பாதிக்கப்பட்டவர்களுக்கு தாராளமாக இழப்பீடு!
இயற்கை சீற்றம் என்பது மக்களின் கையையோ, அரசின் கையையோ மீறி நடப்பது. இதற்கு யாரையும் குறைசொல்ல முடியாது.
இயற்கை சீற்றம் என்பது மக்களின் கையையோ, அரசின் கையையோ மீறி நடப்பது. இதற்கு யாரையும் குறைசொல்ல முடியாது. மழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்பு, ஒட்டுமொத்த சமுதாயத்தையும் உருட்டிவிடும். 2015-ல் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி மேயராக சைதை துரைசாமி இருந்தார். அப்போது, பெருமழை பெய்து, எங்கு நோக்கினும் வெள்ளக்காடாக இருந்தது. தன்னார்வலர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, போர்வை, உடைகள் போன்ற உதவிகளை செய்தனர். குறிப்பாக, இளைஞர்களும், இளம்பெண்களும் உணவுப்பொட்டலங்களை தயார் செய்து, வெள்ளப்பகுதிகளில் நேரடியாக சென்று குடியிருப்பு வாசிகளிடம் வினியோகித்தனர். அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு சாப்பிட மேயர் சைதை துரைசாமி ஏற்பாடு செய்தார்.
அரசு சார்பில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் வெள்ள நிவாரண நிதியாக ரூ.5 ஆயிரம் அவர்களுடைய வங்கிக்கணக்கில் அனுப்பிவைக்கப்பட்டது. கொரோனா காலத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் 2 முறை ரூ.1,000 வழங்கப்பட்டது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. தேர்தல் வாக்குறுதியை மீறாத முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக இரு தவணைகளில் அந்த தொகையை அனைவருக்கும் வழங்கி உதவிக்கரம் நீட்டினார்.
இப்போது கடந்த 3, 4-ந்தேதிகளில் 'மிக்ஜம்' புயல் வெள்ளத்தினால், சென்னையில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. எல்லா இடங்களும் வெள்ளக்காடானது. பல இடங்களில் மீட்பு பணிகளே படகுகளில் சென்றுதான் நடத்தப்படவேண்டும் என்ற நிலையில் இருந்தது. அனைத்து தொழில்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுவிட்டன. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் ஏராளமான வீடுகளில் பிரிட்ஜ், டி.வி., மிக்சி, லேப்டாப், படுக்கைகள், சோபா, நாற்காலிகள் போன்ற வீட்டு உபயோகப்பொருட்களும், கார், மோட்டார்சைக்கிள் போன்ற வாகனங்களும் தண்ணீரில் மூழ்கி பழுதாகிவிட்டன.
குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் செயல்படும் தொழிற்பேட்டைகளில், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், எந்திரங்களும், உற்பத்திப்பொருட்களும் சேதம் அடைந்துள்ளன. சிறு வியாபாரிகள் தங்கள் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டதால், பெரும் நஷ்டத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். சென்னை மட்டுமல்லாமல், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும், கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் நடந்து சென்று மீட்பு பணிகளையும், நிவாரண உதவிகள் வழங்குவதையும் முடுக்கிவிட்டது மக்களின் மனதை தொட்டது.
"மழை வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6 ஆயிரம் ரொக்கமாக ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும். மற்ற நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும்" என்று அறிவித்துள்ளது மிகவும் வரவேற்புக்குரியது. ஆனால் 2 நாட்களுக்கு மேல் மழைவெள்ளம் சூழ்ந்து துணிமணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப்பொருட்களை இழந்த குடும்பங்களுக்கு நியாயவிலை கடைகள் மூலமாக டோக்கன் வழங்கும் முறையை பின்பற்றி ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். அரசு ஊழியர்கள், வருமானவரி செலுத்துவோர், சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் வாழ்வாதார பாதிப்பு, பொருட்கள் இழப்பை நியாயவிலை கடைகளில் விண்ணப்பிக்கலாம் என்றும் நிபந்தனைகளாக தெரிவித்திருப்பது மக்களுக்கு சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும், பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகள், வலைகளுக்கு இழப்பீடு வழங்கவும், சிறு, குறு, நடுத்தர தொழில் செய்பவர்கள், சாலையோர வியாபாரிகள் போன்றவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கவும் மத்திய அரசாங்கத்திடம் நிவாரணத்தொகை கோரியுள்ள நிலையில், அவர்களுக்கும் இழப்பீடு அறிவிக்கவேண்டும் என்பது கோரிக்கையாக இருக்கிறது.