விடை பெற்றது 35 ஆண்டுகால உறவு !
தேர்தலில் பா.ஜனதா தனியாக எப்படியும் 370 இடங்களில் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி கூறினார்.
சென்னை,
மக்களவைக்கான 7 கட்ட தேர்தல் தொடங்கியுள்ளது. "இந்த தேர்தலில் பா.ஜனதா தனியாக எப்படியும் 370 இடங்களில் வெற்றி பெறும். பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்" என்று பிரதமர் நரேந்திரமோடி இன்றளவும் உரத்த குரலில் மிக உறுதியாக பிரகடனப்படுத்தி வருகிறார். நாட்டில் எந்த இடத்துக்கு பிரசாரத்துக்கு போனாலும் மிக முக்கியமாக இதைத்தான் பேசி வருகிறார். அதற்கேற்ற வகையில், கூட்டணி கட்சிகளுடன் உடன்பாடு மேற்கொள்ளும் அவர், பா.ஜனதா சார்பில் வேட்பாளர்கள் தேர்விலும் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார்.
ஏற்கனவே, போட்டியிட்ட தொகுதிகள் பலருக்கு மாற்றப்பட்டுள்ளன. மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த பல மத்திய மந்திரிகள் இந்த தேர்தலில் போட்டியிட நிறுத்தப்பட்டுள்ளனர். பலருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அந்த வரிசையில் மேனகா காந்தி, வருண் காந்தி என்று இருவரில் ஒருவர் கடந்த 35 ஆண்டுகளாக போட்டியிட்டு, அந்த தொகுதியின் மூலை முடுக்கிலெல்லாம் நன்கு பிரபலமடைந்துள்ள உத்தரபிரதேச மாநிலம் பிலிப்பிட் தொகுதியில், இந்த முறை அவர்கள் இருவருக்கும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தியின் மனைவியான மேனகா காந்தி, விமான விபத்தில் சஞ்சய் காந்தி மறைந்த பிறகு அந்த குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறி தன் பாதையை தனியாக வகுத்து கொண்டார். முதன் முதலாக பிலிப்பிட் தொகுதியில் 1989, 1996-ம் ஆண்டுகளில் ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதில் இருந்து இருமுறை சுயேச்சை வேட்பாளராகவும் 2004, 2014-ம் ஆண்டுகளில் பா.ஜனதா வேட்பாளராகவும் வெற்றி பெற்றுள்ளார். 2009, 2019-ம் ஆண்டுகளில் வருண் காந்தி பிலிப்பிட் தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்று மக்களவையில் பணியாற்றினார். இந்த தேர்தலில் அவர்கள் இருவருக்கும் இடம் கொடுக்காமல், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்து உத்தரபிரதேச மாநில பொதுப்பணித்துறை மந்திரியாக இருக்கும் ஜிதின் பிரசாதா பிலிப்பிட் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அவரும் வேட்புமனு தாக்கல் செய்தது அரசியல் உலகில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தொகுதி என்றாலே மேனகா காந்திதான் உறுப்பினர், சமீப காலங்களாக வருண் காந்தி உறுப்பினராக இருந்த நிலையில், இந்த மாற்றம் எந்த அளவுக்கு அந்த தொகுதி மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ஜூன் 4-ந்தேதி தேர்தல் முடிவு வரும்போதுதான் தெரியும். மேனகா காந்திக்கு சுல்தான்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. வருண்காந்திக்கு பிலிப்பிட் தொகுதிதான் ஒதுக்கப்படவில்லை, வேறு தொகுதியாவது கொடுக்கப்படும் என்று பார்த்தால் ஒரு தொகுதியும் ஒதுக்கப்படவில்லை.
இந்த தொகுதியுடன் இருக்கும் பந்தத்தை வருண் காந்தி விடமாட்டார், அதனால் சுயேச்சையாக போட்டியிடுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வருண் காந்தி அவ்வாறு செய்யவில்லை. மாறாக பிலிப்பிட் தொகுதி மக்களுக்கு மிகவும் உணர்ச்சி பொங்க ஒரு கடிதம் எழுதியுள்ளார். இந்த தொகுதிக்கும் மேனகா காந்தி, வருண் காந்திக்கும் உள்ள 35 ஆண்டுகால உறவுக்கு இந்த தேர்தல் விடை கொடுத்துவிட்டது. அடுத்து வருண் காந்தியின் முடிவு என்னவாக இருக்கப்போகிறது? என்பதுதான் இப்போது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.