண்டும்?, என்னென்ன சேவைகள் வழங்கலாம்?, குறிப்பாக கட்டண நிர்ணயம் எவ்வளவு? என எல்லாவற்றையுமே அந்த குத்தகைக்கு எடுக்கும் தனியார் நிறுவனமே முடிவு செய்து கொள்ளலாம். இந்த குத்தகை காலம் 2 ஆண்டுகள். அந்த காலம் வரை அவர்களுக்கு வழங்கப்படும் ரெயில்களை அவர்கள் பொறுப்பில் வைத்துக்கொள்ளலாம். ஒரு ரெயிலில் குறைந்தது 14 பெட்டிகள், அதிகபட்சமாக 20 பெட்டிகள் இருக்கும். கண்டிப்பாக 2 கார்டு வேன்கள் இருக்க வேண்டும். ரெயில்வே நிர்வாகம் என்ஜின் டிரைவர்கள், கார்டுகளை அந்த ரெயிலை இயக்குவதற்காக வழங்கும். இதில் ரெயில்வேக்கும் வருவாய் கிடைக்கும். முதல் ரெயில் தமிழ்நாட்டில் இருந்து இயக்கப்பட்டது, தமிழகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாகும், பெருமையாகும்.

"தென்னக நட்சத்திர ரெயில்" என்று பெயர் சூட்டப்பட்ட இந்த தனியார் ரெயில், கடந்த மாதம் 14-ந்தேதி வட கோவை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சீரடிக்கு சென்று திரும்பியது. இது 5 நாள் பயணமாகும். இந்த ரெயிலில் 1,110 பயணிகள் பயணம் செய்தனர். கோவையில் புறப்பட்ட இந்த ரெயில், திருப்பூர், ஈரோடு, சேலம், எலகங்கா, தர்மாவரம், மந்த்ராலயம் சாலை மற்றும் வாடி ரெயில் நிலையங்களில் நின்று சென்றது. மந்த்ராலயம் சாலை ரெயில் நிலையத்தில் இருந்து பயணிகள் மந்த்ராலயம் கோவிலில் போய் வழிபாடு செய்துவிட்டு திரும்ப வசதியாக 5 மணி நேரம் நின்று சென்றது.

இந்த ரெயிலில் பயணம் செய்த பயணிகள் அனைவருக்குமே, "மிக அருமையான வசதி செய்யப்பட்டிருந்தது. அடிக்கடி சுத்தம் செய்தார்கள். பயணிகளுக்கு கோவில்களில் வி.ஐ.பி. தரிசனம், தங்கும் வசதி, இன்சூரன்ஸ், மேலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட படுக்கை தலையணையை வீட்டுக்கே எடுத்துச்செல்லும் வசதி உள்பட பல வசதிகள் அளிக்கப்பட்டன. இந்த ரெயிலில் வழங்கப்பட்ட உணவுகள் எல்லாமே மிகத்தரம் வாய்ந்ததாக இருந்தது என கருத்து தெரிவித்தனர். இப்போது மதுரை-காசி யாத்திரைக்கும், "உலா ரெயில்" என்ற 12 நாட்கள் ஆன்மிக சுற்றுலா ரெயில் வருகிற 23-ந்தேதி புறப்படுகிறது.

இதுபோன்ற ரெயில்கள் பொதுமக்களால் பெரிதும் வரவேற்கப்படும் நிலையில், இத்தகைய சேவைகளை மேலும் அதிகளவில் தொடங்க வேண்டும். சற்று கூடுதல் கட்டணமாக இருந்தாலும், நிறைவான வசதி பயணத்தை மகிழ்ச்சியாக்குகிறது என்ற வகையிலும், தனியாரும் ரெயில்களை இயக்க தொடங்கினால், வேலைவாய்ப்புகள் பெருகும். ரெயில்வேக்கு வருமானம் கிடைக்கும் என்ற வகையில், இந்த திட்டம் வரவேற்புக்குரியதாகும்.


Next Story