நடப்பவை நல்லுறவோடு நடக்கட்டும்!
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, கவர்னர் ஆர்.என்.ரவியை தன் நிலையில் இருந்து இறங்கிவர வைத்துவிட்டது.
சென்னை,
'நான் செய்ய மாட்டேன்' என்று மறுத்த கவர்னரை, 'நான் செய்கிறேன்' என்று சொல்ல வைத்ததன் மூலம், கவர்னரின் அதிகார எல்லையை தெளிவாக படம்போட்டு காட்டிவிட்டது சுப்ரீம் கோர்ட்டு. சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு கடந்த டிசம்பர் மாதம் 19-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு தண்டனை விதித்ததால், அப்போது அவரது அமைச்சர் பதவி பறிபோனது.
இப்போது, சுப்ரீம் கோர்ட்டு அப்பீலில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்ததால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 13-ந்தேதி கவர்னருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க கோரியிருந்தார். ஆனால், கவர்னர் இதை ஏற்க மறுத்து, 'பொன்முடி மீதான தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்துள்ளதே தவிர ரத்து செய்யவில்லை. எனவே அவரை அமைச்சராக நியமிக்க முடியாது' என்று பதிலளித்து இருந்தார்.
கவர்னரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து, கடுமையான கண்டன கணைகளை வீசியது. "கவர்னருக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார்? கவர்னரின் செயல் அரசியல் சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்ல, எங்களுக்கும் மிகுந்த கவலையளிக்கிறது. கவர்னருக்கு ஆலோசனை வழங்கியவர்கள் சரியான ஆலோசனையை வழங்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டு ஒரு தண்டனையை நிறுத்திவைத்துள்ளது என்றாலே, அது தண்டனையை தடுக்கிறது என்பது கவர்னருக்கு தெரியாதா? பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்ய மறுப்பதன் மூலம் சுப்ரீம் கோர்ட்டை அவர் அவமதித்துள்ளார். முதல்-அமைச்சரின் பரிந்துரையை கவர்னர் எப்படி நிராகரிக்க முடியும்? இந்த விவகாரத்தில் கவர்னர் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சாதகமான முடிவை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் உத்தரவு பிறப்பிப்போம். சட்டத்தின்படி நடக்க கவர்னருக்கு ஒரு வாய்ப்பு தருகிறோம்" என்று மிக கடுமையாக கூறி, அடுத்த நாளுக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு, கவர்னர் ஆர்.என்.ரவியை தன் நிலையில் இருந்து இறங்கிவர வைத்துவிட்டது. அடுத்த நாள், அதாவது 24 மணி நேரத்துக்குள் கவர்னர் ஆர்.என்.ரவி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி, முதல்-அமைச்சர் ஏற்கனவே கேட்டுக்கொண்டபடி, பொன்முடிக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்குவதற்கு ஒப்புதல் அளிப்பதாகவும், அதே நாளில் பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் எனவும் தெரிவித்துவிட்டு, அந்த நேரத்தில் பொன்முடிக்கு பதவிப் பிரமாணமும் செய்து வைத்துவிட்டார்.
அரசின் முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர் என்பதை சுப்ரீம் கோர்ட்டு இந்த தீர்ப்பின் மூலம் உறுதிபட பறைசாற்றி கவர்னரின் அதிகார எல்லையை தெளிவுபடுத்திவிட்டது. இந்த தீர்ப்பு நல்லதொரு நடைமுறைக்கு வழிகாட்டிவிட்டது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை பின்பற்றினால், இனி கவர்னருக்கும், அரசுக்கும் எந்த உரசலும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்ற வகையில், இது ஒரு நல்ல தீர்ப்பு.
அமைச்சர் பொன்முடி பதவியேற்பு விழாவில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "தேர்தல் பிரசாரத்தை முதன்முதலாக ராஜ்பவனில் இருந்து தொடங்குகிறேன்" என்று கவர்னரிடம் கூறினார். அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி "பெஸ்ட் ஆப் லக்" என்று ஆங்கிலத்தில், அதாவது "முயற்சி வெற்றி அடையட்டும்" என்று வாழ்த்தினார். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, எந்த காலத்துக்கும் எல்லா மாநிலங்களுக்கும் கவர்னர்-அரசுக்குள்ள நல்லுறவுக்கு ஒரு அடித்தளத்தை அமைத்துவிட்டது.