கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு தேவையா?
வீடு, ஓட்டல்களில் சமையல் தேவைக்கு கியாஸ் சிலிண்டர் அத்தியாவசியம் ஆகும்.
வீடு, ஓட்டல்களில் சமையல் தேவைக்கு கியாஸ் சிலிண்டர் அத்தியாவசியம் ஆகும். இப்போது, இஸ்திரி தொழிலுக்குகூட கியாஸ் பயன்படுத்தப்படுகிறது. எனவே, எல்லோரது மாதாந்திர பட்ஜெட்டிலும், முக்கிய செலவாக கருதப்படும் நிலையில், கியாஸ் விலை உயர்வு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முந்தைய நாளில், யாரும் எதிர்பாராத வகையில், திடீரென்று வீடுகளில் பயன்படுத்தும் 14.2 கிலோ எடையுள்ள சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.50-ம், வணிக ரீதியில் பயன்படுத்தும் 19 கிலோ எடையுள்ள கியாஸ் சிலிண்டர் விலை ரூ.351-ம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது, வீடுகளுக்கான சமையல் கியாஸ் சிலிண்டர் விலை, சென்னையில் ரூ.1,118.50, வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.2,268 என்ற நிலையில் உள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வணிக சிலிண்டர் விலை உயர்வால், டீ-காபி உள்ளிட்ட உணவு பண்டங்களின் விலையும், இஸ்திரி போடுவதற்கான கட்டணமும் உயரும் அபாயம் இருக்கிறது. ஏற்கனவே பணவீக்கம் அதாவது விலைவாசி உயர்வாலும், வேலையில்லா திண்டாட்டத்தாலும் அல்லாடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு, இது மேலும் ஒரு சுமையாகும். சமையல் கியாஸ் சிலிண்டர் விலை என்பது கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. இந்தியாவின் மொத்த தேவையில் 80 சதவீதத்துக்கு மேல் வெளிநாடுகளில் இருந்துதான் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. உலகில் கச்சா எண்ணெயின் மொத்த இறக்குமதியில் 11 சதவீதம் இந்தியாவில்தான் இறக்குமதி செய்யப்படுகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் ஈராக் நாட்டில் இருந்து 5 கோடியே 30 லட்சம் டன்னும், சவுதி அரேபியாவில் இருந்து 4 கோடி டன்னும், ரஷியாவில் இருந்து 3 கோடியே 30 லட்சத்து 40 ஆயிரம் டன்னும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. பொதுவாக, சர்வதேச கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக வைத்தே கியாஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுகிறது. மாதம் ஒருமுறை உயர்த்தியோ, குறைத்தோ நிர்ணயிக்கப்பட வேண்டிய இந்த விலை 2020-ம் ஆண்டில் இருந்து அவ்வாறு நிர்ணயிக்கப்படவில்லை.
சென்னையில் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை, 2020-ம் ஆண்டு மே மாதம் ரூ.569.50 ஆகவும், கடந்த ஆண்டு மே மாதம் ரூ.1,015.50 ஆகவும், ஜூலை மாதம் ரூ.1,068 ஆகவும் இருந்துள்ளது. 8 மாதங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டர் விலையை உயர்த்தும்போது மத்திய அரசாங்கம் வங்கி கணக்குகளில் அனுப்பிவந்த மானியத்தொகையும் இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், கச்சா எண்ணெயின் சர்வதேச விலை இப்போது மிகவும் குறைந்து நேற்று பீப்பாய்க்கு 83.35 டாலர் விலையிலேயே இருந்தது. மேலும் ரஷியா பீப்பாய்க்கு 40 டாலர் விலையில்தான் விற்கிறது. சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியிருக்கும் இதேநேரத்தில், விமானங்களுக்கு போடும் உயர்ரக பெட்ரோல் விலை 4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் ஜி.எஸ்.டி. வரி வசூலில் சாதனை படைக்கப்பட்டு நல்ல வருவாய் கிடைத்துள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, கியாஸ் சிலிண்டர் விலையைக் குறைக்கவேண்டும் அல்லது முன்புபோல மானியம் வழங்கவேண்டும் என்பதே பொதுமக்களின் குறிப்பாக இல்லத்தரசிகளின் கோரிக்கையாக இருக்கிறது.