ஆட்டோ ரிக்ஷா கட்டணம் உயருகிறதா?
மக்களின் அன்றாட வாழ்க்கையில் போக்குவரத்து என்பது பிரிக்க முடியாதது. வாழ்க்கை சக்கரத்தை ஓட்ட, எந்த காரியம் என்றாலும், வெளியே சென்றுதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது.
மக்களின் அன்றாட வாழ்க்கையில் போக்குவரத்து என்பது பிரிக்க முடியாதது. வாழ்க்கை சக்கரத்தை ஓட்ட, எந்த காரியம் என்றாலும், வெளியே சென்றுதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. அப்படி வெளியே செல்லும்போது, பயணம் இனிமையாக இருக்க வேண்டும். பயணம் இனிதாகுவது நாம் பயன்படுத்தும் போக்குவரத்து வாகனங்களை பொருத்துத்தான் இருக்கிறது. அந்தவகையில், ஆட்டோ ரிக்ஷா முக்கிய பங்காற்றுகிறது. அவர்கள் இனிமையாக வரவேற்று அழைத்து சென்றால், மனம் மகிழும். ஆட்டோ ரிக்ஷாவில் பிரச்சினையெல்லாம், கேட்கும் கட்டணமும், கூப்பிட்ட இடத்துக்கு மறுப்பு சொல்லாமல் வருவதிலும்தான் இருக்கிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 3 லட்சத்து 4 ஆயிரத்து888 ஆட்டோ ரிக்ஷாக்கள் இருக்கின்றன. தலைமை செயலாளர் வெ.இறையன்பு பல ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலாத்துறை செயலாளராக இருந்தார். அப்போது அவர் ஆட்டோ ரிக்ஷா டிரைவர்களை 'பண்பாட்டு தூதர்கள்' என்று அடைமொழியோடு அழைத்து, அவர்கள் அன்பொழுக நடந்தால், சுற்றுலா மேம்படும் என்ற கருத்தை பதிவு செய்தார். அவர்களின் பணி எந்தவகையில் செம்மைப்படுத்தப்பட வேண்டும் என்று விளக்கும் வகையில், 8 பக்கங்கள் கொண்ட ஒரு சிறிய குறிப்பேட்டை தயாரித்து, ஆட்டோ ரிக்ஷா டிரைவர்களிடம் வினியோகிக்க ஏற்பாடு செய்தார். அது நல்ல பலனை கொடுத்தது. இப்போதும் தமிழக போக்குவரத்துத் துறையும், போக்குவரத்து போலீசாரும் அந்த குறிப்பேட்டை ஆட்டோ டிரைவர்களுக்கு வினியோகித்தால், நம் ஆட்டோ ரிக்ஷா டிரைவர்கள், நல்ல சகோதரர்கள் போலவே பயணிகளுடன் பழகுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆட்டோ ரிக்ஷா டிரைவர்களிடம், "ஏன் மீட்டர் போட்டு ஓட்டுவதில்லை?. ஏன் மீட்டருக்கு மேல் அதிக தொகை கேட்கிறீர்கள்?" என்று கேட்டால், "இப்போதைய மீட்டர் கட்டணம் 2013-ம் ஆண்டு ஆகஸ்டு 25-ந்தேதி, முதலில் சென்னையிலும், பின்பு மற்ற இடங்களிலும் நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி, குறைந்தபட்ச கட்டணமாக 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.25-ம், அதற்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 என்றும் நிர்ணயிக்கப்பட்டது. ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் காத்திருப்பு கட்டணமாக ரூ.3.50-ம் வசூலித்துக் கொள்ளலாம். இரவுநேர கட்டணமாக, அதாவது இரவு 11 மணிக்கு மேல் காலை 5 மணி வரை, கூடுதலாக50 சதவீதம் வசூலித்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவிடப்பட்டது. அப்போதே இந்த கட்டணம் போதாது என்று கோரிக்கை விடுத்தோம். அப்போது பெட்ரோல் விலை என்ன?, இப்போது விலை என்ன?. இந்த விலையில் எப்படி பழைய கட்டணத்தில் மீட்டர் போட்டு, அந்த தொகைக்கு ஓட்ட முடியும்?, எங்கள் நிலையையும் பாருங்கள்" என்கிறார்கள். அவர்கள் கூறுவதிலும் நியாயம் இருக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி, தமிழக அரசு ஆட்டோ ரிக்ஷா கட்டணத்தை திருத்தியமைக்க ஒரு குழுவை அமைத்தது. இந்த குழு ஆட்டோ ரிக்ஷா டிரைவர்கள் உள்பட அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி, இப்போது குறைந்தபட்ச கட்டணம் ரூ.40 என்றும், அதற்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.18 என்றும் பரிந்துரை செய்துள்ளது. ஆனால், ஆட்டோ ரிக்ஷா டிரைவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. எங்களுக்கு கட்டுபடியாகாது. குறைந்தபட்ச கட்டணம் ரூ.45 ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும், அதற்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.25 நிர்ணயிக்க வேண்டும் என்று ஒரு சாராரும், மற்றொரு சாரார் குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 ஆக நிர்ணயிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள். ஆட்டோ ரிக்ஷா டிரைவர்களுக்குத்தான் எந்த கட்டணம் தங்களுக்கு கட்டுபடியாகும் என்று தெரியும் என்ற வகையில், அவர்களை அரசு அழைத்து பேசி, புதிய கட்டணத்தை அறிவிக்கவேண்டும். அதன் பிறகு, மீட்டர் போட்டுத்தான் ஓட்ட வேண்டும் என்பதை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தலாம்.