இங்கிலாந்தின் 3-வது பெண் பிரதமர் லிஸ் டிரஸ்


இங்கிலாந்தின் 3-வது பெண் பிரதமர் லிஸ் டிரஸ்
x

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக யார் வருவார்? என்று உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த கேள்விக்கு,47 வயதான லிஸ் டிரஸ் என்று விடை கிடைத்துவிட்டது.

கடந்த 2019-ம் ஆண்டில் நடந்த பிரதமர் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றிபெற்று, பிரதமராக போரிஸ் ஜான்சன் பொறுப்பேற்றார். 3 ஆண்டு காலம் நடந்த ஆட்சிக்கு பிறகு, போரிஸ் ஜான்சன் மந்திரிசபையில் உள்ள மந்திரிகள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.

இதுமட்டுமல்லாமல், பல மந்திரிகள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததைத்தொடர்ந்து, எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து, கன்சர்வேட்டிவ் கட்சிக்கு அடுத்த 2 ஆண்டுகளுக்கான புதிய பிரதமர் யார்? என்பதை தேர்ந்தெடுக்க உள்கட்சி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் போரிஸ் மந்திரிசபையில் வெளியுறவு துறை மந்திரியாக இருந்த லிஸ் டிரசும், நிதி மந்திரியாக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகனுமான ரிஷி சுனக்குக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

முதலில் நடந்த 5 சுற்றுகளில் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் அளித்த வாக்குகளில், ரிஷி சுனக் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர்தான் இங்கிலாந்து நாட்டின் பிரதமர் என்ற பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியது. ஆனால், கட்சி உறுப்பினர்கள் லிஸ் டிரசுக்கு ஆதரவாக வாக்களித்ததால், அவரே வெற்றி பெற்றார். லிஸ் டிரஸ் 57.4 சதவீதமும், ரிஷி சுனக் 42.6 சதவீதமும் வாக்குகள் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எனவே, இங்கிலாந்து நாட்டின் 3-வது பெண் பிரதமராக லிஸ் டிரஸ் பொறுப்பேற்கிறார். இதற்கு முன்பு 1979 முதல் 1990 வரையில் மார்க்கரெட் தாட்சரும், 2016 முதல் 2019 வரை தெரசா மேயும் பிரதமர்களாக இருந்தனர்.

இதற்கு முன்பு பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் 66.4 சதவீத ஓட்டுகளையும், டேவிட் கேமரூன் 67.6 சதவீத ஓட்டுகளையும் பெற்று பெருவாகை சூடியிருந்தனர். லிஸ் டிரஸ் வெற்றி பெற்றவுடன் உலக தலைவர்களில் முதலாவதாக பிரதமர் நரேந்திர மோடிதான் வாழ்த்து தெரிவித்தார். 1975-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு நகரில் பிறந்த லிஸ் டிரஸ் என அழைக்கப்படும் மேரி எலிசபெத் டிரசின் தந்தை கணக்கு பேராசிரியர். தாயார் ஒரு நர்சு. சிறு வயதில் இருந்தே லிஸ் டிரஸ் அரசியலில் ஆர்வமுடையவராக இருந்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல், பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் அவர். பிரெக்சிட் தொடர்பான பொது வாக்கெடுப்பில், இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனில் இணைந்தே இருக்கவேண்டும், வெளியே வரக்கூடாது என்று வாக்களித்தார்.

பிரதமர் தேர்தலில் லிஸ் டிரஸ் பெற்ற வெற்றி, இந்தியாவுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தியாகும். அவர் வர்த்தகத் துறை மந்திரியாக இருந்தபோது, கடந்த 2 ஆண்டுகளில் 3 முறை இந்தியாவுக்கு வந்து இருக்கிறார். இந்தியாவோடு இங்கிலாந்து மிக வலுவான வர்த்தக உறவுகளை கொண்டிருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வமுடையவராக இருக்கிறார். அவரது முயற்சிதான் இந்தியா- இங்கிலாந்துக்கு இடையே தடையில்லா வர்த்தக உறவுகளுக்கான ஒப்பந்தம், வருகிற தீபாவளிக்கு முன்பு கையெழுத்திடப்படவேண்டும் என்ற முனைப்புகளுக்கு காரணமாக இருக்கிறது. அவர் பிரதமராக இருக்கும் நேரத்தில், இரு நாடுகளுக்கு இடையே நட்புறவு, வர்த்தக உறவு மேம்படும் என்பதில் சந்தேகமேயில்லை.

ஆனால், இங்கிலாந்து நாட்டில் தற்போது நிலவும் 40 ஆண்டுகளில் இல்லாத விலைவாசி உயர்வு, கடுமையான வரி உயர்வு, பல்வேறு தொழிலாளர் போராட்டங்கள், திட்டமிடப்பட்டுள்ள வேலைநிறுத்தங்கள், வெளிநாடுகளில் இருந்து கள்ளத்தனமாக கடல் வழியாக குடியேற வருபவர்கள் பிரச்சினை, பிரெக்சிட் பிரச்சினை ஆகியவற்றை எப்படி சமாளிக்கப்போகிறாரோ?, அந்த சவால்களையெல்லாம் எப்படி சந்திக்கப்போகிறாரோ? என்பதுதான் உலகத்தின் பார்வையாக இருக்கிறது.


Next Story